| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Saturday, December 26, 2009

மரணங்களின் நிலம்




போரும் வாழ்வும் 04

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.

மரணங்களின் நிலம்

அண்ணா தனது ஐந்து வருடப்பணியை முடித்துக்கொண்ட நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். எங்கள் வீட்டு நிலவரத்தாலேயே அனுப்பட்டாதாக காரணம் கூறப்பட்டது. எங்களுக்கு அண்ணா திரும்பி வந்த பொழுது ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் என்னால் இங்கு எழுதிவட முடியவில்லை. தனது போராளிகளை பிரிந்து வருவதற்கு அவன் மிக கஷ்டப்பட்டிருந்தான். அவர்களின் கனவு மிகுந்த கவிதைகளையும் சொற்களையும் வரும்பொழுது கொண்டு வந்தான். அப்பொழுது நான் பதினோரவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். சாதாரணதரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு செல்லவேண்டியிருந்தது. வீட்டில் நிலவிய கடுமையான வறுமையால் நான் பாடசாலைகளுக்கு ஒழுங்காக செல்லுவதில்லை. எப்படியான வறுமையிலும் அம்மா என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். நான் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று அண்ணாவும் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பான். நான் எப்பாவது ஒரு நாள்தான் பாடசாலை சென்று கொண்;டிருந்தேன். எனது கல்வி அடைவு மட்டம் மிக மோசமாக இருந்தது. எப்படியும் தங்கச்சியையும் படிக்க வைக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். எனது மாணவர்கள் பாடசாலை செல்ல நான் கிணறு வெட்டுவதற்கும் வயல் வரம்புகளை துப்புரவாக்குவதற்கும் சென்று கொண்டிருந்தேன்.

எனது அண்ணா முன்னாள் போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டான். அண்ணாவின் மனைவி விடுதலைப்புலிகளின் சிறுத்தை என்ற பிரிவில் இணைந்து ஆறு வருடங்கள் பணியாற்றியிருந்தார். இயத்தில் இருந்து விலகிய பிறகும் அண்ணா அடிக்கடி புதுக்குடியிருப்பு சென்று திரும்பிக்கொண்டிருப்பது அம்மாவுக்கு அச்சத்தை ஏறபடுத்தியது. அவன் திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவனை பாதுகாக்கலாம் என்று அம்மா நம்பிக்கொண்டார்.

ஆனையிறவுக்கான தாக்குதல்கள் அப்பொழுது தொடங்கியிருந்தன. ஆனையிறவு இலங்கை இராணுவத்தின் மிகப்பெரிய கோட்டையக இருந்தது. முழு வன்னி நிலத்திற்கும் அச்சுறுத்தல் தந்துகொண்டிருந்தது. 1989 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் சிங்கள இராணுவமும் இந்திய இராணுவமும் ஆனையிறவில் நிலைகொண்டிருந்த பொழுது அந்தப் பகுதியால் பயணம் செய்ய ஞபாகம் எனக்கு இருக்கிறது. உப்பு விளைகிற அந்த பரப்பு எப்பொழுதும் இராணுவ மயமாகவே இருந்தது. ஈழப்போராட்ட காலங்களில் உக்கிரமாக போர் நடக்கிற பொழுது ஆனையிறவு கடுமையான களமாக உணப்பட்டது. எனக்கு ஐந்தாறு வயதுகளில் ஆனையிறவு கிளிநொச்சி பரந்தன் என்பன சமர்கள் இடம்பெறும் களமாகவும் ரெலிகப்படர்கள் வந்து தாக்குதல் நடத்துகிற இடமாகவும் இருந்தன.

தமழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்றிசகைளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். 1991ஆம் ஆண்டு ‘ஆகாயக் கடல்வெளிச் சமர்’ என்ற தாக்குதல் முலம் புலிகள் ஆனையிறவை கைப்பற்ற பெரும் தாககுதல் ஒன்றை தொடுத்திருந்த பொழுது அது அவர்களுக்கு மிகுந்த தோல்வியை கொடுத்திருந்தது. அப்பொழுது கிளிநாச்சி முதலிய வன்னி நிலத்தை அச்சுறுத்திய ஆனையிறவிலிருந்த படைகளால் பரந்தன் உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்த சனங்கள் 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து அகதிகளாகினார்கள்.

ஆனையிறவு மக்களை வாழ வைக்கிற உப்பு வளம் மிகுந்த பகுதி. வன்னி நிலத்தையும் யாழ்ப்பாண குடா நாட்டையும் ஒடுக்கமான கடற்பகுதியால் இணைக்கிறது. ஈழப்போரட்டத்தில் ஒரு தடைக் கல்லாகவும் அச்சுறுத்தலாகவும் ஆனையிறவு படை முகாம் இருந்தது. நிறையப் போராளிகளையும் அந்தப் படைமுகாம் தின்றிருந்தது. கிளிநொச்சி கைப்ற்றப்பட்ட பின்னர் 2001ஆம் ஆண்டு மார்ச்ச மாதம் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆனையிறவு படைமுகாம் மீது தாக்குதலை தொடுத்திருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ‘ஓயாத அலைகள் மூன்று’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்காக 1200 வரையிலன போராளிகள் குடாரப்பு பகுதியில் தரையிறங்கினார்கள். கடலில் இராணுவத்தினரின் கடுமையான இடை மறிப்புத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து அவற்றை முறியடித்துக்கொண்டு பேராளிகள் தரையிறக்கப்பட்டார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமான படையினரால் ஆனையிறவுப்; பகுதி பாதுகாக்கப்பட்டது அல்லது படையினர் அங்கு தங்கியிருந்தார்கள். நெருங்க முடியாததும் அசைக்க முடியாததுமான இந்தக் கோட்டையை விடுதலைப் புலிகள் வலுவான திட்டங்களை வகுத்து அசைக்க வைத்தார்கள்.

குடாரப்பு தரையிறக்கத்திற்காக வந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளை இடைமறித்து 16டோறாப் பீரங்கிப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதலை நடத்தியபொழுது கடற்புலிகள் கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி ஆபத்தை நீக்கினார்கள். முதல் கட்டமாக பளை, வெற்றிலைக் கேணி, தாளையடி, உடுத்துறை, வத்திராயன், தளையடி, மருதங்கேனி போன்ற பகுதிகளை புலிகள் கைபற்றினார்கள். அங்கிருந்த ஆட்லறித் தளங்களை அழித்து ஆனையிறவு படையினரை பொறிக்குள் கொண்டு வநதார்கள். இராணுவத்தினரால் சூழப்பட்ட பகுதிகளுக்குள் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு தரை வழிப் பாதை ஒன்று தேவைப்பட்டது. உடுத்துறை வழியான தரைவழி;ப்பாதை ஒன்று இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகளால் திறக்கப்படட்து. 34 நாட்கள் அந்தப் பகுதியில் தரித்திருந்து சண்டையிட்ட புலிகள் 34ஆவது நாள் ஆனையிறவை முற்றுகையிட்டார்கள். போராளிகளது கடுமையான தாக்குதல்கள், அர்பணிப்பகள், தளபதிகளின் வழிநடத்தல்கள் என்பனவற்றால் ஆனைறியவு போராளிகளால் கைப்பற்றப்பட்டது.

குடாரப்பு தரையிறக்கம் என்ற ஆச்சரியப்பட வைக்கிற தரையிறக்கத்தில் போராளிகளை வழி நடத்தி போர் புரிந்தவர் தளபதி பால்ராஜ். தளபதி துர்க்கா, தளபதி விதுசா, தளபதி ராஜசிங்கன் போன்றவர்கள் தரையிறக்க சமரில் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். இந்தச் சமர்களிலும் பெண் போராளிகள் கடுமையான உழைத்திருந்தார்கள். போராளிகள் தமது பொறிக்குள் சிக்குகிறார்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடலாம சிறைப்பிடிக்கலாம் என்று காத்திருந்த இராணுவம் இறுதியில் போராளிகளின் பொறிக்குள் சிக்கியது. இராணுவத்தை போராளிகள் சுற்றி வளைத்தார்கள். வியக்க வைக்கிற விதமான தாக்குதல்களினால் இரணுவம் நிலைகுலைந்து ஓடத் தொடங்கின. இராணுவம் கிளிhலி வழியாக தப்பிச் சென்றது. இந்த தாக்குதல் பத்தாயிரம் இராணுவத்தின் உயிரையும் 1200 போராளிகளது உயிரையும் தின்றது. ஆனையிறவை கைப்பற்றுவதற்கான வேவுகளின் பொழுது போராளிகள் மிகுந்த கஷ்டங்களை அனுபவத்திருக்கிறார்கள். அந்த வேவுப் போராளிகளது சாதுரியமான செயற்பாடுகள் மிகவும் துல்லியமான சமரை நடத்த உதவியிருந்து. தமிழ் மக்களால் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதை முன்னிட்டு வெற்றி கொண்டாடப்பட்டது. வன்னி மக்களுக்கு இருந்த ஒரு பக்க அச்சுறுத்தல் நீங்கியது. கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கண்டவளை மக்கள் அச்சமின்றி மீள் தங்கள் ஊர்களுக்கு திரும்புகிற நாட்கள் வந்தன.

ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட பிறகு கிளிநொச்சிக்கான நிருவாக அலுவலகங்கள் திரும்பின. கிளிநொச்சி கைப்பற்றியவுடன் நான் முதலில் படித்துக்கொண்டிருந்த உருத்திரபுரம் மகாவித்தியாலயம் தனது சொந்த இடத்திற்கு திரும்பியதும் அக்கராயனில் இயங்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி என்ற எனது பாடசாலையில் சேர்ந்து கொண்டேன். பிறகு கிளிநொச்சி மத்திய கல்லூரியும் கிளிநொச்சிக்கு திரும்பியது. மணியங்குளத்திலிருந்து சுமாராக பதின்மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சியின் மையத்தில் உள்ள எனது பாடசாலைககு சைக்கிளில் வந்து படித்து திரும்பிக்கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலை பெரும் அழிவுகளை சந்தித்திருந்தது. எங்கள் பாடசாலையில் அமைந்திருந்த மிகவும் பெரிய மேல்மாடிக்கட்டிடம் யுத்த அழிவின் சின்னம் என்பதை பிரதிபலித்துக்கொண்டிருந்தது. பாடசாலைக்கு அழகு சேர்த்த அந்தக்க கட்டிடத்துடன் பிரதான மண்டபம் என்ற மிகப்பெரிய மண்டபமும் சிதைந்து போயிருந்தது. ஓலைகளால் வேயப்பட்ட திறந்த வெளி வகுப்பறைகளில் எங்கள் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறோம் எங்கள் பாடசாலை திரும்பிவிட்டது என்பன எங்களை எல்லையில்லாத மகிழ்ச்சிப்படுத்தியது.

கண்ணிவெடிகள் சனங்களை தின்பதற்கு பதுங்கியிருக்கும் என்பதனால் மீள் குடியியேற்றம் கண்ணிவெடிகளை கட்டம் கட்டமாக அகற்றப்பட்டே தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த மீள் குடியேற்றத்தின பொழுது புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளால் நிறையப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அத்துடன் கால்களையும் இழந்திருக்கிறார்கள். கால்நடைகளும் இழப்புக்களை சந்தித்தன. கிளிநொச்சி கைப்ற்றப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதால் கிளிநொச்சியில் கண்ணிவெடிகள் கண்டு பிடிக்க முடியாதபடியும் புதைந்து கிடைந்தன.

ஒரு நாள் பாடசாலை முடிந்ததும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கைபற்றப்பட்ட ஆனையிறவை பார்க்கச் சென்றிருந்தோம். ஆனையிறவு எவ்வளவு பெரிய இராணுவக் கோட்டையாக இருந்தது என்பதை அப்பொழுது பார்க்கும் பொழுதுதான் புரிந்தது. எங்கும் காவலரண்களும் கட்டிடங்களும் இராணுவத்தினரின் வாடி வீடுகளும் அறைகளும் இருந்தன. பெரிய முன்னணிக் காவலரண்களும் அதன் பின் பதுங்கியிருக்கும் வரிசையான பதுங்கு வழிகளும் கண்காணிப்பு கோபுரங்களுமாக எல்லாம் சிதைந்து கிடந்தன. முழு வசிதிகளுடன் அவர்கள் அதற்குள் இருந்திருக்கிறார்கள். போராளிகள் அங்கிருந்த இராணுவத்தின் கட்டுமானங்களை அழித்து ஆனையிறவில் படையினர் மீண்டும் நிலை கொள்ள முடியாத சூழலுக்கு ஏற்ப ஆக்கி;ககொண்டிருந்தார்க்ள. அதேநேரம் சாவகச்சேரி, கைதடி, அரியாலை முதலிய பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு யாழ் நகரத்திற்கு மூன்று மையில் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

நான் ஆனையிறவில் நினறு கொண்டிருந்த பொழுது கீபிர் விமானங்கள் பெரும் அச்சுறுத்தலுடன் பறந்து குண்டுகளை விசிக்கொண்டிருந்தன. பளை, முகமாலை முதலிய பகுதிகளில் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றன. யாழ் நகரம் விடுதலைப் புலிகள் வசம் வரப்போகிறது என்று சனங்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இதற்காக விடுதலைப்புலிகள் நடத்திய சமர்களுக்கு எதிராகவே இராணுவம் மிகக் கடுமையான விமானத்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. யாழ் நகரத்தை நெருங்கும் புலிகளின் தாக்குதல்களிலிருந்து இழப்புகள் அதிகரித்ததினால் அவர்கள் பின்வாங்கிக்கொண்டார்கள்;.

இராணுவத்தினர் புலிகளிடம் இழந்த ஆனையிறவை கைப்பற்றுவதற்கு ‘ஹீனி கல’ என்ற ‘தீச்சுவாலை’ என்ற அர்த்தம் கொண்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இராணுவத்திற்கும் தமீழ விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இந்த இராணுவ நநடவடிக்கையின் பொழுது இலங்கை இராணுவம் மிகவும் கடுமையான முனைப்புக்களை மேற்கொண்டது. ஆனையிறவுத் தோல்வியால் தெற்கில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பை சமாளிப்பதற்காக ஆனையிறவை மீளக் கைப்பற்ற அரசாங்கத்தின் படைகள் கடுமையான முயற்சியை மேற்கொண்டன. விமானத்தாக்குதல்கள் ஆட்லறித் தாககுதல்கள் என்று யுத்த களம் தீப்பற்றிக் கொண்டிருந்தது. புலிகள் இரண்டு கிலோமீற்றார்கள் பின்வாங்கிய பொழுதும் உடனேயே அந்தப் பகுதிகளை கைப்பற்றினார்கள். சம நேரத்தில் ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தத்திற்கு தயாராக உள்ளதாக அறிவித்தார்கள். தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை மூன்று நாட்களின் பின்னர் கைவிடப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு கறுப்பு ஜீலை 24ஆம் திகதி 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானத்தளம மீது தமிழீழ விடுதலைப்புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். விமானங்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை ஈழத்தின் போர் உக்கிரமாகிய காலத்திலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சி;ன்ன இரைசசலுக்கும் பயந்து விழ வைத்து எல்லா நாட்களையும் நேரங்களையும் பதற்றததுக்குள்ளாக்கி விடுகின்றன விமானங்கள். குழந்தைகள் வானத்திற்கு அஞ்சியிருக்கவும் பதுங்குகுழிகளுக்குள் இருளான காலத்தை கழிக்கவும் விமானங்கள் நிர்பந்திக்கன்றன. எப்பொழுதும் உயிரை குடித்து விட்டு வீடுகளையும் கிராமங்களையும் நகரங்களையும் அழித்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருப்பவை. கட்டுநாயக்கா விமானத்தளம் தாக்கப்பட்டது என்ற செய்தி ஈழ மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது. உலக தமிழ்மக்களை வியக்க வைத்தது. உயிர் குடிக்கிற வல்லூறுகளாக விமானங்களை பார்த்த மக்கள் அது கூட்டுடன் அழிந்தது என்று மகிழ்ந்தார்கள்.

