| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Tuesday, October 27, 2009

கனவின் எழுச்சி மிகுந்த நாட்கள்

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது.


கனவின் எழுச்சி மிகுந்த நாட்கள்

ஸ்கந்தபுரம் முற்றிலும் புதிய இடமாக இருந்தது. கிளிநொச்சி நகரம் துண்டு துண்டாக உடைந்து ஸ்கந்தபுரத்திலும் அக்கராயனிலும் மல்லாவியிலும் புதுக்குடியிருப்பிலும் முழங்காவிலும் என்று பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருந்தது. நாங்கள் ஸ்கந்தபுரம் முருகன் கோயிலில் தங்கியிருந்தோம். அந்தப் பகுதிகள் முழுக்க தரப்பால்களாலும் அகதிகளாலும் நிரம்பியிருந்தது. கோயிலில் தூண்களைச் சுற்றியும் மூலைகளிலும், வெளியில் தாழ்வாரங்களிலும் மரங்களின் கீழாகவும் அகதிகள் நிரம்பியிருந்தனர். எந்த அடிப்படையுமற்ற வாழ்க்கை வறுமை நோய் என்று பெருந்துயரங்கள் பீடித்தன. கோயிலுக்குள் இடமில்லாததினால் பக்கத்தலிருந்து காட்டு ‘ஜாம்’ மரத்தின் கீழ் அம்மாவின் பழைய சீலையை சுற்றிக் கட்டி விட்டு அதற்குள் இருந்தோம். தங்கச்சி குழந்தை, நான் பன்னிரண்டு வயதுச் சிறுவன் எங்களை வளர்ப்பதற்காக அம்மா பக்கத்தலிருந்த வீடு ஒன்றில் வேலைக்குச் சென்றார்.

மலசலம் கழிக்க பெரிய சிரமங்களை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள் சனங்கள். கோயிலைச் சுற்றி நடக்கும் பொழுது எங்கும் மலங்கள் மிதிபட்டுக்கொண்டிருந்தன. ஸ்கந்தபுரம் பகுதியில் குளிப்பதற்காக, கழிவுகள் எறியப்படும் வாய்க்கால் ஒன்றே இருந்தது. ஸ்கந்தபுரம் சிறு நகர சந்தியின் கீழாக அது பாய்ந்து கொண்டிருக்கும். எனக்கு முதலில் செங்கமாரி என்ற நோய் பீடித்தது. அந்த நோய் வருகிறபோது வெம்மையற்ற குளிர்ந்த சூழலில் வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு வருத்தம் வந்து விட்டதால் கோயிலினுள் என்னை தங்க வைத்தார்கள். பிறகு அம்மா தங்கச்சி என்று எல்லோருமே நோயால் பீடிக்கப்பட்டார்கள். குளிப்பது தூங்குவது எல்லாமே நிம்மதியற்ற பொழுதுகளாக போய்க்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்கள் அந்தக் கோயிலுனுள் வாழ்வு போய்க்கொண்டிருந்தது. கிளிநொச்சியை இராணுவம் முழுமையான பிடிக்குள் வைத்திருந்ததுடன் கிளிநொச்சியை தாண்டி இராணுவ நடவடிக்கைகளை அரசு தொடங்கியது.

கோயில்கள் பள்ளிக்கூடங்களில் இருந்த சனங்கள் அக்கராயன் மணியங்குளம் வன்னோரி ஆனைவிழுந்தான் முக்கொம்பான் ஜெயபுரம் முழங்காவில் மல்லாவி துணுக்காய் பாலிநகர் மன்னார் என்று, சனமற்ற காடுகளை வெட்டி தஞ்சமடைந்தார்கள்;. இப்படி கிளிநொச்சிக்கு வடக்குப்பக்கமாக தஞ்சமடைந்திருக்க தெற்குப்பக்கமாகவும் அகதிகள் பரந்து இருந்தனர். புதுக்கடியிருப்பு, முல்லைத்தீவு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற பகுதிகளிலும் இப்படித்தான் பரந்திருந்தார்கள். வன்னி நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. வடக்கும் பக்கமாகவும் மேற்பக்கமாகவும் மக்கள் ஒதுங்கியிருந்தனர். ஏ-9 வீதியை இலக்கு வைத்தே இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கிளிநொச்சியிலிருந்து முன்னேறி திருவையாறு வரை இராணுவம் நிலைகொண்டிருந்தது. உதயநகர், இரத்தினபுரம், ஆனந்தபுரம் போன்ற பகுதிகளில் இராணுவத்தின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. அந்தப் பகுதிகளுக்கு சிலர் தமது வீடுகளுக்கும் சிலர் ஆளில்லாத வீடுகளின் பொருட்களை எடுப்பதற்கும் சென்று இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்னர். அப்படி கொலை செய்யப்பட்டவர்களை இராணுவம் மலக்குழிகளில் போட்டு மூடி விட்டிருந்தது. உருத்திரபுரம் என்ற இடத்தில் இப்படி வெட்டி மலக்குழியில் போடப்பட்டவர் உயிருடன் இருந்து சில நாட்களின் பின் மலக்குழியின் மூடியை விலக்கி வெளியில் வந்து, தப்பி வந்திருந்தார். ஒரு முறை எங்கள் கிராமத்தலிருந்த ‘கிளியன்’ என்பவரை அவரது சிறு மகனின் முன்னால் தலையை வெட்டி கொன்ற இராணுவம் அந்த சிறுவனை திருப்பி அனுப்பியிருந்தது.

