| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Thursday, November 26, 2009

நகர் மீள் நாட்கள்


போரும் வாழ்வும் 03

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.


000

கிளிநொச்சிக்கு திரும்புகிற நாட்கள் வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். ஒரு நாள்கூட ஒரு நிமிடம்கூட அதைப் பார்க்க முடியும் என்று நினைக்கவில்லை. கிளிநொச்சியை முழுமையாக இழந்த உணர்வும் மீட்க முடியாத ஆக்கிரமிப்பின் அச்சமுமே மனதில் பெரியளவிலான படமாக விழுந்திருந்தது.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து வகுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் கிளிநொச்சியைப் பிரிந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். ஒரு கோடை காலம் வரும்பொழுது நாங்கள் கடுமையான வறுமைக்குள் அகப்பட நேர்ந்தது. காணி முழுவதும் வறண்டு போயிற்று. பெரிய மரங்களும் வாடத்தொடங்கிவிட்டன. போர்களின் பின்னால் ஏற்படுகிற விளைவான அலைச்சலும் அங்க இழப்பும் அன்றாட வாழ்வுப் போராட்டமும்தான் உன்மையில் மிகவும் கொடுமையானவை. ஒரு கட்டத்தில் மணியங்குளத்தில் இருந்த வாழ்வு சரியத் தொடங்கியது. புலிகளது வெற்றிகள் மக்களை எத்தகைய நிலையையும் தாங்கிக்கொள்ள வைத்ததுடன் உற்சாகத்தை அளித்துக்கொண்டிருந்தது. கிளிநெச்சியைப் பிரிந்தபொழுது வாழ்வுக்கு பெருந் தவிப்புக்களை நாங்கள் அனுபவிக்க நேர்ந்தது.

அகதிகளுக்கான நிவாரணத்தை நம்பியே வாழும் நிலையிலிருந்தோம். நிவாரணப்பொருட்களை பெறுவதற்காக அதிகாலை விடிய முதல் நான்கு மணி அல்லது மூன்று மணிக்கே எழுந்து சென்று நிவாரண அட்டடைகளை அடுக்க வேண்டியிருக்கும். ஒரு முறை அப்படி நிவாரண அட்டை மற்றும் உரப்பைகளை எடுத்துக் கொண்டு மூன்றரை மணிக்கு எழுந்து நிவாரணக் கடைக்கு சென்று கொண்டிருந்தேன். மிகுந்த இருட்டாக இருந்தது. வானத்தை பார்த்தபடி அதன் ஓரளவான வெளிச்சத்தை வைத்துத்தான் தெருவால் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. அது ஸ்கந்தபுரம் இரண்டாவது பாடசாலை அமைந்திருக்கும் பகுதி. பக்கத்தில் ஒரு கச்சான் விற்கும் கடையிருந்தது. மழையைக் கண்டதும் அந்தக் கடைக்குள்ளே நின்றுகொண்டேன். மழை தொடர்ந்து பெய்தால் என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஊரப்பையை தலையில் பிடித்தபடி போகவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் மழை உடனேயே நின்று விட்டது. அந்தக் கணத்திலேயே ஒரு வெளிச்சம் தெரிந்தது. ஒரு ஆள் பீடியை மூட்டினார். நான் திடுக்கிட்டேன். அவருக்கு முன்னால் காட்டு மரங்களை ஏற்றிய மாட்டு வண்டில் ஒன்று நின்றது. நான் வந்த வேகத்திற்கும் இருட்டுக்கும் அதை கவனிக்காது சென்றிருந்தால் அந்த மரங்கள் என்னை துளைத்திருக்கும் அதை இன்று வரை நினைக்கும்பொழுது அச்சமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