பதினான்கு கரும்புலிகள் தமது உயிரை தியாகம் செய்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களினால் இலங்கை அரசிற்கு மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது. பன்னிரண்டு விமானங்களும் ஆறு ரெலிகப்டர்களும் அழிக்கப்படன. மேலும் சில விமானங்களும் ரெலிகப்படர்களும் சேதப்பட்டன. ஓட்டுமொத்தமாக 375 அமரிக்க டொலர்கள் இழப்பு அரசாஙகத்திற்கு ஏற்பட்டது. ஆனால் எப்படியும் அதே விமானங்களை இறக்குமதி செய்தும் விமானத்தளத்தை புனரமைப்பு செய்யவும் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டது. வெளிநாடுகளின் உதவிகளுடன் கட்டுநாயக்கா விமான றிலையம் பலம் பொருந்திய பழைய நிலைக்கு திரும்பியது.

ஆனால் புலிகள் தொடுத்த தாக்குதல்கள் எல்லாம் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் களத்தில் அடுத்த கட்ட இராணுவ நகர்வுக்கு செல்ல முடியதா நிலைக்கு கொண்டு சென்றது. முகமாலை கள எல்லைகளாக இருந்தன. ஆனால் அடிக்கடி அங்கு சமர்கள் முண்டபடியிருந்தன. நாளுக்கு நாள் பேராளிகள் வீர மரணடடைந்து கொண்டிருந்தார்கள். யுத்தம் மக்களிடமிருந்து உயிர்களை தின்று கொண்டிருந்தது. மக்களும் நேர்மையான ஒரு சமாதானத்தைதான் அப்பொழுதும் விரும்பினார்கள். யுத்த அழிவுகளிலிருந்து மீளவும் களங்களில் பலியாகிக்கொண்டிருக்கிற உயிரழிவை தடுக்கவும் உன்மையான சமாதானமே தேவைப்பட்டது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சாதாரண தரப்பரீட்சை எழுதி முடித்து விட்டு அதில் போதிய பெறுபேறுகள் கிடைக்காததினால் உயர்தர படிப்பிற்கு செல்ல முடியாதிருந்தேன். நாங்கள் அப்பொழுதும் மணியங்குளத்தில்தான் இருந்தோம். முன்னாள் போராளிகளும் களத்திற்கு பணியாற்ற அழைக்கப்பட்டாகள். அவர்களில் திருமணமாகி குழந்தை உள்ளவர்களும் களங்களுக்கு சென்றர்கள். எங்கள் குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு முன் ஆனையிறவுக்கு முன்பாக உள்ள உமையாள்புரத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த ஒரு வீட்டில் திருகோணமலையைச் சேர்ந்த முன்னாள் போராளி துளசி என்பவர் திருமணம் செய்திருந்தார். அவர் களத்திற்கு சென்ற பொழுது எதிர்பாராத சமரில் வீரமரணம் அடைந்துவிட்டார். அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்களாகியிருந்தன. என்னுடன் மிக நெருங்கிப் பழகிய அவரின் மரணம் மிகுந்த பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

அண்ணாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. அண்ணாவையும் களப்பணிக்கு விடுதலைப் புலிகள் அழைத்திருந்தார்கள். அண்ணா மிகுந்த விருப்பத்துடன் சம்மதித்தான். அம்மாவும் அண்ணாவின் மனைவியும் அண்ணாவை கெஞ்சித் தடுத்தார்கள். இயக்கப் பொறுபப்hளர்களிடமும் அம்மா அண்ணாவை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டார். அண்ணா களத்திற்கு செல்ல தயாராக இருந்ததினால் எங்களால் எவ்வளவோ முயன்றும் அண்ணாவை தடுக்க முடியவில்லை. எங்களிடம் சொல்லாமல் அண்ணா களத்திற்கு சென்றிருந்தான். நாங்கள் மிகுந்த பதற்றத்துடன் இருந்தோம். பதினைந்து நாட்களின் பின்னர் அண்ணா வீட்டுக்கு வந்தான். அவனது குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தான்.

மீண்டும் அண்ணா களத்திற்கு செல்லாத வகையில் அம்மா இயக்க பொறுப்பாளர்களுடன் பேசினார். அவனின் குழந்தையையும் மனைவியையும் காட்டி அவனை களத்திற்கு அழைத்து செல்லாதீர்கள் என்று அம்மா சொன்னார். அண்ணா மீண்டும் எங்களை மீறி களத்திற்கு செல்ல முயன்றுகொண்டிருந்தான். அவனுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் அம்மா செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அண்ணாவுடன் இரவு முழுவதும் சண்டை பிடித்துக்கொண்டு கதைக்கவில்லை. அண்ணாவிடம் போக வேண்டாம் என்று கெஞ்சினேன். அவனது முடிவால் அவனுடன் கதைக்க என்னால் முடியவில்லை. காலையும் என்னிடம் வந்து அண்ணா கதைக்கும் பொழுதெல்லாம் நான் அவனுடன் பேசவில்லை. அம்மாவிடம் தன்னை தடுத்து மனம் நொந்தபடி அனுப்ப வேண்டாம் எனக்கூறிவிட்டான். அதனால் தடுத்துக்கொண்டிருந்த அம்மாவை பேசாமலிருக்க செய்திருந்தான்.

அண்ணாவை பேருந்தில் ஏற்றி விடுவதற்ககாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் என்னை திரும்ப படிக்கவும் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படியும் சொல்லிக்கொண்டு வந்தான். தன்னுடன் கதைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தான். நான் கதைக்காமல் இருந்தால் அண்ணா செல்ல மாட்டன் என்ற நம்பிக்கை எனக்கு அவன் பேருந்தில் ஏறி மறையும் வரை இருந்தது. பேருந்தில் ஏறும் பொழுது அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி 50 ரூபா பணத்தை எனது பொக்கற்றில் வைத்தான். அண்ணா போக மாட்டன் என்று இருந்த என்னனை விட்டு அவன் போயக்கொண்டிருந்தான். இடையிலாவது திரும்புவான் என்று மனம்; சொல்லிக் கொண்டிருந்தது. அவன் என்னை பேரூந்து நிலையத்தில் விட்டு சென்று விட்டான். கதைக்காமல் அனுப்பியது மனதை மிகுந்த துன்பப்டுத்தியது. முதல் முறை மாதிரி இந்த முறையும் அவன் நலமாக திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. மனதில் தீ எறிந்துகொண்டிருந்தது. மிகுந்த பற்றமாக ஒவ்வொரு நிமிடமும் கழிந்து கொண்டிருந்து. அவனது பிரிவு தாங்க முடியாமல் சிறிய வயது முதல் எவ்வளவு துடித்திருப்பேன். எப்பொழுதும் எங்கள் மனத்துயரை புரிந்து கொள்ளமலே அண்ணா இப்படி செய்து கொண்டிருந்தான். அன்று ஒரு வியாழக்கிழமைதான் அண்ணா எங்களை இப்படி பதற வைத்து விட்டு களத்திற்கு சென்றிருந்தான்.

அம்மா கோணவிலுக்கு பவா அன்றியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பவா அன்றியின் மகள் என்னுடன் படித்த துஸியந்தி அப்போது நடைபெற்ற சமரில் வீர மரணம் அடைந்திருந்தாள். அவளது வீரமரண அஞ்சலிக்காக சென்று திரும்பிய சில நாட்களில் எட்டாவது நாள் செய்யும் மரணச் செலவு என்ற கிருத்திய நிகழ்விற்கு அம்மா சென்றிருந்தார். சாதாரண தரம் படிக்கும் பொழுது துஸியந்தியின் பாடசாலையில் போராளிகள் வந்து பிரச்சாரம் செய்த பொழுது துஸியந்தி போராட்டத்தில் இணைந்திருந்தாள். மிகவும் துணிச்சல் மிகுந்த பெண்ணான துஸியந்தி, ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த பற்றுக்கொண்டவள். மாவீரர்களின் கல்லறைகளை வணங்குபவள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு எப்பொழுதும் சென்று கொண்டிருப்பவள். எனக்கு மிகவும் நெருக்கமான அந்தத் தோழி விடுதலைப்போராட்டத்தில் இணைந்து வீரமரணம் அடைந்தது என்னை மிகவும் துயரப்படுத்திய மற்றொரு வீரமரணமாக இருந்தது. அவள் துப்புரவாக்கி அழகுபடுத்தி வணங்கிய துயிலும் இல்லத்திலேயே அவளது வெற்றுடல் விதைக்கப்பட்டிருந்தது. ஆனையிறவு முகாம் தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களினால் அதிக எண்ணிக்கையிலான வீரமரணங்கள் நிகழ்ந்து விட்டன. நகரங்களையும் கிராமங்களையும் வெளிகளையும் கைபற்றுவதற்காக உயிர் வலிக்கிற மரணங்களை போராளிகள் எதிர்கொண்டார்கள். அப்படியான உன்னதமான மரணங்களினால்தான் வன்னி நிலத்தை மக்கள் மீள பெற்றுக்கொள்ள முடிந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை எங்கள் வீட்டை இரண்டு போராளிகள் வந்து தேடிக் கொண்டிருந்தார்கள். போராளிகள் வீடுகளை விசாரித்துக் கொண்டிருந்தால் அது பெரிய பதற்றத்திக்கு உள்ளாக்கி விடும். நான் மிகவும் பயந்தபடி என்ன பிரச்சினை என்று போராளிகளை கேட்ட பொழுது அண்ணா சிறிய காயத்திற்கு உள்ளாகியிருப்பதால் அவன் என்னை பார்க்க ஆசைப்படுவதாக மெல்ல மெல்ல கூறினார்கள். நான் பதற்றத்தின் உச்சத்திற்கு சென்று விட்டேன். அவர்கள் என்னை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். கிளிநொச்சி முறிப்பு என்ற இடத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் மருத்துவ முகாமில் அண்ணா அனுமதிக்கப்ட்டிருந்தான்.

மோடட்hர் சைக்கிளில் அவர்கள் என்னை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். மோட்டார் சைக்கிள் வேகமாக செல்ல மறுப்பதைப் போலிருந்தது. அது நகர நகர எனக்குள் அண்ணாவின் நினைவுகள் வந்து மோதிக்கொண்டிருந்தன. அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அண்ணா என்னுடன் கதைக்கவேண்டும் என்றும் என்னை பார்க்க வேண்டும் எனறும் கூறியபடியிருந்ததாக அந்தப் போராளிகள் எனக்கு கூறிக்கொண்டு வந்தார்கள். என்னால் அவர்களுடன் பேச முடியாதிருந்தது. வார்த்தைகள் வர மறுத்தன. என்னை பயப்பிட வேண்டாம் என்று அந்தப் போராளிகள் ஆறுதல் படுத்திக்கொண்டு வந்தார்கள். எப்படி பயப்பிடாமலும் பதற்றம் கொள்ளாமலும் இருக்க முடியும். அந்த மருத்துவ முகாம் வந்துவிட்டது. என்னை ஏற்றி வந்த போராளிகளும் பதற்றத்துடன் சைக்கிளை நிறுத்திய பொழுது சிறிய விபத்து நிகழ்ந்ததால் எனது கையிலும் காலிலும் சிறிய காயம் ஏற்பட்டுவிட்டது.

இவர்தான் பிரசன்னாவின் தம்பி என்று கூறிக்கொண்டு என்னை அழைத்துச் சென்றார்கள். என்னை அறிமுகப்படுத்தியவுடனேயே அங்கு நின்ற போராளியின் முகத்தில் பதற்றம் அதிரித்தது. என்னை வரவேற்பறையில் இருத்திவிட்டு உள்ளே சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நீண்ட நேரமாகியது. நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து முதன் முதலில் தஞ்சமடைந்திருந்த முறிப்பு பகுதியில்தான் அந்த போராளிகள் மருத்துவ முகாம் அமைந்திருந்தது. அண்ணாவும் நானும் தேங்காய் வேண்டுவதற்காகவும் பால் வேண்டுவதற்காகவும் நடந்து திரிந்த தெருவிலேயே அந்த முகாம் அமைந்திருந்து. அண்ணா பற்றிய எல்லா நினைவுகளும் வந்து மனதில் குவிந்து கொண்டிருந்தன.

உயிர்மை டிசம்பர் 2009

Thursday, November 26, 2009

நகர் மீள் நாட்கள்


போரும் வாழ்வும் 03

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.


000

கிளிநொச்சிக்கு திரும்புகிற நாட்கள் வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். ஒரு நாள்கூட ஒரு நிமிடம்கூட அதைப் பார்க்க முடியும் என்று நினைக்கவில்லை. கிளிநொச்சியை முழுமையாக இழந்த உணர்வும் மீட்க முடியாத ஆக்கிரமிப்பின் அச்சமுமே மனதில் பெரியளவிலான படமாக விழுந்திருந்தது.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து வகுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் கிளிநொச்சியைப் பிரிந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். ஒரு கோடை காலம் வரும்பொழுது நாங்கள் கடுமையான வறுமைக்குள் அகப்பட நேர்ந்தது. காணி முழுவதும் வறண்டு போயிற்று. பெரிய மரங்களும் வாடத்தொடங்கிவிட்டன. போர்களின் பின்னால் ஏற்படுகிற விளைவான அலைச்சலும் அங்க இழப்பும் அன்றாட வாழ்வுப் போராட்டமும்தான் உன்மையில் மிகவும் கொடுமையானவை. ஒரு கட்டத்தில் மணியங்குளத்தில் இருந்த வாழ்வு சரியத் தொடங்கியது. புலிகளது வெற்றிகள் மக்களை எத்தகைய நிலையையும் தாங்கிக்கொள்ள வைத்ததுடன் உற்சாகத்தை அளித்துக்கொண்டிருந்தது. கிளிநெச்சியைப் பிரிந்தபொழுது வாழ்வுக்கு பெருந் தவிப்புக்களை நாங்கள் அனுபவிக்க நேர்ந்தது.

