இலங்கை இராணுவத்தின் ஷெல்கள் முகமாலையை நோக்கி சென்று கொண்டிருக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஷெல்கள் முகமாலை எல்லையை கடந்து வந்து விழுந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணம் அதிர்ந்து கொண்டிருந்தது. நானும் சீலனும் எங்கள் அறைக்கு அவசர அவசரமாக திரும்பிக் கொண்டிருந்தோம். மக்கள் பெரும் பதைபதைப்புகளுடன் வீடுகளை நோக்கி விரைந்தார்கள். யாழ் நகரம் சட்டென வெளித்துப் போனது. புலிகள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பரவலான பல தாக்குதல்களை தொடங்கினார்கள். முகமாலையிலிருந்தும் கிளாலியிலிருந்தும் நாகர்கோவிலிலிருந்தும் களமுனைகளை திறந்ததுடன் மண்டைத் தீவுப் பகுதியில் தரையிறக்கம் ஒன்றையும் செய்து கொண்டார்கள். படையினர் இவற்றை முற்கூட்டியே அறிந்து வைத்தமாதிரி அவற்றை எதிர் கொண்டு தமது களங்களை திறந்து விட்டனர். யாழ் குடா நாடு அபாயம் பொருந்திய நிலமாக மாறியது.
அன்றிலிருந்துதான் ஈழத்தின் நலாம் கட்ட யுத்தம் வெளிப்படையாக மிகப் பெரிய பலிகளின் வரலாறாக நகர தொடங்கியது. மாவிலாற்றைக் கைப்பற்றிய அரசு வெற்றியின் ருசியுடன் யுத்தத்திற்காக எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. புஇராணுவம் பதில் தாக்குதல் என்று சொல்லிக் கொண்டு பாரிய யுத்தத்தை தொடங்கி வைத்தது.
நானும் சீலனும் அறைக்கு வந்து கொண்டிருந்தோம். சூரி அறையில் தனியே இருந்தான். யுத்தம் தொடங்கி விட்டது என்று பதைபதைத்தபடி வெளியில் சென்ற எங்களுக்காக பார்த்துக் கொண்டிருந்தான். நாங்கள் மூவரும் அறைக்குள் போனதும் இந்தச் செய்தியை உறவினர்களுக்கு அறிவிக்க கைத் தொலைபேசிகளை எடுத்த பொழுது தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரமும் முழுமையாக தடைப்பட்டது. ஷெல்கள் பெரு அதிர்ச்சியுடன் யாழ் நகரத்தின் மேலாக உலவிக் கொண்டிருந்தன. யாழ் நகரத்திலிருந்தும் படையினர் கடுமையான ஷெல் வீச்சை தொடங்யிருந்தனர். அதனால் காதுகளை கிழிக்குமளவு ஷெல் சத்தம் மிகுந்திருந்தது. அறையில் எந்தப் பொருட்களும் இல்லை. அன்றைய தேவைக்காக வாங்கி வந்த உணவு மட்டுமே இருந்தது. அதையும் சாப்பிடும் மன நிலை இருக்கவில்லை. யாழ்ப்பாணமே பாரிய யுத்த கமாக மாறப் போகிறது என்று பேரதிர்ச்சியாக இருந்தது. எங்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. நாங்கள் கொக்குவில் பொற்பதி வீதியில் இருக்க தர்ஷன் என்ற எங்கள் வகுப்பு நண்பன் பலாலி வீதியில் ஒரு அறையில் தங்கியிருந்தான். ஒருவரை ஒருவார் நினைத்து என்ன நடக்கிறதோ என்ற பதைபதைப்பில் பேசிக்கொண்டு இருந்தோம்.
எல்லா வானொலி அலைவரிசைகளும் துண்டிக்கப்பட்டன. யாழ் வானொலி என்ற பலாலியில் அமைந்திருக்கிற படையினரில் யாழ் எப்.எம். என்ற வானொலியில் முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிக்கையை திரும்பத் திரும்ப அந்த வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. கடுமையான இருட்டு. மெழுகு திரிகளும் இல்லை. ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவர் பெரும் பயத்துடன் படுத்துக் கிடக்கிறோம். பலாலி வீதியால் வாகனங்கள் இரையும் பாரிய சத்தங்கள் கேட்கின்றன. இரவு இரவாக தூக்கம் வரவில்லை. இலேசாக கண் தூங்கும் பொழுதெல்லாம் ஷெல்கள் அடிக்கும் சத்தம் வந்து திடுக்கிடச் செய்கின்றன. அன்றில் இருந்து யாழ் நகரம் மாபெரும் இருளில் மாபெரும் பசியில் மூடப்பட்டு துயர் நிறைந்த குடாவாக மாறத் தொடங்கியது.