இரணைமடுச் சந்தியின் வாயிலாகவே வடக்கு மேற்கு பயணத் தொடர்பு இடம்பெற்றது. இரணைமடு துருசு கிட்டத்தட்ட இரண்டறையடி அகலமான துருசால்தான்; மக்கள் நடந்து சென்று துருசு நோக்கி வருகிற பேரூந்துகளில் திரும்புவார்கள். அந்தக்காலத்தில் ஷெல் தாக்குதல்கள் நடக்கலாம் இராணுவ முற்றுகைகள் வழிமறிப்புக்கள் நடக்கலாம் என்பதற்காக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுpக்கு மிக நீண்ட காலமாக செல்லாதவர்கள் இருக்கிறார்கள்.

இராணுவம் மக்களை அண்மித்துதான் நின்றிருந்தது. அப்பொழுது மக்கள் எவரும் இராணுவத்திடம் சரணடைந்தது கிடையாது. இராணுவம் சனங்களது குடியிருப்புகள்மீது செல்களை எதிர்பாராமல் எறிந்து கொண்டிருக்கும். மல்லாவி, அக்கராயன், ஸ்கந்தபுரம் போன்ற சனச் செறிவான பகுதிகளை இராணுவம் இலக்கு வைத்து ஷெல்களை எறிந்திருக்கிறது. பொருளாhரத்தடை, உணவுத்தடை, மருந்துத்தடை என பல்வேறு தடைகளை நிகழ்த்தி ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் வன்னிச் சனங்களையும் இலங்கை அரசு அடக்கிக்கொண்டிருந்தது. மண்ணையும் ஆக்கிரமித்து சனங்களை அழிக்கவே இராணுவம் படையெடுத்து வருவதாகவும் அரசு யுத்தத்தை நடத்துவதாகவும் சனங்கள் கருதினார்கள்..

எங்களை அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் என்ற அமைப்பு மணியங்குளத்தில் காட்டை வெட்டி குடியிருத்தியது. எங்களுடன் முதலில் அறுநூறு குடும்பங்களும் ஆயிரம் குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டன. புதிய குடியிருப்பு, பழைய குடியிருப்பு, விநாயகர்குடியிருப்பு என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டன. அங்கயற்கண்ணி குடியருப்பு, காந்தரூபன் குடியிருப்பு போன்று மாவீரர்களது பெயர்களிலும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. மணியங்குளம் என்ற கிராமத்தில் குளத்திற்குப் பக்கத்தலிருக்கிற காட்டை வெட்டி நாங்கள் குடியமர்த்தப்பட்டோம். குளத்தின் கீழாக ஒரு பக்கத்தில் மக்கள் முன்பே குடியிருந்தனர். அதன் மறுபக்கத்தில் இந்த புதிய குடியிருப்பு ஏற்றப்பட்டது. மிகப்பெரிய காடாக இருந்ததால் பெரிய மரங்கள் எங்கும் நிறைந்து நின்றன. கால் வைக்க முடியதபடி கிணியா மரத்தின் அடிக் கட்டைகள் இருந்தன. அவற்றுக்கால் மெல்ல பாதையை எடுத்துக்கொண்டு வழங்ககப்பட்ட குடிசைக்கு சென்றோம். சிறியளவிலான குடிசை வேயப்பட்டிருந்தது. முருகன் கோயிலடியில் வெயிலிம் மழையிலும் நனைநது கொண்டிருந்தோம். மழைவரும்போது மரத்தின் கீழ் இருந்து பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடிச் சென்று கோயிலுக்குள் இருப்பதும் மழைவிட மரத்திற்கு கீழே திரும்புவதுமாகத்தான் இருந்தது வாழ்வு. சுவரற்ற அந்த வீட்டை பார்க்கும்பொழுது நிம்மதியாக இருந்தது. அமரவும் தூங்கவும் ஒரு கூரையுள்ள இடம் கிடைத்த ஆறுதல் ஏற்பட்டது. கொஞ்ச நாளிலேயே அந்த வீட்டுக்கு நாங்கள் குடி வந்துவிட்டோம்.