அகதிகளுக்கான நிவாரணத்தை நம்பியே வாழும் நிலையிலிருந்தோம். நிவாரணப்பொருட்களை பெறுவதற்காக அதிகாலை விடிய முதல் நான்கு மணி அல்லது மூன்று மணிக்கே எழுந்து சென்று நிவாரண அட்டடைகளை அடுக்க வேண்டியிருக்கும். ஒரு முறை அப்படி நிவாரண அட்டை மற்றும் உரப்பைகளை எடுத்துக் கொண்டு மூன்றரை மணிக்கு எழுந்து நிவாரணக் கடைக்கு சென்று கொண்டிருந்தேன். மிகுந்த இருட்டாக இருந்தது. வானத்தை பார்த்தபடி அதன் ஓரளவான வெளிச்சத்தை வைத்துத்தான் தெருவால் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. அது ஸ்கந்தபுரம் இரண்டாவது பாடசாலை அமைந்திருக்கும் பகுதி. பக்கத்தில் ஒரு கச்சான் விற்கும் கடையிருந்தது. மழையைக் கண்டதும் அந்தக் கடைக்குள்ளே நின்றுகொண்டேன். மழை தொடர்ந்து பெய்தால் என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஊரப்பையை தலையில் பிடித்தபடி போகவேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் மழை உடனேயே நின்று விட்டது. அந்தக் கணத்திலேயே ஒரு வெளிச்சம் தெரிந்தது. ஒரு ஆள் பீடியை மூட்டினார். நான் திடுக்கிட்டேன். அவருக்கு முன்னால் காட்டு மரங்களை ஏற்றிய மாட்டு வண்டில் ஒன்று நின்றது. நான் வந்த வேகத்திற்கும் இருட்டுக்கும் அதை கவனிக்காது சென்றிருந்தால் அந்த மரங்கள் என்னை துளைத்திருக்கும் அதை இன்று வரை நினைக்கும்பொழுது அச்சமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

நான் மழைக்கு ஒதுங்கிய கச்சான் கடையை எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒரு அம்மாதான் நடத்தினார். அவரை கச்சான் அக்கா என்றே எல்லோரும் சொல்லுவார்கள். பள்ளிக்கூடம் வரும்பொழுது அந்த அம்மா கச்சான்களை பைகளில் இட்டு நிரப்பிக்கொண்டிருப்பார். இடையிடையே அவரது பிள்ளகைளும் அந்தக் கடையில் நி;றபார்கள். அவரது கணவன் கிளிநொச்சிக்கு செல்லும்பொழுது இராணுவத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர்களின் சொந்த ஊர் கிளிநொச்சயில் உள்ள செல்வாநகர் என்ற கிராமம். எங்கள் குடியிருப்பில் இப்படி தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஊர்களுக்கு செல்லுபவர்களை பார்த்திருக்கிறேன். இரவிலேயே அவர்கள் ஊருக்குச் செல்லுவார்கள். பின்னேரம் ஆக குடியிருப்பிலிருந்து புறப்படுவர்கள். அவர்களை அனுப்பிவட்டு அவர்களின் குடும்பங்கள் தெருவில் வந்து காத்துக்கொண்டு நிற்பார்கள். இரவிரவாக நடந்து அங்கும் இங்குமாக திரிந்துகொண்டிருப்பார்கள்;.

அவர்களில் சிலர் கொஞ்சம் தாமதாக திரும்புவார்கள். அவர்களை கண்டதும் மனைவி பிள்ளகைள் மகிழச்சியில் குதிப்பார்கள். ஊரிலிருந்து பழங்கள் காய்கள் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு வந்து தமக்கும் எடுத்துக்கொண்டு மிகுதியை விற்பார்கள். எங்கள் குடியிருப்பில் இப்படி வாழ்நத சனங்களும் இருந்தார்கள். சிலர் தாமதமாக வந்தாலும் சிலர் இரண்டு நாள் மூன்று நாள் என தாமதமாவதுடன் இறுதியில் வராமலே விட்டிருக்கிறார்கள். இராணுவத்திடம் உயிருடன் இருப்பார்கள். திரும்புவார்கள். என காத்துக் காத்து ஏமாந்த பல குடும்பங்கள்; இருக்கிறார்கள். அப்படி இன்று வரை கச்சான் விற்கும் அம்மாவின் கணவன் வீடு திரும்பவில்லை. எங்கள் குடியிருப்பி;ல் இப்படி கணவனையும் பிள்ளகைளையும் இழந்தவர்களுக்கு ஒரு சங்கமே இருந்தது.

ஊரை பிரிந்த பிறகு மரணம் நிச்சயமின்மை என்பவற்றுக்குள்ளான வாழ்வே எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருந்தது. நிவாரண அரிசியில் வெறும் கஞ்சியும் மாவில் வெறுமையாக குழைத்து சுட்ட ரொட்டியையும் தின்று கழிக்கும் நாட்கள்தான் கடந்துகொண்டிருந்தது. நிவாரணத்தையும் ஆகக்குறைநதது 15 நாட்கள்தான் சமாளிக்க முடியும். மிகுதி நாட்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இப்படித்தான் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருந்த எல்லா வீடுகளிலும் நிலவரம் இருந்தது. கஞ்சிக்கும் ரொட்டிக்குமே அடுத்த பதினைந்து நாட்கள் காத்திருக்க ணே;டிய நிலையில் சனங்கள் இருந்தார்கள். எல்லோருமே பட்டினியலும் வறுமையிலும் ஒன்றாக இருந்திருக்கிறோம். இந்தக் காலத்தில் பேராளி மாவீரர் குடும்பங்களுக்கு விடுதலைப் புலிகளால் மாதாந்தம் சிறியளான நிவாரணப் பொருட்கள் வழங்கபபட்டுள்ளன. இப்படியே நிவாரணத்தையே எதிர்பார்த்து வாழவேண்டிய நிலையில் மக்கள் இருந்தார்கள். எப்பொழுது நிவாரணம் என்று காத்துக் கொண்டிருப்பதும் அதற்காக எப்பொழுதும் கிராமசேவகர் அலுவலகத்திற்கும், நிவாரணக் கடைக்கும் சனங்கள் அலைந்து கொண்டிருப்பவர்களாகவும் சனங்கள் இருந்தார்கள்.

இப்படியொரு இறுக்கமான காலகட்டத்தில் சிங்கள அரசிற்கு எதிராக பேராடியே தீர வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக திரண்டு நின்றார்கள். இராணுவம் மாங்குளத்தை கைப்பற்றிய வேளையிலேயே விடுதலைபபுலிகள் கிளிநொச்சி நகரம் மீது தாக்குதலை நடத்தினாhர்கள். இராணுவத்தால் ஒரு பொறிக்குள்ளும் கடுமையான முற்றுகைக்குள்ளும் வைத்திருக்கப்பட்ட கிளிநொச்சி நரத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றுவதற்காக சாதுரியமாகவும் துணிகரமாகவும் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். கிளிநாச்சி நகரத்தை கைப்பற்றுவதற்கு பல வேவுப் போராளிகள் மிகக்கடுமையாக உழைத்திருந்தார்கள். தாககுதலை எப்படி நடத்த வேண்டும் என்பதை புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டிருந்தனர்.

இராணுவத்தின் நடவடிக்கைகளால் முழு ஈழ மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். வன்னி மக்கள் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்ப்பட்டிருந்தபோது யாழ்ப்பாண மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா என்று ஒட்டுமொத்த ஈழ மக்களும் ஆக்கிரமிப்பு வாழ்வுக்குள் அதிகாரத்தின் தாக்குதல்களுக்குள் கடுமையான துன்பங்களை எதிர்ககொண்டார்கள். குறிப்பாக 1996 ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தல் ஆளப்பட்ட யாழ்ப்பாணம் படுகொலைகள், அதுவும் இளைஞர் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என்று கடுமையான அடக்குமுறைகளையெல்லாம் எதிர்கொண்டது. எல்லாவற்றினது விளைவும் வன்னியில் பாரிய பேராhட்டம் ஒன்றை நடத்துவதற்கு புலிகளையும் மக்களையும் தூண்டியிருநதது. யாழ்ப்பாணம் பற்றிய நெஞ்சை உலுக்கும் கதைகள் வன்னியில் கடுமையான எழுச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கால இராணுவ ஆக்கிரமிப்பு ஆளுகையின் மறக்க முடியாத அவலமாக செம்மணிப் படுகொலைகள் சிங்கள இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டன.

தியாகி திலீபனின் நினைவு நாளின் 11 ஆம் நாள் அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடக்கினார்கள். கிளிநொச்சி நகரத்தை மற்றும் அதனைச் சுற்றியிருந்த இராணுவத்தின் குவிந்திருந்த ஆக்கிரமிப்பை விடுதலைப் புலிகள் தகர்க்கத் தொடங்கிளனார்கள். அதே ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆம் திகதி கிளிநொச்சிமீதான தாக்குதலை நடத்தியபோதும் அது விடுதலைப் புலிகளுக்கு தோல்வியை ஏற்படுத்தியது. அந்தத் தோல்வி அடுத்த தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்ற அறிவை ஏற்படுத்தியிருந்தது. ஓயாத அலைகள் இரண்டு எனப் பெயரிடப்பட்ட இந்த மீட்பு சமரின் பொழுது மூன்று நாட்களில் தமீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பறினார்கள். கிளிநொச்சியில் அமைக்கப்ட்டிருந்த உயர் பாதுகாப்பு இராணுவ வலயங்கள் இராணுவ முகாங்கள் வழி நடத்தல் தளங்கள் ஆட்லறித் தளங்கள் ஆயுதத் தளங்கள் என்பன புலிகளால் அழிக்கப்பட்டன. 1500க்கும் மேலான இராணுவம் பலியாகியிருந்ததுடன் 2000 க்கு மேலான இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். எஞ்சிய இராணுவத்தினர் ஆனையிறவுக்கு தப்பிச் சென்றார்கள். பெண் புலிகளின் உக்கிரமான தாக்கதல்கள் கிளிநொச்சி நகரத்தை மீட்பதற்கு முக்கிய பங்காற்றின. சமரில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளும் கடுiயாக உழைத்தார்கள். வீராவேசமான தாக்குலை நடத்தினார்கள். தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளது வழி நடத்தல்கள் பேராளிகளது அனுபவங்கள் தியாங்கள் என்பவற்றை இங்கு முழுமையாக எழுதிவிட முடியாது. செறிந்த அனுபவங்களை அவர்கள் கிளிநnhச்சி மீட்பு நடவடிக்கையில் பெற்றுக் கெண்டார்கள்.

கிளிநொச்சியை எப்படி மீட்டோம் என்று பின்னர் விளக்கமடிளித்த போராளிகளது சொற்களை கேட்கும் பொழுது அவர்கள் அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. வீரமரணங்கள் ஒரு பக்கத்தில் நெஞ்சை உலுக்கிக்கொண்டிருந்தது. படுகாயங்களால் வாய்க்கால்களில் குருதி பாய்ந்துகொண்டிருந்தது. கிளிநொச்சி நகரம் குருதி தோய்ந்த நிலமாக இருந்துள்ளது. இராணுவத்தின் குருதியும் பிணமும் எங்கும் சிதறுண்டு கிடந்தன. அவற்றை அகற்றுவதற்கு மக்கள் பலர் பேராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். சந்திரிகா அரசாங்கம் இராணுவச சடலங்களில் முழுவற்றையும் பெறுப் பேற்கவில்லை. மாறிமாறி உயிர்கள் பலியிடப்பட்டதேசமாக கிளிநொச்சி நகரம் இருந்திருக்கிறது. அரசாஙகம் கிளிநொச்சி நகரத்திற்காக எத்தனையோ இராணுவத்தின் உயிர்களை கொடுத்து ஆக்கிரமித்திருக்கிறது.

நகரத்தை மீட்பதற்காக 300க்கும் அதிகமான பேராளிகள் வீரமரணம் அடைந்தார்கள். நகரம் மீட்கப்பட்டது என்ற யெ;தி அதிகார பூர்வமாக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி நகர மீட்பு வன்னி மக்களையும் முழு ஈழ மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உலகம் வியப்பாக பார்த்தது. தமீழ விடுதலைப் புலிகளது கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதன் முதலில் கொடியேற்றும் நிகழ்வு மக்கள் முன்னிலையில் இடம்பெற்றது. லொறிகளிலும் பேரூந்துகளிலும் மக்கள் கிளிநொச்சி நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். எங்கள் குடியிருப்பிலிருந்து சென்றவர்களில் நானும் இருந்தேன். இரண்டு ஆண்டுகளின் பின்னர் கிளிநொச்சியைப் பார்த்தேன். சிதைந்து நிறம் வெளுத்துப் பேயிருந்தது. இராணுவம் எங்கும் குவிந்திருந்ததிற்கான ஆக்கிரமித்திருந்ததிற்கான அடையாளங்களே இருந்தன. நகரம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. கடைகள் வீடுகள் எல்லாம் அழிந்திருந்தன. எஞ்சியவற்றில் இராணுவம் குடியிருந்தமைக்கான அடையாளங்ளே இருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பின் சிங்கள வரிகளும் கொடிகளும் பெயர்களுமாக கிளிநொச்சி நகரம் இருந்தது., பாழடைந்து அழிவின் உக்கிரமான சின்னமாக கிடந்தது.

எனினும் எங்கள் நகரத்திற்கு திரும்பிவிட்N;டாம் என்ற மகிழச்சி பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. கிளிநொச்சி மீட்கப்பட்டதன் மகிழச்சியை புலிகள் மக்களுக்கு கிளிநொச்சி நகரத்தில் வைத்து வழங்கினார்கள். வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தேசியக்கொடியை ஏற்றினார்கள். நான் திரிந்த தெருக்களையும் கடைகளையும் சந்திரன் பூங்காவையும் கல்வி கற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரியையும் பார்த்துக்கொண்டு வந்தேன். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக பெரிய மண்மேடு எழுப்பட்டடு அப்பொழுது அகற்றப்பட்டிருந்தது. எனது பாடசாலை அழிந்து அழிவின் பெரிய சினனமாக நின்று கொண்டிருந்தது. வீட்டிற்குச் செல்லும் உள்ளொங்கை வரை சென்று பார்த்தேன். மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் வீட்டிற்குச் செல்லவில்லை. ஆனால் அங்கிருந்த வீடுகள் எல்லாம் அழிந்து அதன் மேல் காடுகள் அடர்ந்திருந்தன. இராணுவம் வாழ்ந்த குகைகளைப்போலான காவரண்கள் மாளிகைகள் என்பவற்றை சனங்கள் பார்வையிட்டார்கள். இராணுவம் எவ்வளவு பலத்துடன் கிளிநொச்சியில் இருந்தது என்பதை அவற்றை பார்க்கும் பொழுது புரியக்கூடியமாதிரி இருந்தது. சனங்கள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பான எல்லாத் தெருக்களிலும்; நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.