புலிகள் மண்டைத்தீவுப் பகுதியில் தரரயிறங்கி தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. பாசையூர், குருநகர் பகுதிகிளிலிருந்து மக்கள் வெளியேறி யாழ்ப்பாணம் சென்மேரிஸ் ;பேராலயம், அடைக்கலமாதா கோயில், சென் பற்றிஸ் கல்லூரி, சென் சால்ஸ் கல்லூரி முதலியவற்றிலும் அல்லைப்பிட்டி சென் பிலிப்பு தேவாலயத்திலும் தஞ்சமடைந்தார்கள். அவர்கள் கடுமையான அச்சத்திலும் பீதியிலும் இருந்தார்கள். யாழ்பாணத்தை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை அனேகமான மக்கள் விரும்பிய பொழுதும் அந்த தாக்குதல் தோல்வியை கொடுத்ததால் விடுதலைப் புலிகள் தமது தளங்களுக்கு பின்வாங்கிச் சென்றார்கள். தாக்குதல்ள் வெற்றியளிக்கின்றன என்ற 'புலிகளின் குரல்' என்ற வானொலி பின்னர் சோர்வடைந்து கொண்டு போனது.
இந்த நாட்களில்; மூதூர் பகுதிக்கு விடுதலைப் புலிகள் படையெடுத்துச் சென்று தாக்குதல்களில் ஈடுபட்டபோது பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்கள் அகதிகளாகி பல்வேறு துன்பங்களைச் சுமந்தார்கள். சித்திரவதைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் புலிகள் மூதூரை விட்டு வெளியேறினார்கள். இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் சொத்தழிவுகளுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். யுத்தின் பீதி மக்களை நெருக்கங்கத் தொடங்கியது. மூதூரில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிருந்ததால் விடுதலைப் புலிகள் பலத்துடன் இருக்கிறார்கள் என்ற நிலலைப்பாடு ஒரு புறம் பரவிக் கொண்டிருந்தது. அத்தோடு திருகோணமலை கடல் தளத்திற்கும் சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் ஷெல்களை ஏவியிருந்தார்கள். பலாலி விமானத்தளத்திலும் புலிகள ஏவிய ஷெல்கள் வந்து விழுந்தன.
யாழ்ப்பாணத்தில், அல்லைப் பிட்டியிலும் மண்டை தீவு கடற்கரைப் பகுதிகளிலும் கடுமையான சண்டைகள் நடைபெற்றன. அங்கு சென் பிலிப்பு தேவாலயத்தில் தங்கியிருந்த மக்களில் 25 பேர் ஷெல் தாக்குதலில் மிகக் கோராமாக கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்தக் கோயிலில் தஞ்சமடைந்திருந்தார்கள். யுத்தம் மூளுவதற்கு முன்பாகவே அல்லைப் பிட்டியில் ஒரு குடும்பம் பரிதாபகரமாக வெட்டி கொலை செய்யப்பட் பின்னர் அந்தக் கோயிலில் மக்கள் நாள்தோறும் இரவில் ஒன்றாக தங்குவார்கள். அப்படியான பாதுகாப்பற்ற நிலையும் அச்சமான இரவுகளையும் கவனிக்கப்படாத நிலமைகளையும் அல்லைப்பிட்டி கடந்த பல வருடங்களாக கண்டு வருகிறது. யாழ் நகரத்திற்கு தூரத்தில் உள்ள தீவாக இருக்கும் இந்தப் பகுதி மக்கள் பலர் இத் தாக்குதல் தருணத்தில் அறியப்படாமல் படு கொலை செய்யப்பட்டார்கள். யுத்தம் ஓரளவு அடங்கிய பின்னர் அவர்களில் பலர் தேடப்பட்ட பொழுது காணாமல் போயிருந்தார்கள் என்று தெரிய வந்தது. இரத்தமும் சதையுமான முகத்துடன் அல்லைப்பிட்டி காணப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மீதான யுத்த முற்றுகையின் பின்னர் யாழ்ப்பணம் எதிர் கொண்ட அவலங்கள் சொல்லில் அடங்காதனவாக நினைவில் வருகின்றன. யுத்தம் தொடங்கிய மறுநாள் காலை ஊடரங்கு சட்டம் நீக்கப்படலாம் என எதிர் பார்த்திருந்தோம். வனொலியுடன் இருந்து படையினரின் யாழ் எப்.