அங்கு முற்றிலும் புதிய மனிதர்கள். யாழ்ப்பாணம். பரந்தன், ஆனையிறவு, இயக்கச்சி எனப் பல இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வந்து குடியமர்ந்தார்கள். வெட்டி பரப்பட்ட அந்த காட்டை அகற்றி மரத்தின் அடிக் கட்டைகளை கிழப்பி அது ஒரு கிராமமாக மாறிக்கொண்டிருந்தது. சாம்பலும், குவித்து விடப்பட்ட வேர்களும், தறிக்கப்படுகிற மரங்களுமாகவும், எப்பொழுதும் மரம் தறிக்கும் சத்தமும் காடு எரியும் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் அம்மா வேலைக்கு போக நானும் சிறுவனாக இருந்தபடியால் சின்னக் கட்டைகளை சுத்தி மண்ணை கிழறி அவற்றை பிடுங்கி எரித்துக்கொண்டிருப்பேன். வேலி அடைத்து வீதிகளை அழகாக்கி வாழை மரங்களை வைத்தார்கள் அங்கிருந்த சனங்கள். பூஞ்செடிகள், பயன்தருகிற மரங்கள் என்று கிராமம் குளிர்ச்சியாக மாறிக்கொண்டிருந்தது. குளம் மேலாக இருப்பதனாலும் காட்டு மண் என்பதனாலும் எல்லாம் விளைகிற நிலமாக மணியங்குளம் இருந்தது.

நாங்கள் கிணறும் வெட்வில்லை. வேலியும் அடைக்கவில்லை. காட்டு மரங்களின் அடிக் கட்டைகளையும் பிடுங்கவில்லை. அவை மீணடும் துளிர் விட்டுக் கொண்டிருந்தன. எங்கள் காணியில் மட்டுமே பெரு மரங்கள் நிறைந்து நின்றன. அம்மா வேலைக்குப் போக நான் தங்கச்சியைப் பார்த்துக்கொள்ளுவேன். இப்படி கொஞ்ச நாட்கள் கழிந்ததும் தங்கச்சியை முதலாம் வகுப்பில் பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டு நானும் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கினேன். நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லுரி அக்கராயன் மகா வித்தியாலயத்துடன் சேர்ந்து இயங்கிவிட்டு பிறகு, பிரத்யேகமாக பக்கத்தில் உள்ள காணியில் கொட்டில் ஒன்றில் இயங்கியது. அதன் மற்றொரு பக்கத்தில் கிளிநொச்சிக் குளத்தடியில் அமைந்திருந்த கிளிநொச்சி மகா வித்தியாலயம் இயங்கிக்கொண்டிருந்தது.

எனது பள்ளிக்கூடத்திலே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும் அது எட்டு கிலோமீற்றர் தொலைவில் இருந்தபடியால் பக்கத்திலிருந்த உருத்திரபுரம் மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் சேர்ந்து கொண்டேன். அந்தப் பாடசாலை கிளிநொச்சி உருத்திரபுரத்தலிருந்து இடம்பெயர்ந்து மணியங்குளத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பாடசாலை இயங்கிய ஸ்கந்தபுரம் இரண்டாவது அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சூற்றி கனகாம்பிக்கைக்குளம் பாடசாலை, கனகபுரம் பாடசாலை, சிவநகர் பாடசாலை என்று இடம்பெயர்ந்த பாடசாலைகள் இயங்கின. சிறிய இடத்தில் பெருந் தொகையான மாணவர்கள் படித்தார்கள். நெரிசலுடன் நெருக்கடியுடன் பாடசாலைகள் நடந்து கொண்டிருந்தன.

கிளிநொச்சிக்கு நாங்கள் திரும்ப மாட்டோம் என்ற நிலைதான் அப்பொழுது எங்களுக்கு இருந்தது. காணி அப்படியே இருக்கிறது. நான் பாடசாலை முடிந்து வந்ததும் காணியை கொஞ்சம் கொஞ்சமாக துப்பரவாக்கத்தொடங்கினேன். இரவாக இராவாக கட்டைகளை பிடிங்கி எரித்து கால் ஏக்கரில் பாதிக்காணி வரை துப்பரவாக்கி விட்டேன். சுவரோ தடுப்போ இல்லாமல் வீடு திறந்து கிடந்தது. தடிகளை நட்டு துணிகளாலும் கிடுகாலும் சாக்காலும் சுற்றி கட்;டினேன்.. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து சுவரை வைக்கத் தொடங்கினேன். பாடசாலை விட்டு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுவரை வைத்து ஒருவாறு முக்கால்வாசிக்கு சுவரை வைத்து முடித்தேன். தடிகளை நட்டு கையால் மண்ணை குழைத்து உருண்டையாக்கியும், கற்களை அரிந்தும் கட்டினேன். சின்னதாக வட்டமாக கிணற்றையும் வெட்டினேன். உள்ளே இறங்கி நானே வெட்டி மேலே போடுவதும் கொஞ்சம் ஆளமாக கிழே இறங்கி வெட்டிப் போட்டு விட்டு மேலே வந்து அதனை இழுத்துப் போடுவதுமாக கிணறும் வெட்டப்பட்டது. குளம் அருகிலிருப்பதால் ஆறடி ஏழடி கடைசி பத்தடியில் அந்தப் பகுதியில் தண்ணீர் ஊறி விடும்.