அண்ணா கிளிநொச்சி சமரில் ஈடு பட்ட பின்னர் எங்களை சந்திப்பதற்கு வரும்படி சொல்லியனுப்பயிருந்தான். அண்ணாவைப் பற்றி இரண்டு வருடமாக சரியான தகவல் தெரியாதிருந்த நிலயில் அந்தச் செயதி பெரிய ஆறுதலாக இருந்தது. ஜெயசிக்குறு தாக்குதல்களில் அவன் ஈடுபட்டது சில பேராளிகளின் வாயிலாக தெரிய வந்த பொழுதும் எங்கு நிற்கிறான் என்ற சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மணியங்குளத்தலிருந்து நாங்கள் அண்ணாவைப் பார்க்க கிளிநொச்சிக்கு புறப்பட்டோம். நானும் அம்மாவும் தங்கச்சியும் துஸியந்தியும் நடந்து வந்து கொண்டிருக்கிறோம். முறிப்பில் வைத்து போராளிகளின் வாகனம் ஒன்றில் ஏறி கிளிநொச்சிக்கு வந்தோம். நான் கிளிநொச்சி வெற்றி நாளிலன்று வந்திருந்தபோதும் அம்மா அப்பொழுதுதான் ஆக்கரமிப்பின் பின்னர் வந்திருந்தார். கிளிநொச்சியில் இறுதியாக காவல்துறை அமைந்திருந்த இடத்தில் நின்றுகொண்டு அண்ணாவை வரச் சொல்லியனுப்பினோம். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கடமையிலிருந்த அண்ணா எங்களிடம் வந்தான்.

அண்ணாவைப் பார்த்ததும் அம்மா அழத் தொடங்கினார். எங்களை ஏன் நடுத் தெருவில் விட்டுச் சென்றாய் என்று கேட்டார். அண்ணாவின் வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன.

என்னம்மா செய்வது! நாங்கள் பேராடத்தானே வேண்டும் என்று அம்மாவுக்கு சொன்னான். இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லா சண்டைகளும் முடிந்துவிடும் அதன் பின்னர் நாங்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம் என்று கூறினான். எங்கள் நிலமையைச் சொன்னால் நீ இயத்திலிருந்து விலத்திவிடலாம் என்று அம்மா சொல்ல நான் விரும்பித்தானே வந்தேன். எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன என்று சொன்னான். என்னிடம் ஒரு டயரியைத் தந்துவிட்டு இதைக் கொண்டு போய் வைத்திரு நான் திரும்பி வரும் பொழுது வேண்டுகிறேன் என்று அதை என்னிடம் தந்தான். அந்த இடத்திலேயே வைத்து அதை தட்டிப் பார்த்தேன். சாதாரணமான குறிப்புப் புத்தகத்தில் அண்ணா பழகிய நிறைய போராளிகளின் வரிகள் கையொப்பங்கள் இருந்தன. அவர்கள் சமர்களுக்கு செல்லும் பொழுதும் பயிற்சி எடுக்கும் பொழுதும் இப்படி பல்வேறு சந்தர்பங்களில் எழுதிய கனத்த சொற்கள் அதில் நிரம்பியிருந்தன. வீரவேங்கை, கப்டன், லெப்டினன் என்று மாவீரர்களது நிலைகளை அண்ணா எழுதி அவர்கள் வீர மரணம் அடைந்த திகதிகளை அதில் குறித்து வைத்திருந்தான். அவர்களுக்குள் எவ்வளவு நெருக்கம் கனவுகள் இருந்தன என்பதையும் தவிப்புகள் இருந்தன என்பதையும் அவர்களது வாழ்வையும் அந்தச் சொற்கள் உணர்த்தின.

அண்ணாவுக்கு அப்பொழுது 18 வயதுதான். எல்லாப் போராளிகளும் அண்ணாவை வெள்ளை வெள்ளை என்று அழைத்துக்கொண்டு போனார்கள். வெள்ளை அம்மா என்ன வாங்கி;க்கொண்டு வந்திருக்கிறா? எங்களுக்கு இல்லையா? என்று அவர்கள் போகவும் வரும் கேட்டுக்கொண்டு சென்றார்கள். எல்லாமே உங்களுக்கத்தான் என்று அண்ணா சிரித்துக்கொண்டு சொன்னான். எனக்கு வர விரும்பமில்லை. நீங்கள் எற்காகவும் யோசிக்காதீங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு இங்க நிறைய போராளிகள் இருக்கிறார்கள். எல்N;லாரும் எங்களை மாதிரிதானே என்று அம்மமாவைப் பார்த்து சொன்னான். உங்களுக்கு தகவல் சொல்ல எவ்வளவோ முயற்சித்தேன். முடியவில்லை அம்மா. என்னை தேடி அலைந்திருப்பீங்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் போராட வேண்டும் என்பதில் உறுதியான இலட்சியம் எனக்கிருந்தது. உங்கள் பிள்ளைக்கு ஒன்றும் நடக்காது நான் மறுபடியும் திரும்ப வருவேன் என்று அணணா சொல்லிக் கொண்டிருந்தான்.

நானும் அண்ணாவும் நடந்து திரிந்த அதே கிளிநொசசி நகரத்தில் ஒரு போராளியாக அந்த நகரத்தை மீட்ட பின்னர். அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அணணாவில் எனக்கு நிறைய கோபமாக இருந்தது. எங்களை நடுத் தெருவில விட்டுச் சென்றவன். அதனால் அம்மா எவ்வளவு துன்பப்பட்டிருப்பார். மிகவும் கொடுமையான வறுமையை நாங்கள் அனுபவிக்க நேர்ந்தது எல்லாம் அவனுடன் என்னை கோபப்பட வைத்தது. நான் பேசாமல் அவர்கள் கதைத்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னடா பார்க்கிறாய் என்று அண்ணா என்னைக் கேட்டபடி சிரித்தான். நானும் அண்ணாவும் எந்த நேரமும் வீட்டில் அடிபட்டுக்கொண்டிருப்போம். அம்மா வரும்பொழுது இருவரும் முறையீடுகளை வைத்துக்கொண்டிருப்போம். பள்ளிக்கூடம் போய் வரும் பொழுது கடைக்கும் போகும் பொழுது என்று எப்பொழுதும் சண்டை வந்துவிடும்.

அண்ணா பொறுப்பில்லாது நடக்கிறான் என்று எனக்கு எப்போழுதுமே கோபமாக இருக்கும். அண்ணா ஒவ்வொரு முறையும் இயக்கத்திற்கு சேரும் பொழுது அம்மாவுடன் சென்று அவனை வீட்டுக்கு வரும்படி கேட்டுக்கொண்டிருப்பேன். நான் சண்டை பிடிக்க மாட்டேன். அம்மா பாவம். நீ இல்லாமல் நாங்கள் இருக்க மாட்டோம். வீடே இருண்டு கிடக்கிறது என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம். அண்ணா விரும்பி இணைந்ததாகவும் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறான் என்றே இயக்கப் பொறுப்பாளர்கள் சொல்லுவார்கள். அவர் வந்தால் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்றே அவர்கள் சொல்லுவார்கள்.

அண்ணா இப்படி நடந்து கொள்ளுவது அம்மா அப்பாவுக்காக காத்திருந்து காலத்தை கழித்தது எல்லாம் இவற்றுடன் கடுமையான வறுமை என்பன எங்களை எல்லாச் சொந்தக்காரார்களுடனும் பிரித்து விட்டது. அவர்கள் எங்களை தீணட தகாத சக்கதியாகவே பார்த்தார்கள். அரச உத்தியோகங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு எந்த அடிப்படையுமற்ற வாழ்வினை வாழும் எங்களை தங்கள் சொந்தம் என்று சொல்வே தயங்கினார்கள். அவர்களிடம் கையேந்துகிற உதவி பெறுகிற தவிர்க்க முடியாத நெருக்கடி இருந்ததை இன்று வரை என்னால் நினைத்துக் பார்க்க முடியவி;லலை. கடுமையான அதிகாரத் தொனி மற்றும் ஒடுக்குமுறைகளை அவர்கள் பிரயோகித்தார்கள். குறிப்பாக பெரிய மாமா, சின்ன மாமா என்ற அம்மாவின் இரண்டு அண்ணன்களின் சொற்களால் நடவடிக்கைகளால் நான் கடுமையான துன்பப்பட்டே எப்பொழுதும் திரும்பியிருக்கிறேன். அவர்களை கண்டாலே அசுரர்களைப் பார்ப்பதுபோலவே இருக்கும். அவர்களுடன் பேசும் பொழுது சொற்கள் வராது, நடுங்கும் எல்லாவற்றையும் சமித்து அவர்களிடம் உதவி பெறுகிற சூழ்நிலையிலிருந்து எப்பொழுது நாம் விடுதலை பெறுவோம் என்ற நாளுக்காக காத்திருந்தேன். அந்தச் சொந்தக்காரர்களுக்கு எங்களுடன் சிறியளவிலான இரகசியாமான உறவே இருந்தது.

அண்ணாவைப் பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. அண்ணாவை இயக்கத்திலிருந்து விலகி தரும்படி அம்மா பல இடங்களுக்கு அலைந்து கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் குடும்ப நிலைமையை கருத்தில் எடுத்து அண்ணாவை வீட்டுக்கு அனுப்பலாம் என்றே பொறுப்பாளர்கள் கூறினார்கள். விளிம்பு நிலையில் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்றே நாங்கள் காத்திருந்தோம். அடுத்த கட் தாக்குதல்களுக்கு தயாராகிக்கொண்ருக்கும் காலமாக அது இருந்தது. அண்ணா வீட்டுக்கு திரும்புவான் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்து. பெரிய சமருக்கு தயாராகிற காலத்தில் எப்படி விடுவார்கள் என்றே நினைத்தேன்.

இப்படி அண்ணாவுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்க அவன் பற்றி எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அண்ணா படுகாயமடைந்து வன்னேரியிலுள்ள சோலை என்ற இடத்தில் அமைந்திருக்கிற விடுதலைப் புலிகளின் வைத்திய சாலையில் இருப்பதாகவும் அறிவித்தார்கள். அம்மா பதறியடித்துக்கொண்டு வன்னேரிக்கு சென்றார். தொடையில் பின்பக்கமாக பெரிய காயம் ஒன்று அண்ணாவுக்கு ஏற்பட்டது. ஆனையிறவுப் பகுதியை நோக்கியுள்ள எல்லைப் பகுதியில் எதிர்பாராமல் ஏறபட்ட சமரிலேயே அந்தக் காயம் அவனுக்கு ஏற்பட்டது. என்னை எடுப்பதற்கு கடிதங்கள் அனுப்பினிர்களா? என்று அமமாவை அண்ணா கேட்டிருக்கிறான். சொன்னவர்கள். நான் தான் மறுத்தேன். நான் வர மாட்டேன் போராட வேண்டும் என்று அண்ணா உறுதியாக சொல்லிவிட்டான். நிறையவே வேலைகள் இருக்கின்றன என்று கூறிவிட்டான். அம்மா அண்ணாவை வீட்டுக்கு அனுப்பச்சொல்லிக் கேட்பதை நிறுத்திககொண்டார்.

ஆனையிறவில் இராணுவம் இருப்பதால் கிளிநொச்சியில் நிற்பது பாதுகாப்பற்ற உணர்வையே தந்தது. எவ்வேளையிலும் ஷெல்கள் எறியப்படலாம் என்ற அச்சத்தை தந்தது. எல்லா இராணுவமும் திரண்டு ஆனையிறவு பெரும் கோட்டையாக இருந்தது. அதனால் கிளிநொச்சியில் மக்கள் மீள குடியேறுவதற்கு எவ்வளவு நாட்கள் எடுககும் என்பதை அப்பொழுது கணக்கிட முடியவில்லை. புலிகள் கிளிநொச்சியில் பலமாக காலை ஊன்றிக்கொண்டார்கள். கிளிநொச்சியில் மீள் வாழ்வை ஏற்படுத்துவதற்காக ஆனையிறவு முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவம் அகற்றப்படவேண்டியிருந்தது.

நன்றி: உயிர்மை நவம்பர் 2009

Tuesday, October 27, 2009

கனவின் எழுச்சி மிகுந்த நாட்கள்

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது.


கனவின் எழுச்சி மிகுந்த நாட்கள்

ஸ்கந்தபுரம் முற்றிலும் புதிய இடமாக இருந்தது. கிளிநொச்சி நகரம் துண்டு துண்டாக உடைந்து ஸ்கந்தபுரத்திலும் அக்கராயனிலும் மல்லாவியிலும் புதுக்குடியிருப்பிலும் முழங்காவிலும் என்று பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருந்தது. நாங்கள் ஸ்கந்தபுரம் முருகன் கோயிலில் தங்கியிருந்தோம். அந்தப் பகுதிகள் முழுக்க தரப்பால்களாலும் அகதிகளாலும் நிரம்பியிருந்தது. கோயிலில் தூண்களைச் சுற்றியும் மூலைகளிலும், வெளியில் தாழ்வாரங்களிலும் மரங்களின் கீழாகவும் அகதிகள் நிரம்பியிருந்தனர். எந்த அடிப்படையுமற்ற வாழ்க்கை வறுமை நோய் என்று பெருந்துயரங்கள் பீடித்தன. கோயிலுக்குள் இடமில்லாததினால் பக்கத்தலிருந்து காட்டு ‘ஜாம்’ மரத்தின் கீழ் அம்மாவின் பழைய சீலையை சுற்றிக் கட்டி விட்டு அதற்குள் இருந்தோம். தங்கச்சி குழந்தை, நான் பன்னிரண்டு வயதுச் சிறுவன் எங்களை வளர்ப்பதற்காக அம்மா பக்கத்தலிருந்த வீடு ஒன்றில் வேலைக்குச் சென்றார்.

மலசலம் கழிக்க பெரிய சிரமங்களை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள் சனங்கள். கோயிலைச் சுற்றி நடக்கும் பொழுது எங்கும் மலங்கள் மிதிபட்டுக்கொண்டிருந்தன. ஸ்கந்தபுரம் பகுதியில் குளிப்பதற்காக, கழிவுகள் எறியப்படும் வாய்க்கால் ஒன்றே இருந்தது. ஸ்கந்தபுரம் சிறு நகர சந்தியின் கீழாக அது பாய்ந்து கொண்டிருக்கும். எனக்கு முதலில் செங்கமாரி என்ற நோய் பீடித்தது. அந்த நோய் வருகிறபோது வெம்மையற்ற குளிர்ந்த சூழலில் வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு வருத்தம் வந்து விட்டதால் கோயிலினுள் என்னை தங்க வைத்தார்கள். பிறகு அம்மா தங்கச்சி என்று எல்லோருமே நோயால் பீடிக்கப்பட்டார்கள். குளிப்பது தூங்குவது எல்லாமே நிம்மதியற்ற பொழுதுகளாக போய்க்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்கள் அந்தக் கோயிலுனுள் வாழ்வு போய்க்கொண்டிருந்தது. கிளிநொச்சியை இராணுவம் முழுமையான பிடிக்குள் வைத்திருந்ததுடன் கிளிநொச்சியை தாண்டி இராணுவ நடவடிக்கைகளை அரசு தொடங்கியது.