எம்மை கேட்டுக் கொண்டிருந்தோம். ஊடரங்கு தளர்த்தப்படும் அறிவித்தல் எதுவும் இல்லை. ஊடரங்கு தொடர்;ந்து அமுலில் இருக்கும் என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அறைக்கும் வீதிக்கும் இடையில் 50 மீற்றர் தூரம்தான் இருக்கும். அந்த வீதியைகூட எட்டிப் பார்க்க முடியாத நிலையிலிருந்தோம். யுத்தம் தொடங்கிய பீதியில் படைகள் சுட்டுத் தள்ளி விடுவார்கள் என்பதால் உள்ளேயே அடங்கியிருந்தோம். சாப்பாடு எதுவும் இல்லை. மதிய நேரம் ஆகியது. கொஞ்ச அருசி இருந்தது. அதைக் கழுவி அதன் தண்ணீரைக் குடித்தோம். பின்னர் அதை அவிய வைத்து வெறும் சோற்றை சாப்பிட்டோம். தொடர்ந்து கொண்டிருக்கும் ஊரடங்கில் மாற்ற மில்லை. இரவாகிறது. இரவுச் சாப்பாட்டிற்காக, பக்கத்தில் இருந்த ஒரு அம்மாதான் சில ரொட்டித் துண்டுகளை கொண்டு வந்து தந்தார். முகமாலையை நோக்கி செல்லும் ஷெல்கள் குறைந்த பாடில்லை. அந்த சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
அடுத்த நாளும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று காத்திருக்கிறோம். திடீரென இரண்டு மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று படையினர் வானொலி ஊடாக அறிவித்தார்கள். அப்பொழுது நாங்கள் மூவரும் வெளியில் புறப்பட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்தோம். மக்கள் அடைத்து வைத்து விட்டு கூடுகளை திறந்து விட்ட பொழுது வெளியில் கூட்டம் கூட்டமாக அலைந்தனர். தமக்குத் தேவையான பொருட்களுக்காக கடைகளில் வரிசைகள் இட்டு அலைந்தனர். அப்பொழுதுதான் செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 60 பேர் வரையில் கொல்லப்பட்டார்கள் என்ற பெரு அதிர்ச்சி தரும் செய்தியை அறிந்தோம். பல பல்கலைக்கழக மாணவர்களின் சகோதரர்கள் உறவினர்கள் அவர்களில் இடம் பெற்றதாக தகவல்களை கேட்டு மாணவர்கள் துடித்து அழுது கொண்டிருந்தார்கள். கைத் தொலை பேசிகள் துண்டிக்கப்பட்ட பொழுதும் சில கம்பித் தொலை பேசிகள் இயங்கிக் கொண்டிருந்தன. மாணவர்கள் முதல் மக்கள் வரை தொலைபேசி எடுப்பதற்காக பெரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். உயிருடன் இருக்கிறேன் என்பதை அறிவிக்கும் விதமாக ‘நான் நலமாக இருக்கிறேன்’ என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பதைபதைப்பு, அழுகை என்று தொலைபேசியில் துயர் வழிந்து கொண்டிருந்தது. நான் கிளிநொச்சியில் உள்ள எனது ஆசிரியருக்கு தொலைபேசி எடுத்து நான் நலமாக இருக்கிறேன் என்ற செய்தியை அம்மாவுக்கு சொல்லும்படி அறிவித்தேன். அந்த தொலைபேசிக்காக காத்துக் கொண்டு கதைத்து முடிக்கவே இரண்டு மணித்தியாலங்களும் தீர்ந்து விட்டன.