நான் மழைக்கு ஒதுங்கிய கச்சான் கடையை எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒரு அம்மாதான் நடத்தினார். அவரை கச்சான் அக்கா என்றே எல்லோரும் சொல்லுவார்கள். பள்ளிக்கூடம் வரும்பொழுது அந்த அம்மா கச்சான்களை பைகளில் இட்டு நிரப்பிக்கொண்டிருப்பார். இடையிடையே அவரது பிள்ளகைளும் அந்தக் கடையில் நி;றபார்கள். அவரது கணவன் கிளிநொச்சிக்கு செல்லும்பொழுது இராணுவத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர்களின் சொந்த ஊர் கிளிநொச்சயில் உள்ள செல்வாநகர் என்ற கிராமம். எங்கள் குடியிருப்பில் இப்படி தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஊர்களுக்கு செல்லுபவர்களை பார்த்திருக்கிறேன். இரவிலேயே அவர்கள் ஊருக்குச் செல்லுவார்கள். பின்னேரம் ஆக குடியிருப்பிலிருந்து புறப்படுவர்கள். அவர்களை அனுப்பிவட்டு அவர்களின் குடும்பங்கள் தெருவில் வந்து காத்துக்கொண்டு நிற்பார்கள். இரவிரவாக நடந்து அங்கும் இங்குமாக திரிந்துகொண்டிருப்பார்கள்;.

அவர்களில் சிலர் கொஞ்சம் தாமதாக திரும்புவார்கள். அவர்களை கண்டதும் மனைவி பிள்ளகைள் மகிழச்சியில் குதிப்பார்கள். ஊரிலிருந்து பழங்கள் காய்கள் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு வந்து தமக்கும் எடுத்துக்கொண்டு மிகுதியை விற்பார்கள். எங்கள் குடியிருப்பில் இப்படி வாழ்நத சனங்களும் இருந்தார்கள். சிலர் தாமதமாக வந்தாலும் சிலர் இரண்டு நாள் மூன்று நாள் என தாமதமாவதுடன் இறுதியில் வராமலே விட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் உயிருடன் இருப்பார்கள். திரும்புவார்கள். என காத்துக் காத்து ஏமாந்த பல குடும்பங்கள்; இருக்கிறார்கள். அப்படி இன்று வரை கச்சான் விற்கும் அம்மாவின் கணவன் வீடு திரும்பவில்லை. எங்கள் குடியிருப்பி;ல் இப்படி கணவனையும் பிள்ளகைளையும் இழந்தவர்களுக்கு ஒரு சங்கமே இருந்தது.

ஊரை பிரிந்த பிறகு மரணம் நிச்சயமின்மை என்பவற்றுக்குள்ளான வாழ்வே எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருந்தது. நிவாரண அரிசியில் வெறும் கஞ்சியும் மாவில் வெறுமையாக குழைத்து சுட்ட ரொட்டியையும் தின்று கழிக்கும் நாட்கள்தான் கடந்துகொண்டிருந்தது. நிவாரணத்தையும் ஆகக்குறைநதது 15 நாட்கள்தான் சமாளிக்க முடியும். மிகுதி நாட்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இப்படித்தான் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருந்த எல்லா வீடுகளிலும் நிலவரம் இருந்தது. கஞ்சிக்கும் ரொட்டிக்குமே அடுத்த பதினைந்து நாட்கள் காத்திருக்க ணே;டிய நிலையில் சனங்கள் இருந்தார்கள். எல்லோருமே பட்டினியலும் வறுமையிலும் ஒன்றாக இருந்திருக்கிறோம். இந்தக் காலத்தில் பேராளி மாவீரர் குடும்பங்களுக்கு விடுதலைப் புலிகளால் மாதாந்தம் சிறியளான நிவாரணப் பொருட்கள் வழங்கபபட்டுள்ளன. இப்படியே நிவாரணத்தையே எதிர்பார்த்து வாழவேண்டிய நிலையில் மக்கள் இருந்தார்கள். எப்பொழுது நிவாரணம் என்று காத்துக் கொண்டிருப்பதும் அதற்காக எப்பொழுதும் கிராமசேவகர் அலுவலகத்திற்கும், நிவாரணக் கடைக்கும் சனங்கள் அலைந்து கொண்டிருப்பவர்களாகவும் சனங்கள் இருந்தார்கள்.