கோயில்கள் பள்ளிக்கூடங்களில் இருந்த சனங்கள் அக்கராயன் மணியங்குளம் வன்னோரி ஆனைவிழுந்தான் முக்கொம்பான் ஜெயபுரம் முழங்காவில் மல்லாவி துணுக்காய் பாலிநகர் மன்னார் என்று, சனமற்ற காடுகளை வெட்டி தஞ்சமடைந்தார்கள்;. இப்படி கிளிநொச்சிக்கு வடக்குப்பக்கமாக தஞ்சமடைந்திருக்க தெற்குப்பக்கமாகவும் அகதிகள் பரந்து இருந்தனர். புதுக்கடியிருப்பு, முல்லைத்தீவு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற பகுதிகளிலும் இப்படித்தான் பரந்திருந்தார்கள். வன்னி நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. வடக்கும் பக்கமாகவும் மேற்பக்கமாகவும் மக்கள் ஒதுங்கியிருந்தனர். ஏ-9 வீதியை இலக்கு வைத்தே இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கிளிநொச்சியிலிருந்து முன்னேறி திருவையாறு வரை இராணுவம் நிலைகொண்டிருந்தது. உதயநகர், இரத்தினபுரம், ஆனந்தபுரம் போன்ற பகுதிகளில் இராணுவத்தின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. அந்தப் பகுதிகளுக்கு சிலர் தமது வீடுகளுக்கும் சிலர் ஆளில்லாத வீடுகளின் பொருட்களை எடுப்பதற்கும் சென்று இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்னர். அப்படி கொலை செய்யப்பட்டவர்களை இராணுவம் மலக்குழிகளில் போட்டு மூடி விட்டிருந்தது. உருத்திரபுரம் என்ற இடத்தில் இப்படி வெட்டி மலக்குழியில் போடப்பட்டவர் உயிருடன் இருந்து சில நாட்களின் பின் மலக்குழியின் மூடியை விலக்கி வெளியில் வந்து, தப்பி வந்திருந்தார். ஒரு முறை எங்கள் கிராமத்தலிருந்த ‘கிளியன்’ என்பவரை அவரது சிறு மகனின் முன்னால் தலையை வெட்டி கொன்ற இராணுவம் அந்த சிறுவனை திருப்பி அனுப்பியிருந்தது.

இரணைமடுச் சந்தியின் வாயிலாகவே வடக்கு மேற்கு பயணத் தொடர்பு இடம்பெற்றது. இரணைமடு துருசு கிட்டத்தட்ட இரண்டறையடி அகலமான துருசால்தான்; மக்கள் நடந்து சென்று துருசு நோக்கி வருகிற பேரூந்துகளில் திரும்புவார்கள். அந்தக்காலத்தில் ஷெல் தாக்குதல்கள் நடக்கலாம் இராணுவ முற்றுகைகள் வழிமறிப்புக்கள் நடக்கலாம் என்பதற்காக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுpக்கு மிக நீண்ட காலமாக செல்லாதவர்கள் இருக்கிறார்கள்.

இராணுவம் மக்களை அண்மித்துதான் நின்றிருந்தது. அப்பொழுது மக்கள் எவரும் இராணுவத்திடம் சரணடைந்தது கிடையாது. இராணுவம் சனங்களது குடியிருப்புகள்மீது செல்களை எதிர்பாராமல் எறிந்து கொண்டிருக்கும். மல்லாவி, அக்கராயன், ஸ்கந்தபுரம் போன்ற சனச் செறிவான பகுதிகளை இராணுவம் இலக்கு வைத்து ஷெல்களை எறிந்திருக்கிறது. பொருளாhரத்தடை, உணவுத்தடை, மருந்துத்தடை என பல்வேறு தடைகளை நிகழ்த்தி ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் வன்னிச் சனங்களையும் இலங்கை அரசு அடக்கிக்கொண்டிருந்தது. மண்ணையும் ஆக்கிரமித்து சனங்களை அழிக்கவே இராணுவம் படையெடுத்து வருவதாகவும் அரசு யுத்தத்தை நடத்துவதாகவும் சனங்கள் கருதினார்கள்..

எங்களை அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் என்ற அமைப்பு மணியங்குளத்தில் காட்டை வெட்டி குடியிருத்தியது. எங்களுடன் முதலில் அறுநூறு குடும்பங்களும் ஆயிரம் குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டன. புதிய குடியிருப்பு, பழைய குடியிருப்பு, விநாயகர்குடியிருப்பு என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டன. அங்கயற்கண்ணி குடியருப்பு, காந்தரூபன் குடியிருப்பு போன்று மாவீரர்களது பெயர்களிலும் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. மணியங்குளம் என்ற கிராமத்தில் குளத்திற்குப் பக்கத்தலிருக்கிற காட்டை வெட்டி நாங்கள் குடியமர்த்தப்பட்டோம். குளத்தின் கீழாக ஒரு பக்கத்தில் மக்கள் முன்பே குடியிருந்தனர். அதன் மறுபக்கத்தில் இந்த புதிய குடியிருப்பு ஏற்றப்பட்டது. மிகப்பெரிய காடாக இருந்ததால் பெரிய மரங்கள் எங்கும் நிறைந்து நின்றன. கால் வைக்க முடியதபடி கிணியா மரத்தின் அடிக் கட்டைகள் இருந்தன. அவற்றுக்கால் மெல்ல பாதையை எடுத்துக்கொண்டு வழங்ககப்பட்ட குடிசைக்கு சென்றோம். சிறியளவிலான குடிசை வேயப்பட்டிருந்தது. முருகன் கோயிலடியில் வெயிலிம் மழையிலும் நனைநது கொண்டிருந்தோம். மழைவரும்போது மரத்தின் கீழ் இருந்து பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடிச் சென்று கோயிலுக்குள் இருப்பதும் மழைவிட மரத்திற்கு கீழே திரும்புவதுமாகத்தான் இருந்தது வாழ்வு. சுவரற்ற அந்த வீட்டை பார்க்கும்பொழுது நிம்மதியாக இருந்தது. அமரவும் தூங்கவும் ஒரு கூரையுள்ள இடம் கிடைத்த ஆறுதல் ஏற்பட்டது. கொஞ்ச நாளிலேயே அந்த வீட்டுக்கு நாங்கள் குடி வந்துவிட்டோம்.

அங்கு முற்றிலும் புதிய மனிதர்கள். யாழ்ப்பாணம். பரந்தன், ஆனையிறவு, இயக்கச்சி எனப் பல இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வந்து குடியமர்ந்தார்கள். வெட்டி பரப்பட்ட அந்த காட்டை அகற்றி மரத்தின் அடிக் கட்டைகளை கிழப்பி அது ஒரு கிராமமாக மாறிக்கொண்டிருந்தது. சாம்பலும், குவித்து விடப்பட்ட வேர்களும், தறிக்கப்படுகிற மரங்களுமாகவும், எப்பொழுதும் மரம் தறிக்கும் சத்தமும் காடு எரியும் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் அம்மா வேலைக்கு போக நானும் சிறுவனாக இருந்தபடியால் சின்னக் கட்டைகளை சுத்தி மண்ணை கிழறி அவற்றை பிடுங்கி எரித்துக்கொண்டிருப்பேன். வேலி அடைத்து வீதிகளை அழகாக்கி வாழை மரங்களை வைத்தார்கள் அங்கிருந்த சனங்கள். பூஞ்செடிகள், பயன்தருகிற மரங்கள் என்று கிராமம் குளிர்ச்சியாக மாறிக்கொண்டிருந்தது. குளம் மேலாக இருப்பதனாலும் காட்டு மண் என்பதனாலும் எல்லாம் விளைகிற நிலமாக மணியங்குளம் இருந்தது.

நாங்கள் கிணறும் வெட்வில்லை. வேலியும் அடைக்கவில்லை. காட்டு மரங்களின் அடிக் கட்டைகளையும் பிடுங்கவில்லை. அவை மீணடும் துளிர் விட்டுக் கொண்டிருந்தன. எங்கள் காணியில் மட்டுமே பெரு மரங்கள் நிறைந்து நின்றன. அம்மா வேலைக்குப் போக நான் தங்கச்சியைப் பார்த்துக்கொள்ளுவேன். இப்படி கொஞ்ச நாட்கள் கழிந்ததும் தங்கச்சியை முதலாம் வகுப்பில் பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டு நானும் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கினேன். நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லுரி அக்கராயன் மகா வித்தியாலயத்துடன் சேர்ந்து இயங்கிவிட்டு பிறகு, பிரத்யேகமாக பக்கத்தில் உள்ள காணியில் கொட்டில் ஒன்றில் இயங்கியது. அதன் மற்றொரு பக்கத்தில் கிளிநொச்சிக் குளத்தடியில் அமைந்திருந்த கிளிநொச்சி மகா வித்தியாலயம் இயங்கிக்கொண்டிருந்தது.

எனது பள்ளிக்கூடத்திலே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும் அது எட்டு கிலோமீற்றர் தொலைவில் இருந்தபடியால் பக்கத்திலிருந்த உருத்திரபுரம் மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் சேர்ந்து கொண்டேன். அந்தப் பாடசாலை கிளிநொச்சி உருத்திரபுரத்தலிருந்து இடம்பெயர்ந்து மணியங்குளத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பாடசாலை இயங்கிய ஸ்கந்தபுரம் இரண்டாவது அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சூற்றி கனகாம்பிக்கைக்குளம் பாடசாலை, கனகபுரம் பாடசாலை, சிவநகர் பாடசாலை என்று இடம்பெயர்ந்த பாடசாலைகள் இயங்கின. சிறிய இடத்தில் பெருந் தொகையான மாணவர்கள் படித்தார்கள். நெரிசலுடன் நெருக்கடியுடன் பாடசாலைகள் நடந்து கொண்டிருந்தன.

கிளிநொச்சிக்கு நாங்கள் திரும்ப மாட்டோம் என்ற நிலைதான் அப்பொழுது எங்களுக்கு இருந்தது. காணி அப்படியே இருக்கிறது. நான் பாடசாலை முடிந்து வந்ததும் காணியை கொஞ்சம் கொஞ்சமாக துப்பரவாக்கத்தொடங்கினேன். இரவாக இராவாக கட்டைகளை பிடிங்கி எரித்து கால் ஏக்கரில் பாதிக்காணி வரை துப்பரவாக்கி விட்டேன். சுவரோ தடுப்போ இல்லாமல் வீடு திறந்து கிடந்தது. தடிகளை நட்டு துணிகளாலும் கிடுகாலும் சாக்காலும் சுற்றி கட்;டினேன்.. அதனை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து சுவரை வைக்கத் தொடங்கினேன். பாடசாலை விட்டு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சுவரை வைத்து ஒருவாறு முக்கால்வாசிக்கு சுவரை வைத்து முடித்தேன். தடிகளை நட்டு கையால் மண்ணை குழைத்து உருண்டையாக்கியும், கற்களை அரிந்தும் கட்டினேன். சின்னதாக வட்டமாக கிணற்றையும் வெட்டினேன். உள்ளே இறங்கி நானே வெட்டி மேலே போடுவதும் கொஞ்சம் ஆளமாக கிழே இறங்கி வெட்டிப் போட்டு விட்டு மேலே வந்து அதனை இழுத்துப் போடுவதுமாக கிணறும் வெட்டப்பட்டது. குளம் அருகிலிருப்பதால் ஆறடி ஏழடி கடைசி பத்தடியில் அந்தப் பகுதியில் தண்ணீர் ஊறி விடும்.

நானும் வாழைக் குட்டிகளை வாங்கியும் தெருவில் எறியப்பட்ட கிழங்குகளை கொண்டு வந்து வைத்தும் வாழைத் தோட்டங்களை உருவாக்கினேன். சோளம், கச்சான், பயிற்றை, கத்தரி, பூசனி என பயன்தரு மரங்கள் வளர்ந்து காணி சோலையாகியது. அந்த மரங்கள் பசியை ஆற்ற உதவியதுடன் அதனை விற்று ஏனைய செலவுகளை செய்யவும் உதவின. பசியால் பாலைப் பழங்களையும் வீரப்பழங்களையும் சாப்பிட நேர்ந்த எமக்கு அவை ஆறுதலளித்தன. இப்படித்தான் கிராமம் எங்கும் சனங்கள் தங்கள் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள். விவசாய நிறுவனங்கள், என்ஜியோக்கள் பயன்தரு மரக் கன்றுகளையும், விதைகளையும் தந்தார்கள். மணியங்குளம் கிராமத்தைப்போல அகதிகள் தஞ்சடைந்திருந்த பெரும்பாலான பதிகுகளில் இப்படித்தான் நிலமையிருந்தது.

ஆனால் சன நெருக்கமான தெருக்களின் கரைகளில். பாடசாலைகளில், முகாங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து நெருககடிகளை அனுபவித்தார்கள். அக்கராயன் பாடசாலைக்கு பக்கத்தில் பெரிய அகதிமுகாம் இருந்தது. அக்கராயன் மேட்டுப்பகுதியாக இருந்ததால் தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஸ்கந்தபுரம், எட்டாங்கட்டை, ஜெயபுரம் போன்ற பலபகுதிகளில் இப்படி வறட்சி நிலவியது. கடுமையான சனநெருக்கடியால அக்கரான் பாடசாலையடி, அம்பலப்பெருமாள் சந்தி, அக்காரன் வைத்தியசாலையடி, அக்கராயன் பிள்ளையார் கோயிலடி போன்ற பல இடங்கள் அகதிகள் நிரம்பிய தெருக்கரைகளாக இருந்தன. வீதிகளில் விபத்துக்கள் நிகழுவதும் நெரிசலும் காணப்பட்டன. அப்பொழுது எனக்கு புதுக்குடியிருப்பு, முல்லைத்திவு விசுவமடு போன்ற இடங்களில் நிலமை எப்படி இருந்தது என்று தெரியாதிருந்து. இதே மாதிரியான நெருக்கடிகள் அங்கு இருந்திருக்கும் என்பத மட்டும் புரிய முடிகிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தலிருந்தவர்கள், சில சொந்தக்காரர்கள் அங்குதான் இருந்தார்கள். ஆபத்தான பயணம் என்பதால் போக்குவரத்து அதிகம் இடம்பெறாததால் அவர்கள் வேறுநாட்டில் வாழ்வதைப்போல எங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடிதப் போக்குவரத்திருந்தது.