இராண்டு மணித்தியாலங்களுக்குள் எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு திரும்பியாக வேண்டும். சில மாணவர்கள் தொலைபேசி எடுக்காமல் எந்தப் பொருட்களும் வாங்காமல் அறைக்கும் விடுதிக்கும் திரும்பினார்கள். பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எல்லோரும் என்ன நடக்கப் போகிறது என்று பதைபதைத்து நின்ற பின்னர் கலைந்தார்கள். பல்கலைக்கழக வங்கி திறக்கப்பட்டபோது அதிலிருந்து பணத்தை எடுத்து வந்து கடைகளுக்கு போன பொழுது சீனி முடிந்து போயிருந்தது. அருசியும் முடிந்து போயிருந்தது. ஒருவாறு அலைந்து நூறு ருபாவுக்கு அரைக்கிலோ சீனியும் நூறு ருபாவுக்கு ஒரு கிலோ அருசியும் மட்டும் வாங்கிக்கொண்டு வந்தோம்.
நேரம் மிக விரைவாக முடிந்து போனது. மீண்டும் அறைக்குள் வந்து அடங்கினோம். வானொலியில் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வருவது பற்றிய அறிவிப்பு தொடங்கியது. மீறுபவர்கள் மீதான நடவடிக்கை ஞாபகப்படுத்தப்பட்டது. அடுத்த நாள் 15.08.2006 அதேபோல இரண்டு மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அவ்வேளையில் மீண்டும் எதாவது பொருட்களை வாங்கி வருவதற்காக நாங்கள் வெளியில் சென்றோம். மக்கள் அதே மாதிரி கூடுகளை விட்டு வெளியில் வந்து பொருட்களுக்காய் அவதிப்பட்டு அலைந்தார்கள். தொலை பேசிகளுக்காய் காத்திருந்து திரும்பினார்கள். அன்று நாங்கள் மூவரும் அறைக்கு திரும்பினோம். அன்று பலாலி வீதியில் அறையில் இருந்த நேசதர்ஷன் எங்களுடன் சேர்ந்திருப்பதற்காக எங்கள் அறைக்கு வந்தான். பலாலி வீதியால் எப்பொழுதும் ஆயுதங்களை ஏறறிச் செல்லும் கனகரக வாகனங்கள் செல்லும் சத்தத்தால் அவன் மிக பயந்து போயிருந்தான்.
அறையில் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தோம். மதிய உணவுக்காக அருசி வேகிக் கொண்டிருந்தது. எங்கள் வீதியை அண்மித்தபடி துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டு வந்தது. சீலனும் சூரியும் வெளியில் வந்து பார்த்தார்கள். நானும் என்ன நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தேன். துப்பாக்கிச் சூடு மிக அண்மித்தது. இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். அவர்களின் பின்னால் ஒரு வயது முதிர்ந்த ஐய்யா வந்து கொண்டிருந்தார். தம்பி பின்னால் வருகிறார்கள்! என்று அந்த ஐய்யா அந்த இளைஞர்களைப் பார்த்து கூறினார். பக்கத்தில் நின்ற சீலன் என்ன அண்ணன் சத்தம் கேட்கிறது என்று கேட்கிறான். அவர்களுக்கு பின்னால் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்து கொண்டிருக்க முதலில் வந்த இளைஞர்களது மோட்டர் சைக்களில் திடீரென எங்கள் வாசலில் நின்று விடுகிறது. அந்த இரண்டு இளைஞர்களும் எங்களை நோக்கி தமது துப்பாக்கிகளை திருப்பினார்கள். அதிர்ச்சிகளாலான அந்த துளி நேரத்தில் நாங்கள் திரும்பி வீட்டின் பின் பக்கமாக ஓடினோம். சன்னங்கள் சுவர்களில் மோதி விழுகின்றன. சனங்கள் எங்களை துளைத்துக் கொண்டு போவதைப் போலிருந்தன. வீட்டின் பின் பக்கத்தால் வந்து மீண்டு உள்ளே போயிருந்தோம். சன்னங்கள் எங்காவது துளைத்திருக்கிறதா என்று பார்த்தோம். யாருக்கும் எதுவுமில்லை. மூலையில் அமர்ந்து ஆள் ஆளாக பார்த்தோம் உயிருடன் இருக்கிறோம் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. நேதர்ஷனுக்கு பயத்தில் காய்ச்சலே வந்து விட்டது. முன் அறையில் இதுவரை தங்கியிருந்த நாம் அது பாதுகாப்பற்றது என்பதால் பின்னறையில் அப்பொழுது முதல் பதுங்கியிருந்தோம். வீட்டுக்கார அம்மம்மா இயல்பாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
பின்னறையில் போய் அமர்ந்து கொண்டு யார் அவர்கள்? ஏன் எங்களைச் சுட்டார்கள்? முதலில் வந்தது யார்? பிறகு வந்தது யார்? என்று கேள்விகளை மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தோம். முன்னுக்கு வந்தவர்கள் எங்களைச் சுட்ட பொழுது பின்னால் வந்தவர்கள் அவர்களைச் சுட்டார்கள் அதனால் அவர்கள் பதறியதில் அவர்களது குறி தப்பிப் போனது என்று பேசிக் கொண்டிருந்தார்கள் தர்ஷனும் சூரியும். அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. அவற்றால் சுட்டால் யார் வேண்டுமானாலும் கொலை செய்யப்படுவார்கள்.