நானும் வாழைக் குட்டிகளை வாங்கியும் தெருவில் எறியப்பட்ட கிழங்குகளை கொண்டு வந்து வைத்தும் வாழைத் தோட்டங்களை உருவாக்கினேன். சோளம், கச்சான், பயிற்றை, கத்தரி, பூசனி என பயன்தரு மரங்கள் வளர்ந்து காணி சோலையாகியது. அந்த மரங்கள் பசியை ஆற்ற உதவியதுடன் அதனை விற்று ஏனைய செலவுகளை செய்யவும் உதவின. பசியால் பாலைப் பழங்களையும் வீரப்பழங்களையும் சாப்பிட நேர்ந்த எமக்கு அவை ஆறுதலளித்தன. இப்படித்தான் கிராமம் எங்கும் சனங்கள் தங்கள் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள். விவசாய நிறுவனங்கள், என்ஜியோக்கள் பயன்தரு மரக் கன்றுகளையும், விதைகளையும் தந்தார்கள். மணியங்குளம் கிராமத்தைப்போல அகதிகள் தஞ்சடைந்திருந்த பெரும்பாலான பதிகுகளில் இப்படித்தான் நிலமையிருந்தது.

ஆனால் சன நெருக்கமான தெருக்களின் கரைகளில். பாடசாலைகளில், முகாங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து நெருககடிகளை அனுபவித்தார்கள். அக்கராயன் பாடசாலைக்கு பக்கத்தில் பெரிய அகதிமுகாம் இருந்தது. அக்கராயன் மேட்டுப்பகுதியாக இருந்ததால் தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஸ்கந்தபுரம், எட்டாங்கட்டை, ஜெயபுரம் போன்ற பலபகுதிகளில் இப்படி வறட்சி நிலவியது. கடுமையான சனநெருக்கடியால அக்கரான் பாடசாலையடி, அம்பலப்பெருமாள் சந்தி, அக்காரன் வைத்தியசாலையடி, அக்கராயன் பிள்ளையார் கோயிலடி போன்ற பல இடங்கள் அகதிகள் நிரம்பிய தெருக்கரைகளாக இருந்தன. வீதிகளில் விபத்துக்கள் நிகழுவதும் நெரிசலும் காணப்பட்டன. அப்பொழுது எனக்கு புதுக்குடியிருப்பு, முல்லைத்திவு விசுவமடு போன்ற இடங்களில் நிலமை எப்படி இருந்தது என்று தெரியாதிருந்து. இதே மாதிரியான நெருக்கடிகள் அங்கு இருந்திருக்கும் என்பத மட்டும் புரிய முடிகிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தலிருந்தவர்கள், சில சொந்தக்காரர்கள் அங்குதான் இருந்தார்கள். ஆபத்தான பயணம் என்பதால் போக்குவரத்து அதிகம் இடம்பெறாததால் அவர்கள் வேறுநாட்டில் வாழ்வதைப்போல எங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடிதப் போக்குவரத்திருந்தது.