இப்படியொரு இறுக்கமான காலகட்டத்தில் சிங்கள அரசிற்கு எதிராக பேராடியே தீர வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக திரண்டு நின்றார்கள். இராணுவம் மாங்குளத்தை கைப்பற்றிய வேளையிலேயே விடுதலைபபுலிகள் கிளிநொச்சி நகரம் மீது தாக்குதலை நடத்தினாhர்கள். இராணுவத்தால் ஒரு பொறிக்குள்ளும் கடுமையான முற்றுகைக்குள்ளும் வைத்திருக்கப்பட்ட கிளிநொச்சி நரத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றுவதற்காக சாதுரியமாகவும் துணிகரமாகவும் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். கிளிநாச்சி நகரத்தை கைப்பற்றுவதற்கு பல வேவுப் போராளிகள் மிகக்கடுமையாக உழைத்திருந்தார்கள். தாககுதலை எப்படி நடத்த வேண்டும் என்பதை புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டிருந்தனர்.

இராணுவத்தின் நடவடிக்கைகளால் முழு ஈழ மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். வன்னி மக்கள் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்ப்பட்டிருந்தபோது யாழ்ப்பாண மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா என்று ஒட்டுமொத்த ஈழ மக்களும் ஆக்கிரமிப்பு வாழ்வுக்குள் அதிகாரத்தின் தாக்குதல்களுக்குள் கடுமையான துன்பங்களை எதிர்ககொண்டார்கள். குறிப்பாக 1996 ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தல் ஆளப்பட்ட யாழ்ப்பாணம் படுகொலைகள், அதுவும் இளைஞர் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என்று கடுமையான அடக்குமுறைகளையெல்லாம் எதிர்கொண்டது. எல்லாவற்றினது விளைவும் வன்னியில் பாரிய பேராhட்டம் ஒன்றை நடத்துவதற்கு புலிகளையும் மக்களையும் தூண்டியிருநதது. யாழ்ப்பாணம் பற்றிய நெஞ்சை உலுக்கும் கதைகள் வன்னியில் கடுமையான எழுச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கால இராணுவ ஆக்கிரமிப்பு ஆளுகையின் மறக்க முடியாத அவலமாக செம்மணிப் படுகொலைகள் சிங்கள இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டன.

தியாகி திலீபனின் நினைவு நாளின் 11 ஆம் நாள் அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடக்கினார்கள். கிளிநொச்சி நகரத்தை மற்றும் அதனைச் சுற்றியிருந்த இராணுவத்தின் குவிந்திருந்த ஆக்கிரமிப்பை விடுதலைப் புலிகள் தகர்க்கத் தொடங்கிளனார்கள். அதே ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆம் திகதி கிளிநொச்சிமீதான தாக்குதலை நடத்தியபோதும் அது விடுதலைப் புலிகளுக்கு தோல்வியை ஏற்படுத்தியது. அந்தத் தோல்வி அடுத்த தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்ற அறிவை ஏற்படுத்தியிருந்தது. ஓயாத அலைகள் இரண்டு எனப் பெயரிடப்பட்ட இந்த மீட்பு சமரின் பொழுது மூன்று நாட்களில் தமீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பறினார்கள். கிளிநொச்சியில் அமைக்கப்ட்டிருந்த உயர் பாதுகாப்பு இராணுவ வலயங்கள் இராணுவ முகாங்கள் வழி நடத்தல் தளங்கள் ஆட்லறித் தளங்கள் ஆயுதத் தளங்கள் என்பன புலிகளால் அழிக்கப்பட்டன. 1500க்கும் மேலான இராணுவம் பலியாகியிருந்ததுடன் 2000 க்கு மேலான இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். எஞ்சிய இராணுவத்தினர் ஆனையிறவுக்கு தப்பிச் சென்றார்கள். பெண் புலிகளின் உக்கிரமான தாக்கதல்கள் கிளிநொச்சி நகரத்தை மீட்பதற்கு முக்கிய பங்காற்றின. சமரில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளும் கடுiயாக உழைத்தார்கள். வீராவேசமான தாக்குலை நடத்தினார்கள். தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளது வழி நடத்தல்கள் பேராளிகளது அனுபவங்கள் தியாங்கள் என்பவற்றை இங்கு முழுமையாக எழுதிவிட முடியாது. செறிந்த அனுபவங்களை அவர்கள் கிளிநnhச்சி மீட்பு நடவடிக்கையில் பெற்றுக் கெண்டார்கள்.