பின்னர் வானொலியை திறந்த பொழழுது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் இடையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் அறிவித்தன. அவர்கள் யார் என்பதை அந்த வானொலி அறிவிக்கவில்லை. யாராக இருக்கும் என நெஞ்சம் அவதிப்பட்டது. பேரச்சமான நிலை ஏற்பட்டது. எமது மாணவர்களை சுட்டு விட்டு ஓடி வந்த துப்பாக்கிதாரிகளைத்தான் பின்னால் வந்த இளைஞர்கள் துரத்திக் கொண்டு வந்ததாக அந்த முதியவர் மீள வந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் எமது அறையின் முன்னால் விட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மாலை ஜன்னலை கொஞ்சமாக திறந்து பார்த்த பொழுது காணவில்லை. நாங்கள் முதலில் இருந்த அறையின் சுவர்களை கதவுகளை எல்லாம் சன்னங்கள் துளைத்திருந்தன.
அன்றிரவு மிகப்பெரிய அச்சத்துடன் வந்தது. யாரும் யாருடனும் பேசாமல் சத்தமிடாமல் மிக மௌனமாக இருக்கிறோம். மிகக் கொடிய அச்சுறுத்தல்களை கொண்டு வரும் இருளால் நிறைந்தபடி அந்த இரவு கழிந்து போனது. மறு நாள் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். காலையில் வானொலியை திறந்து ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம். தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என்ற அதே அறிவித்தல்தான் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்று ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனோம். ஊரடங்கு நேரத்திலும் உடுப்புப் பைகளை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழக விடுதிக்கு செல்ல புறப்பட்டு வீதியில் இறங்கினோம். துப்பாககிளை ஏந்தியபடி படையினர் வீதியால் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மறுபடியும் அவற்றை திருப்பிக் கொண்டு அறைக்கு திரும்பினோம். சில வேளை மாலை நேரமாய் தளர்த்தப்படலாம் என காத்திருந்தோம். தர்ஷன் காய்ச்சலால் பனடோல்களை போட்டுக் கொண்டிருந்தான். பக்கத்தில் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் கொண்டு கொஞ்சத்தை எங்களுக்கு தந்து கொண்டிருந்தார்கள். முன்பிருந்த அதே அச்சங்களுடன் அந்த இரவும் கழிந்து போனது.
மறுநாள் பல்கலைக்கழகத்திற்கு சென்றோம். அந்த மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் குருதி கொட்டி காயாமல் கிடந்த அதே தெருவால் நாங்கள் சென்றோம். பல்கலைக்கழகத்திற்கு சென்ற பொழுதுதான் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் யார் என்று தெரிய முடிந்தது. எட்வேட் அருள் என்ற எமது வருட மாணவன் பெரும் சோகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான். விடுதியில் உணவில்லை. உணவகக்காரர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். பசியில் இருந்த பொழுது மாணவர்களுக்கு கஞ்சி காயச்சி கொடுத்து விட்டு அந்த மாணவர்கள் மேலதிக தேவைக்ககாக பிஸ்கட்டுக்களை வாங்குவதற்காகவே வெளியில் சென்றார்கள். அவர்கள் வெளியே சென்று சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சுடுகள் நடைபெற்றன. அவர்கள் திரும்பவில்லை. அவர்கள்தான் கொல்லப்பட்டனர் என்பதை பிறகுதான் அறிந்தோம் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். விஞ்ஞானபீடத்தை சேர்ந்த சின்னையா சிவசங்கரும் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்நத கிருஷ்ணமுர்த்தி பிரதீபனும் இப்படி சுட்டுப் படு கொலை செய்யப்பட்டார்கள்.
விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அறைக்கு வந்தோம். தேவையான கொஞ்ச உடுப்புக்களை எடுத்துக் கொண்டு ஏனைய உடுப்புக்களை கட்டி வைத்து விட்டு விரைவாக விடுதிக்கு திரும்பினோம். விடுதி ஒரு அகதிமுகாம் போலத்தானிருந்தது. அங்கு இரவில் கால்வாசி பேணி கஞ்சிதான் உணவாக பகிரப்பட்டது. மாணவர்கள் யுத்த காலத்தின் அகதிகளாகி உணவுத் தட்டுக்களுடனும் தேனீர் கோப்பைகளுடனும் வரிசையில் நின்றார்கள். உணவுத் தட்டுக்களும் தேனீர் போப்பைகளும் இல்லாமலும் இன்னும் பல மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் நாங்களும் இணைந்து கொண்டோம். சிலவேளை இரவு உணவு சாப்பிட முடியத நிலை ஏற்பட்டது. அறையில வெளியில் தங்கியிருந்த முழு மாணவர்களும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட 600 மாணவர்கள் வரை ஆண்கள் விடுதியில் தங்கியிருக்க பெண்கள் விடுதியில் அதற்கும் கூடுதலான மாணவிகள் தங்கியிருந்தார்கள். எந்த வசதிகளும் இல்லாத கொடுமையான முகாம் எல்லது சிறைச்சாலையாக அந்த விடுதிகள் மாறிப் போனது. அது ஒரு மாபெரும் சிறைச்சாலை என்பதை நாங்கள் விடுதிக்கு வந்த மறுநாள் ஏற்பட்ட பயங்கரமான நிகழ்வின் பொழுதுதான் அறிய முடிந்தது.
அன்று காலையும் கால்வாசிப் பேணிக் கஞ்சியை குடித்து விட்டு விடுதிக்குள் அடங்கியிருந்தோம். மாணவர்களது கொலையின் பின்னர் மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று விடுதி காப்பாளர் சொல்லியிருந்தார். அதனால் அறைக்குள் இருந்து கொண்டிருக்கும் பொழுது வெளியாக தெருவில் நடமாடிக் கொண்டிருந்த இராணுவத்தினர் விடுதிக்குள் திடீரென நுழைந்தார்கள். நான் ஜன்னலால் பார்க்கிறேன் எனது அறையை தாண்டிக் கொண்டு படையினர் நிரை நிரையாக விடுதிக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். விடுதியின் அறைகளுக்குள் நுழைந்து தங்கள் சோதனை நடவடிக்கைகளை தொடங்கினார்கள். புத்தகங்கள் அடுக்கப்பட் அலுமாரிகளை திறந்து அவற்றை வெளியில் எடுத்துப் போட்டு பார்த்தார்கள். கட்டிலை திருப்பிப் பார்த்தார்கள். கதவை தட்டிப் பார்த்தார்கள். உடுப்புக்களை கிளறி எறிந்து பார்க்கிறார்கள். அறைகளுக்கு மேலால் திரிந்து பெரிய ‘டோச் லைட்டுக்களை’ அடித்தபடி பார்த்து ஏறி இறங்கினார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. யாரும் யாருடனும் பேச முடியவில்லை. ஒவ்வொருவரும் நின்ற நின்ற இடங்களிலேயே படைகளின் கண்காணிப்பில் சிறைப்பட்டோம். எல்லோரது முகங்களும் இறுகிப் போய்விட்டன. கீழ் அறையில் இருந்து அடுத்த கட்டிடத்தில் உள்ள மேல் மாடியில் உள்ள பொது அறைக்கு சீலனும் சூரியும் சென்றிருந்தார்கள். என்னை கைகளை உயர்த்தும்படி கூறிவிட்டு உடல் சோதனை இட்டார்கள். பின்னர் பல்கலைக்கழக அடையாள அட்டையையும் ஆள் அடையாள அட்டையையும் கொண்டு மாணவர் பொது அறைக்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள்.