அக்கராயன் வைத்தியசாலை நோய்வாய்பட்ட சனங்களால் எப்பொழுதும் நிரம்பியிருந்தது. கிளிநொச்சி வைத்தியசாலை இ;டம்பெயர்ந்து அக்கராயன் வைத்தியசாலையில் இயங்கியது. ஆனால் பெரியளவிலான மருத்துவ வசிதிகள் கிடையாது. மல்லாவி வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எனச் சில வைத்தியசாலைகளும்; இதே நிலையில்தான் இருந்தன. அவசர சிகிச்சை தேவைப்படுகிற நோயாளர்கள் கொண்டு செல்லுவதற்கான வழிகள் இல்லாமல் இருந்தன. அப்பொழுது மிக நீண்ட காலமாக பெரியமடுவில் ஒரு இராணுவத்தினரதும் புலிகளதும் ஆபாக்குவரத்துக்கான சோதனைச் சாவடி இருந்தது. தொடக்கத்தில் ஆபத்து கொண்ட வழியாக இருந்தது. நோயாளர்கள்கூட கடக்க முடியாத நிலையில் இருந்து பிறகு பயணிகள் கடக்கக்கூடிய நிலையை அடைந்தது. அக்கராயன் வைத்திசாலையில் நோயர்கள் அங்கும் இங்கும் மிதிபட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு முறை தங்கச்சிக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. அம்மா களை பறிக்கிற வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவளை தூக்கிக்கொண்டு நான்தான் வைத்தியசாலைக்கு செனறேன். பேரூந்து வசதிகள் மிகக் குறைவு என்றபோதும் அதற்கும் வசியற்ற நிலையே எங்களுக்கு இருந்தது. ஆனால் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைத்திய பிரிவு அந்த வைத்தியசாலையில் பிரதயேகமாக இருந்தது. நிறைய சனங்கள் வரிசையில் காத்திருந்தார்கள். எல்லாக் குழந்தைகளும் நோயால் அவதியுற்றுக்கொண்டிருந்தன. தங்கச்சியோ காய்ச்சலால் துடித்துக்கொண்டிருக்கிறாள். நேரம் ஆக ஆக மயங்கத் தொடங்கினாள். எனனால் அதை தாங்க முடியவில்லை. எனக்கு பெரிய பயம் ஏற்படத் தொடங்கியது. தங்ச்சிக்கு எதாவது ஆகிவிடுவோ என்ற அதிர்hச்சியால் ஓ..வென அழத் தொடங்கிவிட்டேன். எல்லாரது கவனமும் எனது பக்கம் திரும்ப தங்கச்சியை மருத்துவர் ஓடி வந்து கொண்டு சென்றார். அக்கராயன் வைத்திசாலையில் அடிக்கடி நோயால் மருத்து எடுக்கச் சென்றிருக்கிறேன். தங்கச்சியைக் கூட்டிச் சென்றிருக்கிறேன். அந்த வைத்திசாலை பலரது உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. அத்துடன் வசதியற்றபடியால் மருத்துவம் தோல்வியில் முடிவடைந்து மரணங்கள் அதிகமாக நடந்துகொண்டிருந்தன. அதை இலக்கு வைத்து இராணுவம் செல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தது. இப்படி மக்கள் மெல்ல மெல்ல துயரங்களையும் நெருக்கடிகளையும் அனுபவித்துக்கொண்டிருக்க ஏ-9 வீதியை பிடித்து கைகுலுக்கும் கனவுடன் இராணுவம் மேலும் யுத்தத்தை தீவிரப்படுத்தியது. யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையில் தான் பயணம் நடத்த வேண்டும் என்பதில் ; ஜனாதிபதி சந்திரிகா உறுதியாக இருந்தார். புலிகளை அழித்து சமாதானத்தை ஏற்படுத்த என அவர் யாழ்ப்பாணத்தில் கோயில்கள், பள்ளி;க்கூடங்கள், மரநிழல்கள் என குண்டுகளை பொழிந்து மக்களை பெருமெடுப்பில் பலியெடுத்தவர். யாழ்ப்பாணத்து ஆறுலட்டசம் மக்களையும் புலிகள் தம்முடன் வன்னிக்கு நகர்த்தியபோது அனுபவித்த துயரங்கள் தமிழ் மக்களால் மறக்க முடியாதது. போர் வரலாற்றில் மறக்க முடியாத கொடுமையான இடப்பெயர்வாகவே அது நிகழ்ந்தது. சமாதானத்தை சூழ்ச்சியின் கோரமாக மாற்றி தமிழ் மக்களை ஏமாற்றி பெருந்துயரத்தை ; ஜனாதிபதி சந்திரிகா ஏற்படு;த்தினார். யாழ்ப்பாணத்தில் சந்திரிகா தொடக்கிய யுத்தம் வன்னிக் காடுகளில் மூண்டு தீவிரமாகிக் கொண்டிருந்தது.

யுத்தம் எப்பொழுதும் இரண்டு தரப்பையும் அழித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் குடியிருப்பில் நாளும் பொழுதுமாக போராளிகளது வீர மரணங்கள் நடைபெற்றன. அவர்களது வித்துடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளும் அறிவப்புக்களும் சவப்பெட்டியற்ற மரணங்களும் என தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எங்காவது ஒரு குடிசையில்; சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டிருக்கும். இராணுவமும் பெரியளவில் உயிரிழைப்பை சந்தித்துக்கொண்டிருந்தது. போர் போரிடுகிற இரண்டு தரப்பினரதும் உயிரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது. அது அடிப்படையில் மனிதாபிமானமற்றது. பின்னால் ஒட்டுமொத்த சனங்களின் உயிரையும் தின்றுகொண்டிருக்கிறது. வடக்கு கிழக்கிலும், தெற்கிலும் மரணங்கள்தான் நடத்தப்பட்டன. ஆனால் சந்திரிகா அரசு தமிழ் மக்கள்மீது கொடுமையான அழிப்புப்போரை நடத்திக்கொண்டிருந்தது. தமிழ்மக்களை அகற்றி விடுதலைப் புலிகளை ஒடுக்கி வரலாற்றுச் சாதனையை தான் புரிய வேண்டும் என்று விரும்பி உலகத்தின் ஆசியுடன் போரை நடத்தினார்.