கிளிநொச்சியை எப்படி மீட்டோம் என்று பின்னர் விளக்கமடிளித்த போராளிகளது சொற்களை கேட்கும் பொழுது அவர்கள் அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. வீரமரணங்கள் ஒரு பக்கத்தில் நெஞ்சை உலுக்கிக்கொண்டிருந்தது. படுகாயங்களால் வாய்க்கால்களில் குருதி பாய்ந்துகொண்டிருந்தது. கிளிநொச்சி நகரம் குருதி தோய்ந்த நிலமாக இருந்துள்ளது. இராணுவத்தின் குருதியும் பிணமும் எங்கும் சிதறுண்டு கிடந்தன. அவற்றை அகற்றுவதற்கு மக்கள் பலர் பேராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். சந்திரிகா அரசாங்கம் இராணுவச சடலங்களில் முழுவற்றையும் பெறுப் பேற்கவில்லை. மாறிமாறி உயிர்கள் பலியிடப்பட்டதேசமாக கிளிநொச்சி நகரம் இருந்திருக்கிறது. அரசாஙகம் கிளிநொச்சி நகரத்திற்காக எத்தனையோ இராணுவத்தின் உயிர்களை கொடுத்து ஆக்கிரமித்திருக்கிறது.

நகரத்தை மீட்பதற்காக 300க்கும் அதிகமான பேராளிகள் வீரமரணம் அடைந்தார்கள். நகரம் மீட்கப்பட்டது என்ற யெ;தி அதிகார பூர்வமாக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி நகர மீட்பு வன்னி மக்களையும் முழு ஈழ மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உலகம் வியப்பாக பார்த்தது. தமீழ விடுதலைப் புலிகளது கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதன் முதலில் கொடியேற்றும் நிகழ்வு மக்கள் முன்னிலையில் இடம்பெற்றது. லொறிகளிலும் பேரூந்துகளிலும் மக்கள் கிளிநொச்சி நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். எங்கள் குடியிருப்பிலிருந்து சென்றவர்களில் நானும் இருந்தேன். இரண்டு ஆண்டுகளின் பின்னர் கிளிநொச்சியைப் பார்த்தேன். சிதைந்து நிறம் வெளுத்துப் பேயிருந்தது. இராணுவம் எங்கும் குவிந்திருந்ததிற்கான ஆக்கிரமித்திருந்ததிற்கான அடையாளங்களே இருந்தன. நகரம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. கடைகள் வீடுகள் எல்லாம் அழிந்திருந்தன. எஞ்சியவற்றில் இராணுவம் குடியிருந்தமைக்கான அடையாளங்ளே இருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பின் சிங்கள வரிகளும் கொடிகளும் பெயர்களுமாக கிளிநொச்சி நகரம் இருந்தது., பாழடைந்து அழிவின் உக்கிரமான சின்னமாக கிடந்தது.

எனினும் எங்கள் நகரத்திற்கு திரும்பிவிட்N;டாம் என்ற மகிழச்சி பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. கிளிநொச்சி மீட்கப்பட்டதன் மகிழச்சியை புலிகள் மக்களுக்கு கிளிநொச்சி நகரத்தில் வைத்து வழங்கினார்கள். வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தேசியக்கொடியை ஏற்றினார்கள். நான் திரிந்த தெருக்களையும் கடைகளையும் சந்திரன் பூங்காவையும் கல்வி கற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரியையும் பார்த்துக்கொண்டு வந்தேன். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக பெரிய மண்மேடு எழுப்பட்டடு அப்பொழுது அகற்றப்பட்டிருந்தது. எனது பாடசாலை அழிந்து அழிவின் பெரிய சினனமாக நின்று கொண்டிருந்தது. வீட்டிற்குச் செல்லும் உள்ளொங்கை வரை சென்று பார்த்தேன். மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் வீட்டிற்குச் செல்லவில்லை. ஆனால் அங்கிருந்த வீடுகள் எல்லாம் அழிந்து அதன் மேல் காடுகள் அடர்ந்திருந்தன. இராணுவம் வாழ்ந்த குகைகளைப்போலான காவரண்கள் மாளிகைகள் என்பவற்றை சனங்கள் பார்வையிட்டார்கள். இராணுவம் எவ்வளவு பலத்துடன் கிளிநொச்சியில் இருந்தது என்பதை அவற்றை பார்க்கும் பொழுது புரியக்கூடியமாதிரி இருந்தது. சனங்கள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பான எல்லாத் தெருக்களிலும்; நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.