நாங்கள் வரிசையாக குற்றவாளிகளைப் போல கைதிகளைப்போல செல்லுகிறோம். பொது அறைக்கு எல்லா மாணவர்களும் வரிசையாக அழைத்துக் கொண்டு வரப்பட்டு இருத்தப்பட்டிருக்கிறார்கள். கைதிகளைப் போல குற்றம் இழைத்தவர்களைப்போல வேற்று நாட்டவர்களாக எங்களை படையினர் நடத்தத் தொடங்கினார்கள். கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், எழுச்சிகள் எல்லாவற்றுக்காகவும் பழி வாங்கும் நோக்கில் படையினர் அவ மரியாதை செய்யும் விதமாக நடந்ததுடன் மாணவர்களை இணங்காணவும் தேடவும் தொடங்கினார்கள். மாணவர்கள் அனைவரும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டனர். பெயர், முகவரி சொல்லப்பட்டு வீடியோவில் பதிவு செய்யப்பட்டார்கள். தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டு பொதுவாக ஒரு இடத்தில் இருத்தப்பட்டார்கள். எமது மாணவர்கள் குரலற்று அடங்கிப் போயிருந்தார்கள். அங்கு யாழ் மாவட்ட சிவில் அதிகாரி வந்தார். எங்களை இப்பொழுதுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியில் அனுப்ப முடியாது என்று சொன்னார். மாணவர்கள் அனைவரும் ஒருமிதத் குரலில் எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டார்கள்.
பொங்குதமிழ் நடத்தியது பற்றியும் படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை பற்றியும் அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகளுடன் செயற்படுவது பற்றியும் படையினர் ஞாபகப்படுத்தினார்கள். பல மாணவர்கள் அவைகளுக்காக தனியான அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மிரட்டங்கள், அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் நடந்த அந்த சோதனை நடவடிக்கையின் பொழுது மிகப் பெரும் சத்தம் இடுகிற முகங்களுக்கு கறுப்பு முகமூடிகளை அணிந்திருப்பவர்களால் ஓட்டப்படும் ‘பீல்பைக்’ எனப்படும் அதிவேக இராணுவ மோட்டார் சைக்கிள்கள் விடுதிக்குள் எங்களைச் சுற்றி உறுமியபடி அலைந்து கொண்டிருந்தன. மாணவர்கள் எல்லாவற்றையும் பெரு அச்சங்களுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். அன்றைய நாள் முழுக்க நாங்கள் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் தீவிர கண்காணிப்பில் அவர்களது கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோம். யாரும் எதையும் சக மாணவர்களுடன் பேசாது மீள அறைகளுக்குச் சென்றோம். யாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் இறுதிவரை பகிரவில்லை.
பசியும் இருளும் எவ்வளவு கொடுமையானது என்பதை இந்த நாட்களில் மேலும் அனுபவிக்க நேர்ந்தது. இரவானால் இருள் குவிந்து விடும். பகல்களில் வெளியில் செல்ல முடியாது. தண்ணீர் வருவதற்கு மின்சாரம் இல்லை. இருக்கும் ஒரு குழாய்க் கிணற்றில்தான் அத்தனை மாணவர்களும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் எடுக்க வேண்டும். சாப்பாடு இல்லாமல் பசி தொடருகிறது. சில நாட்களில் அருசி காய்கறிகளை போட்டு சோறு சமைப்பார்கள். சில வேளைகளில் அதுவும் இல்லாமல் பசியுடன் இருப்போம். தெருக்கள் பேரச்சத்துடன் விரிகின்றன. அப்பொழுது முழுக்க முழுக்க வசதிகள் அற்ற நிலையில் அச்சத்தின் அச்சுறுத்தலின் பேராபத்தான நிலமையில் இங்கும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அன்றைய யாழ் நகரத்தை சாம்பல் நகரம் என்று நண்பன் ஹரிகரசர்மா எழுதியிருந்தான். மரணம் பரவிக்கிடக்கும் வீதிகள் என்று எழுதியிருந்தான். அறியப்படாத கொலைகளை துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்கள். சந்தைக்கு சென்றவர், வேலைக்கு