அப்பொழுது விடுதலைப் புலிகளுக்கு மக்களது பெரிய ஆதரவு பலம் இருந்தது. அதற்கு ஏற்ற விதத்தில்தான் அவர்கள் மக்களுடன் நடந்து கொண்டார்கள். பாசிசப் புலிகள் என ஒரு பகுதியினராலும் சில அறிவுஜீவிகளாலும் மற்ற இயக்கங்களாலும் அல்லது குறிப்பிட்டளவு மக்களாலும் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வரலாற்றில் பல்வேறு தவறுகளை விட்டிருந்தாலும் ஈழத்தின் அநேகமான மக்களாலும் புலம்பெயர் மக்களாலும் தமிழக மக்களாலும் முழு அளவிலான ஆதரவு விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது. புலிகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அவற்றை மறுத்தும் மறைத்தும் அவர்கள் மக்களுடன் நெருகக்த்தை பேணி வந்தார்கள். அவர்களது தவறுகளை தெரிந்திருந்தும் அதற்கு சேர்த்தோ, அதனை மறந்தோ, மக்கள் ஆதரவளித்தார்கள் அல்லது உடந்தையாக இருந்தார்கள். புலிகளது வெற்றி மற்றும் திறமையுடன் முழுத் தவறுகளுக்கும் முழுவரும் பெறுப்பேற்ற காலமாக இந்தப்போர் நடந்த காலமிருந்தது. ஆகவேதான் அநேகம் இளைஞர்கள், யுவதிகள் விரும்பி ஈழ விடுலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.

எங்கள் குடியிருப்பில் போராளிகள் பரவலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எழுச்சி நிகழ்வுகளையும் கலை நிகழ்வுகளையும் நடத்தி ஈழ விடுதலைப் போராட்டத்தின் அவசியம் பற்றிக்கூறுவார்கள். கிராமங்கள்தோறும் கலைஞர்கள் நாடகங்களை நடத்தியிருந்தார்கள். எல்லோரும் நாடகங்களை பார்க்க வருவார்கள். நாடகங்கள் நடக்கும்பொழுது இளைஞர் யுவதிகளுடன் போராளிகள் தனிப்பட பேசுவார்கள். பத்து இருபது பேர் என ஒரு நாடகத்தின் முடிவில் ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வயது குறைந்தவர்கள் பேராட்டத்தில் இணைந்திருந்தால் அவர்கள் குடும்பத்திடம் கெண்டு வந்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். அநேகமாக பலர் விரும்பி போராட்டத்திற்கு செல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்கு வருகிற போராளிகளிடம் எல்லாம் அம்மா அண்ணாவை விசாரித்துக்கொண்டிரப்பார். அம்மா எப்பொழுதும் போராளிகளுடன் மிகவும் அன்பாக பழகுபவர். பேராளிகள் எல்லா வீடுகளுக்கும் சென்று உரையாடுவார்கள் ஈழ விடுதலைப்பேராட்டம் களம் என்பனவும் வெற்றி நம்பிக்கை என்பனவும் சனங்களை நெருங்கியிருந்தன. அப்பொழுது வன்னியிலிருந்த சனங்கள் பொருளாதார தொழிநுட்ப முன்னேற்ற மில்லாத காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். துருப்பிடித்த மோட்டார் சைக்கிளை மண்ணெண்ணையில் ஓடினார்கள். ரயர் ரியூப் இல்லாத சைக்ளிலுக்கு வைக்கோல் அடைந்து ஓடினார்கள். காட்டு மரங்களை கொத்தி விறகாக விற்கும் பொழுது இப்படியான சைக்களில்தான் தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறேன். இப்படி நெருக்கடியான வாழ்வை வாழ்ந்தபோதும் சனங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. உன்மையில் அது ஆச்சரியப்பட வைப்பதும் விபரிக்கமுடியாததுமான காலமாக இருந்தது. போரளிகள் இயக்கத்தில் இணையும்படி கெஞ்சுவார்கள். அல்லது தமது அனுபவங்களை சொல்லுவார்கள் அவசியம் பற்றி கோபத்துடன் பேசுவார்கள் பலவந்தமாக யாரும் இழுத்துச் செல்லப்பட்டதில்லை. மக்கள் அதிகம்பேர் ஒத்துழைத்தார்கள். பலவந்தமாக இழுத்துச் கொண்டு சென்றார்கள் என்ற நிலையை வன்னியில் காண முடியாதிருக்க கிழக்கில் அப்படி பலவந்தமாக கருணா அம்மானால் இளைஞர்கள் யுவதிகள் வன்னிக்கு கொண்டு வரப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது.