அக்கராயன் வைத்தியசாலை நோய்வாய்பட்ட சனங்களால் எப்பொழுதும் நிரம்பியிருந்தது. கிளிநொச்சி வைத்தியசாலை இ;டம்பெயர்ந்து அக்கராயன் வைத்தியசாலையில் இயங்கியது. ஆனால் பெரியளவிலான மருத்துவ வசிதிகள் கிடையாது. மல்லாவி வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எனச் சில வைத்தியசாலைகளும்; இதே நிலையில்தான் இருந்தன. அவசர சிகிச்சை தேவைப்படுகிற நோயாளர்கள் கொண்டு செல்லுவதற்கான வழிகள் இல்லாமல் இருந்தன. அப்பொழுது மிக நீண்ட காலமாக பெரியமடுவில் ஒரு இராணுவத்தினரதும் புலிகளதும் ஆபாக்குவரத்துக்கான சோதனைச் சாவடி இருந்தது. தொடக்கத்தில் ஆபத்து கொண்ட வழியாக இருந்தது. நோயாளர்கள்கூட கடக்க முடியாத நிலையில் இருந்து பிறகு பயணிகள் கடக்கக்கூடிய நிலையை அடைந்தது. அக்கராயன் வைத்திசாலையில் நோயர்கள் அங்கும் இங்கும் மிதிபட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு முறை தங்கச்சிக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. அம்மா களை பறிக்கிற வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவளை தூக்கிக்கொண்டு நான்தான் வைத்தியசாலைக்கு செனறேன். பேரூந்து வசதிகள் மிகக் குறைவு என்றபோதும் அதற்கும் வசியற்ற நிலையே எங்களுக்கு இருந்தது. ஆனால் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைத்திய பிரிவு அந்த வைத்தியசாலையில் பிரதயேகமாக இருந்தது. நிறைய சனங்கள் வரிசையில் காத்திருந்தார்கள். எல்லாக் குழந்தைகளும் நோயால் அவதியுற்றுக்கொண்டிருந்தன. தங்கச்சியோ காய்ச்சலால் துடித்துக்கொண்டிருக்கிறாள். நேரம் ஆக ஆக மயங்கத் தொடங்கினாள். எனனால் அதை தாங்க முடியவில்லை. எனக்கு பெரிய பயம் ஏற்படத் தொடங்கியது. தங்ச்சிக்கு எதாவது ஆகிவிடுவோ என்ற அதிர்hச்சியால் ஓ..வென அழத் தொடங்கிவிட்டேன். எல்லாரது கவனமும் எனது பக்கம் திரும்ப தங்கச்சியை மருத்துவர் ஓடி வந்து கொண்டு சென்றார். அக்கராயன் வைத்திசாலையில் அடிக்கடி நோயால் மருத்து எடுக்கச் சென்றிருக்கிறேன். தங்கச்சியைக் கூட்டிச் சென்றிருக்கிறேன். அந்த வைத்திசாலை பலரது உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. அத்துடன் வசதியற்றபடியால் மருத்துவம் தோல்வியில் முடிவடைந்து மரணங்கள் அதிகமாக நடந்துகொண்டிருந்தன. அதை இலக்கு வைத்து இராணுவம் செல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தது. இப்படி மக்கள் மெல்ல மெல்ல துயரங்களையும் நெருக்கடிகளையும் அனுபவித்துக்கொண்டிருக்க ஏ-9 வீதியை பிடித்து கைகுலுக்கும் கனவுடன் இராணுவம் மேலும் யுத்தத்தை தீவிரப்படுத்தியது. யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையில் தான் பயணம் நடத்த வேண்டும் என்பதில் ; ஜனாதிபதி சந்திரிகா உறுதியாக இருந்தார். புலிகளை அழித்து சமாதானத்தை ஏற்படுத்த என அவர் யாழ்ப்பாணத்தில் கோயில்கள், பள்ளி;க்கூடங்கள், மரநிழல்கள் என குண்டுகளை பொழிந்து மக்களை பெருமெடுப்பில் பலியெடுத்தவர். யாழ்ப்பாணத்து ஆறுலட்டசம் மக்களையும் புலிகள் தம்முடன் வன்னிக்கு நகர்த்தியபோது அனுபவித்த துயரங்கள் தமிழ் மக்களால் மறக்க முடியாதது. போர் வரலாற்றில் மறக்க முடியாத கொடுமையான இடப்பெயர்வாகவே அது நிகழ்ந்தது. சமாதானத்தை சூழ்ச்சியின் கோரமாக மாற்றி தமிழ் மக்களை ஏமாற்றி பெருந்துயரத்தை ; ஜனாதிபதி சந்திரிகா ஏற்படு;த்தினார். யாழ்ப்பாணத்தில் சந்திரிகா தொடக்கிய யுத்தம் வன்னிக் காடுகளில் மூண்டு தீவிரமாகிக் கொண்டிருந்தது.

யுத்தம் எப்பொழுதும் இரண்டு தரப்பையும் அழித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் குடியிருப்பில் நாளும் பொழுதுமாக போராளிகளது வீர மரணங்கள் நடைபெற்றன. அவர்களது வித்துடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளும் அறிவப்புக்களும் சவப்பெட்டியற்ற மரணங்களும் என தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எங்காவது ஒரு குடிசையில்; சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டிருக்கும். இராணுவமும் பெரியளவில் உயிரிழைப்பை சந்தித்துக்கொண்டிருந்தது. போர் போரிடுகிற இரண்டு தரப்பினரதும் உயிரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது. அது அடிப்படையில் மனிதாபிமானமற்றது. பின்னால் ஒட்டுமொத்த சனங்களின் உயிரையும் தின்றுகொண்டிருக்கிறது. வடக்கு கிழக்கிலும், தெற்கிலும் மரணங்கள்தான் நடத்தப்பட்டன. ஆனால் சந்திரிகா அரசு தமிழ் மக்கள்மீது கொடுமையான அழிப்புப்போரை நடத்திக்கொண்டிருந்தது. தமிழ்மக்களை அகற்றி விடுதலைப் புலிகளை ஒடுக்கி வரலாற்றுச் சாதனையை தான் புரிய வேண்டும் என்று விரும்பி உலகத்தின் ஆசியுடன் போரை நடத்தினார்.

அப்பொழுது விடுதலைப் புலிகளுக்கு மக்களது பெரிய ஆதரவு பலம் இருந்தது. அதற்கு ஏற்ற விதத்தில்தான் அவர்கள் மக்களுடன் நடந்து கொண்டார்கள். பாசிசப் புலிகள் என ஒரு பகுதியினராலும் சில அறிவுஜீவிகளாலும் மற்ற இயக்கங்களாலும் அல்லது குறிப்பிட்டளவு மக்களாலும் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வரலாற்றில் பல்வேறு தவறுகளை விட்டிருந்தாலும் ஈழத்தின் அநேகமான மக்களாலும் புலம்பெயர் மக்களாலும் தமிழக மக்களாலும் முழு அளவிலான ஆதரவு விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது. புலிகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அவற்றை மறுத்தும் மறைத்தும் அவர்கள் மக்களுடன் நெருகக்த்தை பேணி வந்தார்கள். அவர்களது தவறுகளை தெரிந்திருந்தும் அதற்கு சேர்த்தோ, அதனை மறந்தோ, மக்கள் ஆதரவளித்தார்கள் அல்லது உடந்தையாக இருந்தார்கள். புலிகளது வெற்றி மற்றும் திறமையுடன் முழுத் தவறுகளுக்கும் முழுவரும் பெறுப்பேற்ற காலமாக இந்தப்போர் நடந்த காலமிருந்தது. ஆகவேதான் அநேகம் இளைஞர்கள், யுவதிகள் விரும்பி ஈழ விடுலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.

எங்கள் குடியிருப்பில் போராளிகள் பரவலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எழுச்சி நிகழ்வுகளையும் கலை நிகழ்வுகளையும் நடத்தி ஈழ விடுதலைப் போராட்டத்தின் அவசியம் பற்றிக்கூறுவார்கள். கிராமங்கள்தோறும் கலைஞர்கள் நாடகங்களை நடத்தியிருந்தார்கள். எல்லோரும் நாடகங்களை பார்க்க வருவார்கள். நாடகங்கள் நடக்கும்பொழுது இளைஞர் யுவதிகளுடன் போராளிகள் தனிப்பட பேசுவார்கள். பத்து இருபது பேர் என ஒரு நாடகத்தின் முடிவில் ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வயது குறைந்தவர்கள் பேராட்டத்தில் இணைந்திருந்தால் அவர்கள் குடும்பத்திடம் கெண்டு வந்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். அநேகமாக பலர் விரும்பி போராட்டத்திற்கு செல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.

வீட்டுக்கு வருகிற போராளிகளிடம் எல்லாம் அம்மா அண்ணாவை விசாரித்துக்கொண்டிரப்பார். அம்மா எப்பொழுதும் போராளிகளுடன் மிகவும் அன்பாக பழகுபவர். பேராளிகள் எல்லா வீடுகளுக்கும் சென்று உரையாடுவார்கள் ஈழ விடுதலைப்பேராட்டம் களம் என்பனவும் வெற்றி நம்பிக்கை என்பனவும் சனங்களை நெருங்கியிருந்தன. அப்பொழுது வன்னியிலிருந்த சனங்கள் பொருளாதார தொழிநுட்ப முன்னேற்ற மில்லாத காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். துருப்பிடித்த மோட்டார் சைக்கிளை மண்ணெண்ணையில் ஓடினார்கள். ரயர் ரியூப் இல்லாத சைக்ளிலுக்கு வைக்கோல் அடைந்து ஓடினார்கள். காட்டு மரங்களை கொத்தி விறகாக விற்கும் பொழுது இப்படியான சைக்களில்தான் தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறேன். இப்படி நெருக்கடியான வாழ்வை வாழ்ந்தபோதும் சனங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. உன்மையில் அது ஆச்சரியப்பட வைப்பதும் விபரிக்கமுடியாததுமான காலமாக இருந்தது. போரளிகள் இயக்கத்தில் இணையும்படி கெஞ்சுவார்கள். அல்லது தமது அனுபவங்களை சொல்லுவார்கள் அவசியம் பற்றி கோபத்துடன் பேசுவார்கள் பலவந்தமாக யாரும் இழுத்துச் செல்லப்பட்டதில்லை. மக்கள் அதிகம்பேர் ஒத்துழைத்தார்கள். பலவந்தமாக இழுத்துச் கொண்டு சென்றார்கள் என்ற நிலையை வன்னியில் காண முடியாதிருக்க கிழக்கில் அப்படி பலவந்தமாக கருணா அம்மானால் இளைஞர்கள் யுவதிகள் வன்னிக்கு கொண்டு வரப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது.

அநேகமானவர்களால் வழங்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு, பங்கெடுப்பு என்பனவற்றுடன் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து புலிகள் தாக்குதலை தொடுக்க அது புலிகளுக்கு பாரியளவிலான வெற்றியைக் கொடுத்தது. ‘வெற்றி நிச்சயம்’ என்ற அர்த்தம் கொண்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை மே 13 1997 அன்று சம்பிரதாய பூர்வமாக பௌத்த பிக்குகளின் ஆசியுடன் சந்திரிகா அரசு தொடங்கியிருந்தது. சனங்கள் பெரு அவதியுள் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது சனங்களின் நடுவே யுத்தம் நடந்துகொண்டிருந்தது. இராணுவத் தளபதி ஜெனரல் அனுருத்த ரத்வத்தை தலமையில்தான் இந்த யுத்தம் நடத்தப்பட்டது. தாண்டிக்குளத்தலிருந்து ஓமந்தை நோக்கியபடி ஒரு யுத்த முனை திறந்து விடப்பட மணலாற்றலிருந்து நெடுங்கேனி வரை மற்றொரு யுத்த முனை திறக்கப்பட்டது. ஓமந்தையிலிருந்தும் நெடுங்கேனியிலிருந்தும் முன்நகர்ந்து புளியங்குளத்தை அடைந்து அங்கிருந்து கிளிநொச்சியை நோக்கி நகருவதே இராணுவத்தின் திட்டமாக இருந்தது. இதற்கு முன்பாக வவுனியாவிலிருந்து மன்னாருக்குச் செல்லுகிற பிரதான தெருவை கைப்பற்ற இராணுவம் மேற்கொண்ட ‘எடிபல’ என்ற நடவடிக்கை புலிகளது எதிர்ப்பின்றி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வவுனியா நகரம் நோக்கி இடம்பெயர்ந்தனர்.

இருபதாயிரம் படைகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். டாங்கிகள் ஆட்லறிகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த யுத்தத்தில் கிடட்டத்தட்ட 70 கிலோமீற்றர் தூரம் வரை கைப்பற்ற வேண்டியது இராணுவத்தின் இலக்காக இருந்தது. விடுதலைப் புலிகள் வழமையான கொரில்லா முறையிலான யுத்தத்தை முன்னெடுத்தார்கள். மக்களிடம் யுத்தம் பற்றிய தெளிவான கருத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தினார்கள். மக்கள் இடப்பெயர்வுகளையும் அவலங்களையும் சந்தித்து, மண்ணை, நிலத்தை, நகரத்தை, கிராமத்தை இழந்து இருந்தபடியால் விடுதலைப் புலிகளது யுத்த வெற்றிகளுக்காக காத்திருந்தார்கள். மீண்டும் ஊர் திரும்புகிற நாட்களுக்காக காத்திருந்தார்கள். சிங்கள இராணுவம் தமிழ் மக்களை அழித்தொழித்து சிங்கள நாட்டை விரிக்கிறது அதற்கெதிராக பேராடியே ஈழத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட்டது. அப்பொழுது களத்தில் பல லட்சம் மக்களது எதிர்பார்ப்பும் ஆதரவும் இருந்தது. ஒரு எழுச்சிகரமான போராட்டம் நடப்பதாக பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது.

ஜெயசிக்குறு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை இலங்கை இராணுவத்திற்கு பல பின்னடைவுகளை கொடுத்துக்கொண்டிருந்தது. தாண்டிக்குளம் நெடுங்கேணி ஓமந்தை என இராணுவம் இலகுவாக கைப்பற்றிக்கொண்டு புளியங்குளம் சந்தியை அடைய முடியாமல் வழிமறிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் உக்கிரமான சமர் நடந்தபோதும் புளியங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்ற முடியாமலிருந்தது. அங்கு நடந்த சண்டைகளை தளபதி தீபன், தளபதி ஜெயம் முதலியோர் வழி நடத்தினார்கள். அதன் பிறகு புளியங்குளத்தை இராணுவம் சுற்றி வளைக்கவும் புலிகள் அங்கிருந்து கனகராயன் குளத்திற்கு பின்வாங்கினார்கள். அமெரிக்க கிறீன்பரட் கொமாண்டோவினரால் பயிற்றுவிக்கப்பட்ட படைகள் மன்ன குளத்தில் சமரில் ஈடுபட்டன. கனகராயன் குளத்தை கைப்பற்றும் நோக்குடன் இடையே நுழைந்த இராணுவம் பெண் போராளிகளின் தாக்குதல்களால் பலத்த சேதங்களுக்கு உள்ளானது.

மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பை இராணுவம் கைப்பற்றியதும் புலிகள் கனகராயன் குளத்தை விட்டு பின்வாங்கி மாங்குளத்திற்கு திரும்பினார்கள். மன்னார் பூநகரி வீதியை கைப்பற்ற ‘ரணகோஷ’ என்ற படை நடவடிக்கையையும் இராணுவம் தொடங்கி தோல்வியை தழுவியது. கிளிநொச்சியிலும் சமர் மூளத் தொடங்கியது. இராணுவம் திருவையாறு மற்றும் கனகாம்பிகை குளத்தை அடைந்தபொழுதுதான் மக்களது போக்குவரத்து ஆபத்து நிறைந்த ஒன்றாக மாறியது. செப்டம்பர் 30 1998 அன்று படையினர் மாங்குளத்தையும் கைப்பற்றினர்கள். புலிகள் பனிக்கன்குளத்திற்கு பின்வாங்கிச் சென்றார்கள். அத்துடன் ‘றிவிபல’ நடவடிக்கை மூலம் ஓட்டுசுட்டானையும் இராணுவம் கைப்பற்றிக்கொண்டது.