அலுவலகம் நோக்கிச் சென்றவர் தலையால் குருதி கசிந்தபடி கொல்லப்பட்டுக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் எட்டுப்பேர், பத்துப் பேர் என கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணம் ஒரு கொலை செய்யப்பட்ட நகரமாகிப் போய்விட தெருக்களில் பிணங்கள்தான் வீசப்பட்டுக் கிடந்தன. இராணுவ ஆட்சிக்குள் அறியப்படாத கொலைகளால் யாழ் மக்கள் எல்லோருமே பீதியில் இருந்தார்கள். ஏன் கொலை செய்யப்படுகிறோம்? யாரால் கொலை செய்யப்படுகிறோம்? ஏதற்காக கொலை செய்யப்படுகிறோம் என்று தெரியாமலும் பலர் கொலை செய்யப்பட்டார்கள். நிச்சயமற்ற மரணமும் குருதியும் நிறைந்த வாழ்வை அப்படி உலகத்தில் எந்த மக்களும் எதிர் கொண்டிருக்க மாட்டார்கள். வீதியால் செல்லும் பொழுது எந்த நேரத்திலும் மரணம் நிகழலாம் என்ற ஆபத்தும் தவிர்க்க முடியாததுமான நிலலையைத்தான் யாழ் மக்கள் அனுபவித்தார்கள். சவப்பெட்டிக்குள் கிடந்து கொண்டு பயணம் செய்யும் ஒரு நிலையைத்தான் சனங்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் தாள்களின் தட்டுப்பாட்டால் பத்திரிகைகள் தடைபடத் தொடங்கின. ஆனாலும் ஒற்றைத் தாளுடன் இரண்டு பக்கங்களுடன் பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. அச்சுறுத்தல் ஆபத்து என்ற சூழ்நிலைகளிலும் யாழ்ப்பாணத்தில் உதயன், வலம்புரி, தினக்குரல் என்ற பத்திரிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. குறிப்பிட்ட இந்த நேரங்களுக்குள் நகர்ந்த யாழ்ப்பாண வாழ்வில் மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தது. இரண்டு மணித்தியாலம், மூன்று மணித்தியாலம் என்று பின்னர் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
சூரியும் சீலனும் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று எனக்கு சொல்லியிருந்தார்கள். உள்ளே அடங்கி இருக்க மிக கஷ்டமாக இருந்தது. பசியும் வயிற்றை கிள்ளியது. யாழ் நகரத்தில் கொத்து ரொட்டிக் கடை ஒன்று திறந்திருபப்தாக யாரோ சொன்ன ஞாபகம் வந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரத்திற்கு புறப்பட்டேன். வழியில் சிவராசா, இளஞ்சிங்கம் என்ற என்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் யாழ் நகரம் பதற்றமாக இருக்கிறது எங்கே போகிறாய் விரைவாக வந்து விடு என்று சொல்லிக் கொண்டு சென்றார்கள். சரி எனத் தலையாட்டிக் கொண்டு பயத்துடன் சுற்றி வர அடிக்கடி பார்த்துக் கொண்டு நகரத்தை நேர்ககிச் சென்றேன்.
அப்பொழுது, நேரம் மூன்று மணியாகியிருந்தது. நகரத்தில் யாரும் இல்லை. அது வெளித்து மயான அமைதியுடன் இருந்தது. எப்படி இருந்த யாழ் நகரம் இன்று அதன் மக்கள் வருவதற்கு அஞ்சியுள்ளபடி பயன்பாடற்று மூடப்பட்டிருக்கிறது. அங்காங்கே சில கடைகள் கொஞ்சப் பொருட்களுடன் திறந்திருக்கின்றன. அதையும் மூடிவிட்டு வீடுகளுக்கு திரும்ப அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நான் அந்தக் கொத்துரொட்டிக் கடையடிக்கு சென்றேன். கறுப்புத் துணிகளால் வாயினை மூடிக் கட்டிய படையினர் நகரத்தின் தெருவெங்கும் குவிந்து நிற்கின்றனர். யாருடைய முகங்களையும் தெருவையும் பார்க்காமல் கடைக்குள் நுழைந்தேன். ஒரு கிண்ணம் கொத்துக்கு சொல்லி விட்டு கதிரையில் அமர்ந்திருந்தேன். மெல்ல வீதியின் பக்கமாக முகத்தை திருப்பிய பொழுது யாரே சுட்டுக் கொல்லப்பட்டு தெருவில் கிடக்க வெள்ளைத் துணியால்; மூடப்பட்டிருந்தது. படைகள் அந்தப் பிணத்தை சுற்றி காவல் காத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.