அநேகமானவர்களால் வழங்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு, பங்கெடுப்பு என்பனவற்றுடன் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து புலிகள் தாக்குதலை தொடுக்க அது புலிகளுக்கு பாரியளவிலான வெற்றியைக் கொடுத்தது. ‘வெற்றி நிச்சயம்’ என்ற அர்த்தம் கொண்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை மே 13 1997 அன்று சம்பிரதாய பூர்வமாக பௌத்த பிக்குகளின் ஆசியுடன் சந்திரிகா அரசு தொடங்கியிருந்தது. சனங்கள் பெரு அவதியுள் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது சனங்களின் நடுவே யுத்தம் நடந்துகொண்டிருந்தது. இராணுவத் தளபதி ஜெனரல் அனுருத்த ரத்வத்தை தலமையில்தான் இந்த யுத்தம் நடத்தப்பட்டது. தாண்டிக்குளத்தலிருந்து ஓமந்தை நோக்கியபடி ஒரு யுத்த முனை திறந்து விடப்பட மணலாற்றலிருந்து நெடுங்கேனி வரை மற்றொரு யுத்த முனை திறக்கப்பட்டது. ஓமந்தையிலிருந்தும் நெடுங்கேனியிலிருந்தும் முன்நகர்ந்து புளியங்குளத்தை அடைந்து அங்கிருந்து கிளிநொச்சியை நோக்கி நகருவதே இராணுவத்தின் திட்டமாக இருந்தது. இதற்கு முன்பாக வவுனியாவிலிருந்து மன்னாருக்குச் செல்லுகிற பிரதான தெருவை கைப்பற்ற இராணுவம் மேற்கொண்ட ‘எடிபல’ என்ற நடவடிக்கை புலிகளது எதிர்ப்பின்றி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வவுனியா நகரம் நோக்கி இடம்பெயர்ந்தனர்.

இருபதாயிரம் படைகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். டாங்கிகள் ஆட்லறிகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த யுத்தத்தில் கிடட்டத்தட்ட 70 கிலோமீற்றர் தூரம் வரை கைப்பற்ற வேண்டியது இராணுவத்தின் இலக்காக இருந்தது. விடுதலைப் புலிகள் வழமையான கொரில்லா முறையிலான யுத்தத்தை முன்னெடுத்தார்கள். மக்களிடம் யுத்தம் பற்றிய தெளிவான கருத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தினார்கள். மக்கள் இடப்பெயர்வுகளையும் அவலங்களையும் சந்தித்து, மண்ணை, நிலத்தை, நகரத்தை, கிராமத்தை இழந்து இருந்தபடியால் விடுதலைப் புலிகளது யுத்த வெற்றிகளுக்காக காத்திருந்தார்கள். மீண்டும் ஊர் திரும்புகிற நாட்களுக்காக காத்திருந்தார்கள். சிங்கள இராணுவம் தமிழ் மக்களை அழித்தொழித்து சிங்கள நாட்டை விரிக்கிறது அதற்கெதிராக பேராடியே ஈழத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட்டது. அப்பொழுது களத்தில் பல லட்சம் மக்களது எதிர்பார்ப்பும் ஆதரவும் இருந்தது. ஒரு எழுச்சிகரமான போராட்டம் நடப்பதாக பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது.

ஜெயசிக்குறு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை இலங்கை இராணுவத்திற்கு பல பின்னடைவுகளை கொடுத்துக்கொண்டிருந்தது. தாண்டிக்குளம் நெடுங்கேணி ஓமந்தை என இராணுவம் இலகுவாக கைப்பற்றிக்கொண்டு புளியங்குளம் சந்தியை அடைய முடியாமல் வழிமறிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் உக்கிரமான சமர் நடந்தபோதும் புளியங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்ற முடியாமலிருந்தது. அங்கு நடந்த சண்டைகளை தளபதி தீபன், தளபதி ஜெயம் முதலியோர் வழி நடத்தினார்கள். அதன் பிறகு புளியங்குளத்தை இராணுவம் சுற்றி வளைக்கவும் புலிகள் அங்கிருந்து கனகராயன் குளத்திற்கு பின்வாங்கினார்கள். அமெரிக்க கிறீன்பரட் கொமாண்டோவினரால் பயிற்றுவிக்கப்பட்ட படைகள் மன்ன குளத்தில் சமரில் ஈடுபட்டன. கனகராயன் குளத்தை கைப்பற்றும் நோக்குடன் இடையே நுழைந்த இராணுவம் பெண் போராளிகளின் தாக்குதல்களால் பலத்த சேதங்களுக்கு உள்ளானது.

மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பை இராணுவம் கைப்பற்றியதும் புலிகள் கனகராயன் குளத்தை விட்டு பின்வாங்கி மாங்குளத்திற்கு திரும்பினார்கள். மன்னார் பூநகரி வீதியை கைப்பற்ற ‘ரணகோஷ’ என்ற படை நடவடிக்கையையும் இராணுவம் தொடங்கி தோல்வியை தழுவியது. கிளிநொச்சியிலும் சமர் மூளத் தொடங்கியது. இராணுவம் திருவையாறு மற்றும் கனகாம்பிகை குளத்தை அடைந்தபொழுதுதான் மக்களது போக்குவரத்து ஆபத்து நிறைந்த ஒன்றாக மாறியது. செப்டம்பர் 30 1998 அன்று படையினர் மாங்குளத்தையும் கைப்பற்றினர்கள். புலிகள் பனிக்கன்குளத்திற்கு பின்வாங்கிச் சென்றார்கள். அத்துடன் ‘றிவிபல’ நடவடிக்கை மூலம் ஓட்டுசுட்டானையும் இராணுவம் கைப்பற்றிக்கொண்டது.

அதேவேளை கிளிநொச்சியைக் கைப்பற்ற பெப்ருவரி 02 1998 அன்று விடுதலைப் புலிகள் நடத்திய சமர் தோல்வியில் முடிவடைந்தது. மெல்ல மெல்ல முன்னேறி வந்த இராணுவம் மீது புலிகள் தாக்குதல்களை தொடுத்தார்கள். அதற்கு முன்பாக தாண்டிக்குளம் படைமுகாம், பெரியமடு படைமுகாம், ஓமந்தை படைமுகாம், கரப்புக்குத்தி விஞ்ஞான குளம் தளம் என பல முகாங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இராணுவத்திற்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. இராணுவத்தால் இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 05.12.1998 அன்று கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. ஐந்து நாட்களில் முழுப்பகுதியையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள். ஜெயசிக்குறு, றிவிபல என்பன இராணுவத்திற்கு பலத்த தோல்வியை கொடுத்தன. விடுதலைப் புலிகளின் அப்போதைய முக்கிய தளபதி கருணா அம்மானின் திறமையான வழிநடத்தல்தான் ஜெயசிக்குறு வெற்றிக்கு வழிவகுத்தது. இதற்காக அவர் கிழக்;கிலிருந்து போராளிகளையும் கொண்டு வந்திருந்தார்.

தினமும் பேராளிகளது மரணம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் வித்துடல்கள் நிரப்பட்ட சவப்பெட்டியை கொண்டு வரும்போது மரணமடைந்த போராளிகளின் தாய்மார்கள் சகோதரர்கள் திட்டி அவர்களை உலுப்பி பேசினார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். இதை எங்கள் குடியிருப்பில் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன்.

நாளடைவில் அவர்கள் அவற்றை மறந்து யுத்த வெற்றியை கொண்டாடினார்கள். மாவீரர் குடும்பம் என்ற கௌரவத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஜெயசிக்கறு வெற்றி மக்களுக்கு, புலிகள்மீது அளவற்ற நம்பிக்கையை கொடுத்தது. அந்த வெற்றி உலகளவில் விடுதலைப் புலிகளது போரிடல் உத்திகள் வலிமை என்பவற்றில் வியக்க வைத்தது. ஈழத் தமிழர்களுடன் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தழிழக தமிழர்களை நம்பிக்கை கொள்ள பல மடங்கு வைத்தது. அப்பொழுது நானும் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ அடக்குமுறையை வெளிப்படுத்துகிற வீதி நாடங்களில் நடித்துத்திருக்கிறேன். அண்ணா பற்றி எந்தத் தகவலும் தெரியாதிருந்தபோது அண்ணாவின் வெள்ளையன் என்ற இயக்கப்பெயரையும் தகட்டு இலக்கத்தையும் போராளிகள் மாவீரர் குடும்ப நலன் காப்பகம் அனுப்பி வைத்தது. நாங்கள் மிகுந்த வறுமையில் துடித்துக்கொண்டிருந்தோம். எப்பொழுதும் வெள்ளை அரிசியல் தண்ணீரை விட்டு கஞ்சி காய்ச்சித்தான் குடிப்போம். சிலவேளையில் தொடர்ந்து மூனறு நாட்களாக உணவில்லாமல் இருந்து நடுச்சாமத்தில் எழுந்து மரவள்ளி இலையை இடித்து வறுத்து சாப்பிட்டிருக்கிறேன். அப்படி இருந்தபோதும் மனதில் கனவும் நம்பிக்கையும் இருந்தது. நிம்மதியான வாழ்வு பற்றிய ஏக்கமும் அவாவுமே அதற்கு காரணமாக இருந்தது.

இதன் இடையே விடுதலைப் புலிகள் 1996 இன் முற்பகுதியில் ஓயாத அலைகள் ஒன்று முலமாக முல்லைத்தீவை கைப்பற்றியிருந்தார்கள். மீண்டும் ஓயாத அலைகள் இரண்டு என்ற சமர் நடவடிக்கையின் மூலம் செப்டம்பர் 26 1998 அன்று தியாகி திலீபனின் நினைவு தினம் அன்று புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை தொடுத்தார்கள்.
-------------------------------------------

நன்றி:உயிர்மை அக்டோபர் 2009