அண்ணா கிளிநொச்சி சமரில் ஈடு பட்ட பின்னர் எங்களை சந்திப்பதற்கு வரும்படி சொல்லியனுப்பயிருந்தான். அண்ணாவைப் பற்றி இரண்டு வருடமாக சரியான தகவல் தெரியாதிருந்த நிலயில் அந்தச் செயதி பெரிய ஆறுதலாக இருந்தது. ஜெயசிக்குறு தாக்குதல்களில் அவன் ஈடுபட்டது சில பேராளிகளின் வாயிலாக தெரிய வந்த பொழுதும் எங்கு நிற்கிறான் என்ற சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மணியங்குளத்தலிருந்து நாங்கள் அண்ணாவைப் பார்க்க கிளிநொச்சிக்கு புறப்பட்டோம். நானும் அம்மாவும் தங்கச்சியும் துஸியந்தியும் நடந்து வந்து கொண்டிருக்கிறோம். முறிப்பில் வைத்து போராளிகளின் வாகனம் ஒன்றில் ஏறி கிளிநொச்சிக்கு வந்தோம். நான் கிளிநொச்சி வெற்றி நாளிலன்று வந்திருந்தபோதும் அம்மா அப்பொழுதுதான் ஆக்கரமிப்பின் பின்னர் வந்திருந்தார். கிளிநொச்சியில் இறுதியாக காவல்துறை அமைந்திருந்த இடத்தில் நின்றுகொண்டு அண்ணாவை வரச் சொல்லியனுப்பினோம். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடமையிலிருந்த அண்ணா எங்களிடம் வந்தான்.

அண்ணாவைப் பார்த்ததும் அம்மா அழத் தொடங்கினார். எங்களை ஏன் நடுத் தெருவில் விட்டுச் சென்றாய் என்று கேட்டார். அண்ணாவின் வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன.

என்னம்மா செய்வது! நாங்கள் பேராடத்தானே வேண்டும் என்று அம்மாவுக்கு சொன்னான். இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லா சண்டைகளும் முடிந்துவிடும் அதன் பின்னர் நாங்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம் என்று கூறினான். எங்கள் நிலமையைச் சொன்னால் நீ இயத்திலிருந்து விலத்திவிடலாம் என்று அம்மா சொல்ல நான் விரும்பித்தானே வந்தேன். எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன என்று சொன்னான். என்னிடம் ஒரு டயரியைத் தந்துவிட்டு இதைக் கொண்டு போய் வைத்திரு நான் திரும்பி வரும் பொழுது வேண்டுகிறேன் என்று அதை என்னிடம் தந்தான். அந்த இடத்திலேயே வைத்து அதை தட்டிப் பார்த்தேன். சாதாரணமான குறிப்புப் புத்தகத்தில் அண்ணா பழகிய நிறைய போராளிகளின் வரிகள் கையொப்பங்கள் இருந்தன. அவர்கள் சமர்களுக்கு செல்லும் பொழுதும் பயிற்சி எடுக்கும் பொழுதும் இப்படி பல்வேறு சந்தர்பங்களில் எழுதிய கனத்த சொற்கள் அதில் நிரம்பியிருந்தன. வீரவேங்கை, கப்டன், லெப்டினன் என்று மாவீரர்களது நிலைகளை அண்ணா எழுதி அவர்கள் வீர மரணம் அடைந்த திகதிகளை அதில் குறித்து வைத்திருந்தான். அவர்களுக்குள் எவ்வளவு நெருக்கம் கனவுகள் இருந்தன என்பதையும் தவிப்புகள் இருந்தன என்பதையும் அவர்களது வாழ்வையும் அந்தச் சொற்கள் உணர்த்தின.