அதேவேளை கிளிநொச்சியைக் கைப்பற்ற பெப்ருவரி 02 1998 அன்று விடுதலைப் புலிகள் நடத்திய சமர் தோல்வியில் முடிவடைந்தது. மெல்ல மெல்ல முன்னேறி வந்த இராணுவம் மீது புலிகள் தாக்குதல்களை தொடுத்தார்கள். அதற்கு முன்பாக தாண்டிக்குளம் படைமுகாம், பெரியமடு படைமுகாம், ஓமந்தை படைமுகாம், கரப்புக்குத்தி விஞ்ஞான குளம் தளம் என பல முகாங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இராணுவத்திற்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. இராணுவத்தால் இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 05.12.1998 அன்று கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. ஐந்து நாட்களில் முழுப்பகுதியையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள். ஜெயசிக்குறு, றிவிபல என்பன இராணுவத்திற்கு பலத்த தோல்வியை கொடுத்தன. விடுதலைப் புலிகளின் அப்போதைய முக்கிய தளபதி கருணா அம்மானின் திறமையான வழிநடத்தல்தான் ஜெயசிக்குறு வெற்றிக்கு வழிவகுத்தது. இதற்காக அவர் கிழக்;கிலிருந்து போராளிகளையும் கொண்டு வந்திருந்தார்.

தினமும் பேராளிகளது மரணம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் வித்துடல்கள் நிரப்பட்ட சவப்பெட்டியை கொண்டு வரும்போது மரணமடைந்த போராளிகளின் தாய்மார்கள் சகோதரர்கள் திட்டி அவர்களை உலுப்பி பேசினார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். இதை எங்கள் குடியிருப்பில் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன்.

நாளடைவில் அவர்கள் அவற்றை மறந்து யுத்த வெற்றியை கொண்டாடினார்கள். மாவீரர் குடும்பம் என்ற கௌரவத்தை ஏற்றுக்கொள்வார்கள். ஜெயசிக்கறு வெற்றி மக்களுக்கு, புலிகள்மீது அளவற்ற நம்பிக்கையை கொடுத்தது. அந்த வெற்றி உலகளவில் விடுதலைப் புலிகளது போரிடல் உத்திகள் வலிமை என்பவற்றில் வியக்க வைத்தது. ஈழத் தமிழர்களுடன் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தழிழக தமிழர்களை நம்பிக்கை கொள்ள பல மடங்கு வைத்தது. அப்பொழுது நானும் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ அடக்குமுறையை வெளிப்படுத்துகிற வீதி நாடங்களில் நடித்துத்திருக்கிறேன். அண்ணா பற்றி எந்தத் தகவலும் தெரியாதிருந்தபோது அண்ணாவின் வெள்ளையன் என்ற இயக்கப்பெயரையும் தகட்டு இலக்கத்தையும் போராளிகள் மாவீரர் குடும்ப நலன் காப்பகம் அனுப்பி வைத்தது. நாங்கள் மிகுந்த வறுமையில் துடித்துக்கொண்டிருந்தோம். எப்பொழுதும் வெள்ளை அரிசியல் தண்ணீரை விட்டு கஞ்சி காய்ச்சித்தான் குடிப்போம். சிலவேளையில் தொடர்ந்து மூனறு நாட்களாக உணவில்லாமல் இருந்து நடுச்சாமத்தில் எழுந்து மரவள்ளி இலையை இடித்து வறுத்து சாப்பிட்டிருக்கிறேன். அப்படி இருந்தபோதும் மனதில் கனவும் நம்பிக்கையும் இருந்தது. நிம்மதியான வாழ்வு பற்றிய ஏக்கமும் அவாவுமே அதற்கு காரணமாக இருந்தது.

இதன் இடையே விடுதலைப் புலிகள் 1996 இன் முற்பகுதியில் ஓயாத அலைகள் ஒன்று முலமாக முல்லைத்தீவை கைப்பற்றியிருந்தார்கள். மீண்டும் ஓயாத அலைகள் இரண்டு என்ற சமர் நடவடிக்கையின் மூலம் செப்டம்பர் 26 1998 அன்று தியாகி திலீபனின் நினைவு தினம் அன்று புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை தொடுத்தார்கள்.
-------------------------------------------

நன்றி:உயிர்மை அக்டோபர் 2009

Saturday, September 26, 2009

மண்மேடாகிற நகரம்


ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.

----------------------------------------------------------------------------------

000
கிளிநொச்சி நகரம் வெறுமையாகிக் கொண்டிருந்தது. அதனைச் சூழ இருந்த கிராமங்களும் வாடிக்கொண்டிருந்தன. கடைகளும் பள்ளிக்கூடங்களும் வீடுகளும் சனங்களுடன் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. போருக்குள் மீள உயிர்த்து பசுமையாக இருந்த நகரம் வாடிக்கொண்டிருந்தது. கிளிநொச்சியைச் சேர்ந்த மக்களும் யாழ்ப்பாண அகதிகளுமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சனங்கள் வன்னிக் காடுகளெங்கும் அலையத் தொடங்கினார்கள்.

1996.07.27 அன்று கிளிநொச்சி நகரத்தின் மீது சந்திரிகா அரசாங்கத்தின் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன. இலங்கை இராணுவத்தின் 54ஆவது டிவிசனின் 3ஆவது படைப்பிரிவு பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க தலமையில் கிளிநொச்சிமீதான தாக்குதல் தொடங்கியது. 1990ஆம் ஆண்டு கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் ஈழத்தின் இரண்டாம் கட்டப்போரில் படையினரிடமிருந்து கைப்பற்றினார்கள். அப்பொழுது கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த இராணுவம், 1985 முதலே நிலைகொண்டிருந்த ஆனையிறவுப் பகுதி நோக்கி பின்வாங்கின. ரேலிகப்டர்கள் தாக்குதல் நடத்த போய்க் கொண்டிருக்கிறது. விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. தூரத்தில் சமர் நடந்து கொண்டிருந்தது. ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பரந்தன் என்ற சிறிய நகரம் இருக்கிறது. ஆனையிறவு பரந்தன்; படைத்தளங்களிலிருந்து இராணுவம் கிளிநொச்சியை நோக்கி நகரத் தொடங்கியது.


இரத்தினபுரம் கிராமமும் ஆனந்தபுரம் கிராமமும் வெறிச் சோடிக்கொண்டிருந்தது. அநேகமாக எல்லோருமே இடம்பெயர்ந்து போய் விட்டார்கள். வீடுகள் கழற்றி ஏற்றப்பட்டும் திரும்பி வரும் நம்பிக்கையில் கதவுகள் பூட்டப்பட்டும் இருந்தன. நானும் என்னுடன் சேர்ந்து வகுப்பில் படித்த துஸியந்தியும் எங்கள் வீட்டிலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்திலிருக்கிற ஏ-9 வீதிக்கு வந்து பார்த்தோம். சனங்கள் எல்லாம் போய் முடிந்து ஏ-9 வீதியே வெறுமையாகக் கிடந்தது. அப்பொழுது மாலை இரண்டரை மணி இருக்கும். நானும் அவளும் எல்லாச் சனங்களும் இடம்பெயர்ந்து போய்விட்டதை எனது அம்மாவிடம் வந்து சொன்னோம்., இராணுவம் கிளிநொச்சிக்கு வர மாட்டான் என்று அம்மா நம்பிக்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி எனது கால்களால் எப்பொழுதும் அளந்து கொண்டிருந்த நகரம். இரத்தினபுரத்திலிருந்து கணேசபுரம் வரையான கிளிநொச்சி நகரத்தின் ஏ-9 வீதி வழியாக அப்பம்மா வீட்டுக்கு அடிக்கடி போய்க்கொண்டிருப்பேன். கடைகளின் பெயர்பலகைகளையும் அலுவலகங்களின் பெயர் பலகைகளையும் திரும்பத்திரும்ப வாசித்தபடி நடந்துகொண்டிருப்பேன். சந்திரன் பூங்கா என்ற பூங்கா ஒன்று டிப்போச்சந்தியில் (பழைய பேரூந்துத் தரிப்பிடம்) அதாவது கிளிநொச்சி மையத்தில் இருக்கிறது. பெரிய குளிர்ந்த மரங்கள் கொண்ட அந்த பூங்காவின் ஊஞ்சல்களில் ஆடிவிட்டு வருவதும் நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பின் பக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் ஆற்று வழிகளால் வருதும் என்று கால்கள் பரந்தபடி திரிந்துகொண்டிருக்கும். 1985களிலும் 1990களிலும் கிளிநொச்சி கடுமையான போருக்குள் சிக்கியிருக்கிறது. டெலிபட்டர்கள் வந்து கிளிநொச்சி நகரத்தை தாக்கிக்கொண்டிருந்தது இப்பொழுதும் சிறிய வயது ஞாபகங்களாய் இருக்கிறது. நகரத்துக்குள் செறிவாக சமர்கள் நடந்தபடியிருந்தன. 1990களில் கிளிநொச்சி விடுதலைப் புலிகள் வசமாகியபோது சிதைந்து அழிவின் எச்சமாயிருந்தது. முழுக்கடட்டிடங்களும் நகரத்துள் சிதைந்து இருந்தது. மீளவும் அதை பசுமையாக கட்டி எழுப்பியபோதுதான் மீளவும் படைகள் கிளிநொச்சி நகரத்தை குறிவைத்து சமரை பிரகடனம் செய்திருந்தது.

ஈழப்போரில் மூன்றாம் கட்டத்தில் பாரியளவிலான இடப்பெயர்வுகளை தமிழ் மக்கள் சந்திக்கத் தெடங்கினார்கள். 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் 5 லட்சம் மக்களது யாழ்ப்பாண இடப்பெயர்வு வரலாற்றின் மிகப்பெரும் துயராக நிகழ்ந்தது. அந்த மக்கள் வன்னிப் பகுதி எங்கும் பரவலாக தஞ்சமடைந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தை சந்திரிகா அரசு கைப்பற்றிய வேளை புலிகள் பாரிய பின்னடைவை சந்தித்ததாக செய்யப்பட்ட பிரச்சாரத்தை முறியடிக்கிற விதமாக மூன்று மாதத்தில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு படைத்தளத்தைக் கைப்பற்றினார்கள். பின்னடைவும் கைப்பற்றலும் இடப்பெயர்வும் மாறிமாறி நடந்துகொண்டிருந்தது.

ஆனால் கொஞ்ச நாளாக கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றப் போகிறது என்ற கதை எனது காதில் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஆனையிறவிலும் பரந்தனிலும் நிலை கொண்டிருந்த இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்ற முனையத்தொடங்கியதும் சனங்கள் இடம்பெயர்வது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கொண்டு செல்லக்கூடிய பொருட்களை எல்லாம் உரப்பை எனப்படுகிற பையில் கட்டி வைக்க வேண்டும் என்று அம்மா சொல்லிக்கொண்டிருக்க நான் எல்லாவற்றையும் பொறுக்கி உரப்பையில் கட்டி வைத்தேன். எங்கு போவது எப்படி பிழைக்கிறது என்ற குழப்பத்தில் அம்மா இருந்தார். அம்மாவின் நெருங்கிய நண்பி பவா அன்றி. அவர்தான் எங்களை மிகவும் நெருக்கடியான காலம் எல்லாவற்றிலும் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அவருடைய மகள்தான் என்னுடன் படிக்கிற துஸியந்தி. அன்றியிடம் நிறைய மாடுகள் இருக்கின்றன. அவரும் அவருடைய கணவரும்; எல்லா மாடுகளையும் சாய்த்துக்கொண்டு கிளிநொச்சிக்கு மேற்காக இருக்கிற முறிப்பு என்ற கிராமத்திற்கு போயிருந்தார்கள்.

துஸியந்தியும் நனும் அம்மாவும் எனது தங்கச்சியும் தான் எங்கள் கிராம்த்தில் இன்னும் வெளியேறாமல் இருந்தோம். விடுதலைப் புலிகள் இராணுவம் முன்னேறி வருவதை அறிவித்தபோதும் அதனை நாங்கள் கேட்கவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டது என்று சனங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள. எங்களுக்கு வெளியேறுவதற்கு வழியில்லாததாலும் மனதில்லாதாலும் நாங்கள் வெளியேறாமல் இருந்தோம். மாலை நேரமாக தாக்குதல் வேகமெடுக்கத் தொடங்கியது. எங்கள் வீடுகளுக்கு மேலால் செல்கள் போய் கனகாம்பிகை குளம் பகுதியிலும் இரணைமடுவில் விழுந்துகொண்டிருந்தது. நாங்கள் பதறத் தொடங்கி விட்டோம். கண்களில் மரண பயம் எற்பட்டது. இரவு மெல்ல வரவர அச்சம் விரியத் தொடங்கியது. யாரும் இல்லாமல் நாங்கள் வீட்டுக்குள் பதுங்கிக் இருந்தோம்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பொன்னையா தாத்தா என்கிற வயது முதிர்ந்தவர் வந்து வீட்டுக்கு முன்னால் நின்று கூப்பிட்டார். அந்தக் குரல் எங்களுக்கு பெரிய ஆறுதலாகக் கேட்டது. தான் இன்னும் போகவில்லை என்றும் தனது மகளும் வீட்டிலதான் இருக்கிறதாகவும்; நாங்களும் தனது வீட்டுக்கு வந்து எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் எங்களை தன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்றார். அவர்களது வீடு கைகளினால் மண்ணை குழைத்து செய்யப்பட்ட பெரிய சுவர்களை உடைய வீடு. இந்த சுவாரை உடைத்துக்கொண்டு செல்கள் வரமாட்டாது என்று எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். செல்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன., எங்களைக் கடந்து போகின்றன. மெல்ல விடியத் தொடங்க நாங்கள் புறப்படுவோம் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்திருக்கிறிங்கள் தானே என்று பொன்னையாதாத்தா கேட்டுக்கொண்டிருந்தார். எங்களது கொஞ்சப் பொருட்கள் எடுத்து கட்டி வைக்கப்பட்ட பைகள் வீட்டில் தயாராக இருந்தன.