அண்ணாவுக்கு அப்பொழுது 18 வயதுதான். எல்லாப் போராளிகளும் அண்ணாவை வெள்ளை வெள்ளை என்று அழைத்துக்கொண்டு போனார்கள். வெள்ளை அம்மா என்ன வாங்கி;க்கொண்டு வந்திருக்கிறா? எங்களுக்கு இல்லையா? என்று அவர்கள் போகவும் வரும் கேட்டுக்கொண்டு சென்றார்கள். எல்லாமே உங்களுக்கத்தான் என்று அண்ணா சிரித்துக்கொண்டு சொன்னான். எனக்கு வர விரும்பமில்லை. நீங்கள் எற்காகவும் யோசிக்காதீங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு இங்க நிறைய போராளிகள் இருக்கிறார்கள். எல்N;லாரும் எங்களை மாதிரிதானே என்று அம்மமாவைப் பார்த்து சொன்னான். உங்களுக்கு தகவல் சொல்ல எவ்வளவோ முயற்சித்தேன். முடியவில்லை அம்மா. என்னை தேடி அலைந்திருப்பீங்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் போராட வேண்டும் என்பதில் உறுதியான இலட்சியம் எனக்கிருந்தது. உங்கள் பிள்ளைக்கு ஒன்றும் நடக்காது நான் மறுபடியும் திரும்ப வருவேன் என்று அணணா சொல்லிக் கொண்டிருந்தான்.

நானும் அண்ணாவும் நடந்து திரிந்த அதே கிளிநொசசி நகரத்தில் ஒரு போராளியாக அந்த நகரத்தை மீட்ட பின்னர். அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அணணாவில் எனக்கு நிறைய கோபமாக இருந்தது. எங்களை நடுத் தெருவில விட்டுச் சென்றவன். அதனால் அம்மா எவ்வளவு துன்பப்பட்டிருப்பார். மிகவும் கொடுமையான வறுமையை நாங்கள் அனுபவிக்க நேர்ந்தது எல்லாம் அவனுடன் என்னை கோபப்பட வைத்தது. நான் பேசாமல் அவர்கள் கதைத்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னடா பார்க்கிறாய் என்று அண்ணா என்னைக் கேட்டபடி சிரித்தான். நானும் அண்ணாவும் எந்த நேரமும் வீட்டில் அடிபட்டுக்கொண்டிருப்போம். அம்மா வரும்பொழுது இருவரும் முறையீடுகளை வைத்துக்கொண்டிருப்போம். பள்ளிக்கூடம் போய் வரும் பொழுது கடைக்கும் போகும் பொழுது என்று எப்பொழுதும் சண்டை வந்துவிடும்.

அண்ணா பொறுப்பில்லாது நடக்கிறான் என்று எனக்கு எப்போழுதுமே கோபமாக இருக்கும். அண்ணா ஒவ்வொரு முறையும் இயக்கத்திற்கு சேரும் பொழுது அம்மாவுடன் சென்று அவனை வீட்டுக்கு வரும்படி கேட்டுக்கொண்டிருப்பேன். நான் சண்டை பிடிக்க மாட்டேன். அம்மா பாவம். நீ இல்லாமல் நாங்கள் இருக்க மாட்டோம். வீடே இருண்டு கிடக்கிறது என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம். அண்ணா விரும்பி இணைந்ததாகவும் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறான் என்றே இயக்கப் பொறுப்பாளர்கள் சொல்லுவார்கள். அவர் வந்தால் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்றே அவர்கள் சொல்லுவார்கள்.

அண்ணா இப்படி நடந்து கொள்ளுவது அம்மா அப்பாவுக்காக காத்திருந்து காலத்தை கழித்தது எல்லாம் இவற்றுடன் கடுமையான வறுமை என்பன எங்களை எல்லாச் சொந்தக்காரார்களுடனும் பிரித்து விட்டது. அவர்கள் எங்களை தீணட தகாத சக்கதியாகவே பார்த்தார்கள். அரச உத்தியோகங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு எந்த அடிப்படையுமற்ற வாழ்வினை வாழும் எங்களை தங்கள் சொந்தம் என்று சொல்வே தயங்கினார்கள். அவர்களிடம் கையேந்துகிற உதவி பெறுகிற தவிர்க்க முடியாத நெருக்கடி இருந்ததை இன்று வரை என்னால் நினைத்துக் பார்க்க முடியவி;லலை. கடுமையான அதிகாரத் தொனி மற்றும் ஒடுக்குமுறைகளை அவர்கள் பிரயோகித்தார்கள். குறிப்பாக பெரிய மாமா, சின்ன மாமா என்ற அம்மாவின் இரண்டு அண்ணன்களின் சொற்களால் நடவடிக்கைகளால் நான் கடுமையான துன்பப்பட்டே எப்பொழுதும் திரும்பியிருக்கிறேன். அவர்களை கண்டாலே அசுரர்களைப் பார்ப்பதுபோலவே இருக்கும். அவர்களுடன் பேசும் பொழுது சொற்கள் வராது, நடுங்கும் எல்லாவற்றையும் சமித்து அவர்களிடம் உதவி பெறுகிற சூழ்நிலையிலிருந்து எப்பொழுது நாம் விடுதலை பெறுவோம் என்ற நாளுக்காக காத்திருந்தேன். அந்தச் சொந்தக்காரர்களுக்கு எங்களுடன் சிறியளவிலான இரகசியாமான உறவே இருந்தது.

அண்ணாவைப் பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. அண்ணாவை இயக்கத்திலிருந்து விலகி தரும்படி அம்மா பல இடங்களுக்கு அலைந்து கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் குடும்ப நிலைமையை கருத்தில் எடுத்து அண்ணாவை வீட்டுக்கு அனுப்பலாம் என்றே பொறுப்பாளர்கள் கூறினார்கள். விளிம்பு நிலையில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்றே நாங்கள் காத்திருந்தோம். அடுத்த கட் தாக்குதல்களுக்கு தயாராகிக்கொண்ருக்கும் காலமாக அது இருந்தது. அண்ணா வீட்டுக்கு திரும்புவான் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்து. பெரிய சமருக்கு தயாராகிற காலத்தில் எப்படி விடுவார்கள் என்றே நினைத்தேன்.

இப்படி அண்ணாவுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்க அவன் பற்றி எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அண்ணா படுகாயமடைந்து வன்னேரியிலுள்ள சோலை என்ற இடத்தில் அமைந்திருக்கிற விடுதலைப் புலிகளின் வைத்திய சாலையில் இருப்பதாகவும் அறிவித்தார்கள். அம்மா பதறியடித்துக்கொண்டு வன்னேரிக்கு சென்றார். தொடையில் பின்பக்கமாக பெரிய காயம் ஒன்று அண்ணாவுக்கு ஏற்பட்டது. ஆனையிறவுப் பகுதியை நோக்கியுள்ள எல்லைப் பகுதியில் எதிர்பாராமல் ஏறபட்ட சமரிலேயே அந்தக் காயம் அவனுக்கு ஏற்பட்டது. என்னை எடுப்பதற்கு கடிதங்கள் அனுப்பினிர்களா? என்று அமமாவை அண்ணா கேட்டிருக்கிறான். சொன்னவர்கள். நான் தான் மறுத்தேன். நான் வர மாட்டேன் போராட வேண்டும் என்று அண்ணா உறுதியாக சொல்லிவிட்டான். நிறையவே வேலைகள் இருக்கின்றன என்று கூறிவிட்டான். அம்மா அண்ணாவை வீட்டுக்கு அனுப்பச்சொல்லிக் கேட்பதை நிறுத்திககொண்டார்.

ஆனையிறவில் இராணுவம் இருப்பதால் கிளிநொச்சியில் நிற்பது பாதுகாப்பற்ற உணர்வையே தந்தது. எவ்வேளையிலும் ஷெல்கள் எறியப்படலாம் என்ற அச்சத்தை தந்தது. எல்லா இராணுவமும் திரண்டு ஆனையிறவு பெரும் கோட்டையாக இருந்தது. அதனால் கிளிநொச்சியில் மக்கள் மீள குடியேறுவதற்கு எவ்வளவு நாட்கள் எடுககும் என்பதை அப்பொழுது கணக்கிட முடியவில்லை. புலிகள் கிளிநொச்சியில் பலமாக காலை ஊன்றிக்கொண்டார்கள். கிளிநொச்சியில் மீள் வாழ்வை ஏற்படுத்துவதற்காக ஆனையிறவு முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவம் அகற்றப்படவேண்டியிருந்தது.

நன்றி: உயிர்மை நவம்பர் 2009