நாங்கள் எங்கு போவது? எங்கு இருப்பது? என்று நான் அம்மாவை கேட்டுக்கொண்டிருந்தேன். பொன்னையா தாத்தாவிற்கு இடம் தெரியும் அவர் கூட்டிக்கொண்டு போவார் என்று அம்மா சொன்னார். ஸ்கந்தபுரத்திற்கு எல்லோரும் போவோம். அங்கு கரும்புத்தோட்டம் என்கிற அகதிமுகாம் இருக்கிறது என்றார். இரவிரவாக தூக்கம் இல்லை. செக்கனுக்கு செக்கன் செல்வந்து விழுகிறது. திடீரொன எழும்பிய பொன்னையா தாத்தா அம்மி, ஆட்டுக்கல்லு போன்ற வீட்டுப் பொருட்டகளை எல்லாம் கொண்டுபோய் அவர்களின் மண் கிணற்றுக்குள் போட்டார். எப்பொழுது மீள வருவோமோ என்ற ஏக்கத்துடன் திரும்பி வந்தால் கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கலாம் என அவர் சொல்லிக்கொண்டிருந்தார். காலையில் நேரத்துடன் ஏ-9 வீதியைக் கடந்து உதயநகர்க்குப்போய் அங்கிருந்து அம்பாள்குளம்போய் செல்வாநகர், கனபுரம், முறிப்பு என்று ஊர்களை தாண்டுவதை பொன்னையாதாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். ஆகச் சிறிய வயத்தில் அந்த வழிகளுக்கும் இடங்களுக்கும் சிலதடவைகள் போயிருந்தாலும் அவை பிடிபடாத திசைகளாகவும் மிகத்தூரத்தலிருக்கிற கிராமங்களாகவும் இருந்தன.

காலையில் புறப்பட்டோம். செல்தாக்குதல்கள் கொஞ்சம் குறைவாக இருந்தன. நான் உரப்பை ஒன்றில் கொஞ்ச சமையால் பாத்திரங்களை போட்டு கட்டி வைக்கப்பட்ட பையை எடுத்துக்கொண்டேன். அம்மா பதிவு ஆவணங்கள் கொஞ்ச உடுப்புகள் வைக்கப்ட்ட உடுப்புப் பெட்டியை எடுத்துக்கொண்டார். ஒரு கையில் அந்த உடுப்புப்பெட்டி மற்றக்கையில் தங்கச்சியையும் தூக்கிக் கொண்டு அம்மாவும் நானும் துஸியந்தியும் பொன்னையா தாத்தாவும் அவரின் மகளும் போய்க்கொண்டிருந்தோம். அப்பொழுது சமர் ஒய்ந்திருந்தது. இந்த இடைவெளியில் வேர்த்துக் களைத்துப் பசியெடுக்கவும் குறித்த கிராமங்களுக்கால் நடந்து தாக்குதல் குறைந்த அவகாசத்திற்குள் முறிப்புக்குப் போய்விட்டோம்.

பவா அன்றி எங்களுக்காக காத்துக்கொண்டு நின்றார். நேற்றுக்காலையிலயே வெளியேறியிருக்கலாம். இரவிரவாக கடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததினால் என்னவோ ஏதொ என்று பதைபதைத்துக் கொண்டிருந்ததாக அன்றி சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் எங்கு போவது என்று நினைத்துக்கொண்டிருக்க பவா அன்றி எங்களை தங்களுடன் வந்திருக்கும்படி கேட்டார். தங்கள் அம்மா வீட்டில் இருக்கலாம் என்றும் பக்கத்தில் ஒரு கொட்டில் இருக்கிறது அதில் தங்கலாம் என்றும் சொன்னா. மிகவும் நிம்மதியாக இருந்தது. எங்களைக் கூட்டிக்கொண்டுபோய் உணவு கொடுத்து இருப்பதற்கு அந்த கொட்டிலையும் தந்தார்கள்.

000
அண்ணா ஒரு கடையில் வேலைக்கு போய் நின்றிருந்தான். அவன் கடையின் பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்தக் கடை முதலாளியுடன் முதலே எங்கோ போயிருந்தான். அவன் பாதுகாப்பாக இருப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் எந்த திசையில் போயிருப்பான் என்று தெரியவில்லை. கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த சனங்கள் ஸ்கந்தபுரம், அக்கராயன் இருக்கிற மேற்க்குப் பக்கமாகவும் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு இருக்கிற கிழக்குப் பக்கமாகவும் பிரிந்து பிரிந்து போய்க் கொண்டிருந்தார்கள். அண்ணா நாங்கள் வந்த பக்கமாகவே வந்திருந்தான். ஸ்கந்தபுரத்தில் அந்த கடை மீள திறக்கப்பட்டிருந்தது. அண்ணா எங்களை தேடி கண்டு பிடித்துவிட்டான். லீவு பெற்று எங்களிடம் வந்தான். அதிஸ்ட வசமாக நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டோம். சிதறி உடைந்த எங்களுக்கு அவனது வருகை பெரிய நிம்மதியை தந்திருந்தது. அண்ணா எங்களைவிட்டு போக மறுத்து எங்களுடன் நிரந்தரமாக இருந்து கொண்டான். எங்களுக்கு அதுதான் பொருத்தமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

படைகள் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நின்றன. நாங்களும் சமீபமாகத்தான் இருந்தோம். முறிப்பு கிளிநொச்சியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. கிளிநொச்சிப் பக்கம் நோக்கி முறிப்பின் முடிவிடத்தில் கிளிநொச்சிக்கு நான்கு கிலோமீற்றர் தூரத்தில் நாங்கள் இருந்தோம். படைகள் எறியும் செல்கள் முறிப்புப் பக்கம் வருவது குறைவாக இருந்தது. கிளிநொச்சி நகரத்துடன் இரணைமடு, கனகாம்பிகை, திருவையாறு, கனகபுரம் போன்ற இடங்களில் விழுந்து கொண்டிருந்தன. படைகள் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்கதலை தாக்கிப் பிடிக்க முடியாமல் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நிலைகொண்டிருந்தபோது தாக்குதல்கள் சற்று குறைந்திருந்தன. தங்கள் பொருட்களை விட்டு வந்தவர்கள் இடையிடையே அவற்றைப்போய் எடுத்து வந்தனர்.

திருடர்களும் வீட்டில் உள்ள பொருட்களையும், தளவாடங்களையும், வீடு கடைகள் கட்டப்பட்ட சீமெந்துக் கற்களை உடைத்து எடுத்தக்கொண்டும் வந்தார்கள். துஸியந்தியின் அப்பாவும் கிளிநொச்சியில் வீட்டிற்கு போய் வந்தார். அம்மாவிடம் மிகவும் சிரமப்பட்டு; ஒருவாறு அனுமதியை வாங்கிக்கொண்டு துஸியந்தியின் அப்பாவுடன் நானும் அண்ணாவும் எங்கள் வீட்டுக்குப்போனோம்.

எங்கும் செல்கள் விழுந்து சிதைந்திருந்தன. கடைகள் செல் தாக்குதல்களினாலும் விமானத் தாக்குதல்களாலும் சிதைவடைந்திருந்தன. கிளிநொச்சி நகரம் அழிந்து பெரும் அவல முகத்துடன் இருந்தது. தன்னுடைய மக்களையும் தனது வகீகரமான தோற்றத்தையும் செழிப்பையும் அது இழந்திருந்தது. அழிவின் பெரும் சாட்சியாய் வீதிகள் எங்கும் புழுதி கிளம்பி எல்லா சுவர்களும் உடைந்து கொண்டிருந்தது. ‘சுப்பர் சொனிக்’ எனப்படும் விமானங்கள் குண்டுகளை வீசியதில் எங்கும் பெரிய கிடங்குகள் இருந்தன. வீடுகள் பாழடைந்து உடைந்து அகற்றப்பட்டு கிராமமே சிதைந்து போய்க் கிடந்தது. தென்னை மரங்கள் மாமரங்கள் காயப்பட்டு சிதைந்து கிடந்தது. எல்லாவற்றையும் பார்த்தபடி கடந்து எங்கள் வீட்டுக்குப் போனாம்.

எங்கள் வீடு சிறிய மண்ணால் கற்கள் அரிந்து கட்டப்பட்ட வீடு. தகரத்தால் செய்யப்பட்ட கதவை கம்பியால் இணைத்து பின்பக்கமாக கட்டி சின்ன ஆமைப் பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள்ளே எங்களின் கொஞ்ச உடமையாக ஒரு மேசையும் ஒரு கட்டிலும் ஒரு கதிரையும் இருந்தன. அதை யாராவது திருடி விடுவார்களோ என்ற பயத்துடன் எட்டிப்பார்த்தோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே பொருட்களும் அப்படியே இருந்தன. நான் ஒரு தண்ணீர் அள்ளும் குடத்தையும் வீட்டில் நின்ற கோழி ஒன்றை பிடித்துக்கொண்டும் அண்ணா ஒரு பெரிய வாளியையும் எடுத்துக்கொண்டும் புறப்பட்டோம். அன்று சமர்கள் ஓய்ந்திருந்தன. அன்று முறிப்புக்கு வந்து சேருவதற்கு மாலை நான்கு மணியாகிவிட்டது. உள்வீதிகளுக்கால் நடந்து போய் வந்து சேருவதற்கு ஒரு நாளே தேவைப்பட்டது. அம்மா தங்கச்சியை தூக்கி வைத்திருந்தபடி எங்களைப் பாhத்தபடி நின்றுகொண்டிருந்தார்.

தங்கச்சிக்கு முட்டை ஊட்ட வேண்டும் என்பதற்காக கஸ்டப்பட்டு ஓடித் திரிந்து பிடித்து வந்த கோழி பையை விட்டு வெளியில் எடுக்கும்போது மூச்சடங்கி செத்துப் போய்க்கிடந்தது. மிகவும் கவலையாக இருந்தது. எப்பொழுதும் எங்ளை வாட்டிக்கொண்டிருந்த வறுமை இன்னும் வதைக்கத் தொடங்கியது. பவா அன்றியின் உதவியில் ஒரு மாதிரி நாட்கள் போய்க்கொண்டிருந்தன. எந்த வருமானமும் வருவாயும் அற்று இருந்தோம். அண்ணா வரும்போது அவனது சம்பளமாக 500 ரூபாவைக் கொண்டு வந்திருந்தான். தங்கச்சிக்கு குடிப்பதற்கு மாப்பைக்கற்று வாங்க வேண்டும். இப்படி நெருக்கடிகளின் மத்தியில் இருந்துகொண்டேயிருந்தோம்.

இன்னொரு நாள் நானும் அண்ணாவும் உடுப்புக்களை எடுப்பதற்காக கிளிநொச்சிக்குப் தனியே போனோம். நாங்கள் கிளிநொச்சி நகரத்தை அண்மித்த போது எந்தச் சத்தங்களும் கேட்கவில்லை. நாங்கள் வீட்டுக்குள் நுழைய கதவு கம்பிகள் அறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தது. வீடு வெளித்துக்கிடந்தது. மேசை கட்டில் கதிரை எல்லாம் களவாடப்பட்டிருந்தது. யாரோ வாங்கித் தந்த கொம்பாஸ் ஒன்று லாச்சிக்குள் இருந்தது. எல்லாவற்றையும் களவாடக்கொடுத்த பெரும் ஏறமாற்றம் அதிர்சியைத் தந்தது. அந்த பொருட்களை எதாவது வண்டியில் ஏற்றிக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் அதற்கு பணமில்லை. கடைசியில் அதை திருடர்கள் கொண்டு போய்விட்டார்கள்.

இதைப் பற்றி யோசித்தபடி நான் திண்ணையில் இருந்தேன். இலேசாக விமானம் இரைகிற சத்தம் கேட்டது. சொற்ப மணித்துளியில் ‘சுப்பர்சொனிக்’ எனப்படுகிற குண்டுத் தாக்குதல் நடத்துகிற அப்போது பாவிக்கப்படும் அதிவேக விமானங்கள் இரண்டு வந்து கிளிநொச்சி நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து குண்டுகளைப் பொழிகிறது விமானங்கள். என்னை நிலத்தில் பதுங்கச் சொல்லி விட்டு அண்ணா விமானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். வீடு எங்கும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அன்று உயிருடன் திரும்ப முடியாது என்று நினைக்கிறேன். அம்மாவும் தங்கச்சியும் நினைவுக்கு வந்தார்கள். அம்மா சொல்லச் சொல்ல கேட்காமல் வந்ததன் விளைவுதான் என்று மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

கிளிநொச்சி நகரம் சாம்பலாகும் அளவில் விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தன. விமானங்கள் ஏற்படுத்திய பெரும் பயத்துடன் பொருட்கள் களவுபோன ஏமாற்றத்துடன் இருந்த உடுப்பக்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். இனிமேல் வீட்டுக்கு வருவதில்லை என்று முடிவும் எடுத்துக்கொண்டோம்.

000
இடம்பெயர்ந்த இடங்கள் எங்கும் ‘புதிய பேராளிகள் இணையும் இடம்’ என்று விடுதலைப்புலிகளின் பிரச்சார திரைப்படங்களும் தாக்குதல் விபரணக்காட்சிகளும் கட்டப்படும் பந்தல்களும் பிரச்சாரங்களுமாக இருந்தன. வீதியில் போகும் எல்லேரையும் மறித்து வைத்து போராளிகள் போராட்டத்தில் இணையுமாறு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அண்ணா அந்தப் பிரச்சாரத்தின்போது பேராட்டத்தில் சேர்ந்துகொண்டான். அண்ணா சேர்ந்து கொண்டது எங்களுக்கு முதலில் தெரியாது. வீடு திரும்பாத அண்ணாவுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அண்ணா வரவில்லை. அவன் இயக்கத்தில் சேர்ந்திருப்பான் என்ற முடிவுக்கு வந்து அம்மா தேடத் தொடங்கினார். பத்து வயதிலிருந்து அடிக்கடி இயக்கத்தில் சேரும் அண்ணா 15ஆவது வயதில் ஐந்தாவது தடவையாக அப்பொழுது சேர்ந்திருந்தான். அம்மா என்னையும் தங்க்சியையும் பவா அன்றியுடன் விட்டுவிட்டு அண்ணாவைத் தேடுவதற்கு மறு நாள் காலை சென்றார்.

அப்படி ஒருவர் இயக்கத்தில் சேரவில்லை என்றுதான் எங்கும் கூறப்பட்டிருந்தது. அம்மா ஒரு இடத்தில் அவன் எங்கு போயிருப்பான் என்று கேட்டதற்கு எங்காவது குளத்தில் மூழ்கிக்கூட செத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். அம்மை மனம் தகர்ந்து வீட்டுக்கு திரும்பினார். இயத்தில் சேர்பவர்களை முதலில் சேரவில்லை என்றுதான் கூறுவார்கள். பிறகு இயக்கப்பெயரையும் பேராளி குடும்ப அட்டையும் பேராளி மாவீரர் குடும்ப நலன் காப்பகத்தில் வழங்குவார்கள். முன்பு அண்ணா இயக்கத்தில் சேரும்போது அவனுக்கு வயது குறைவு என்பதனால் அவன் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான்.

வழமையாக செல்கள் வந்து விழும் சத்தம் கேட்டபடிதானிருக்கும். தீடிரென பயந்தபடி நாளாந்தம் கேட்டுக்கொண்டிருந்ததோம். அன்றிரவு செல்கள் அருகருகாக விழும் சத்தம் கேட்கத் தொடங்கின. கிளிநொச்சிப் பக்கம் போனவர்கள் யாராவது செத்திருப்பார்கள், காயப்பட்டிருப்பார்கள் என்று பிறகு செய்திகள் வந்து கொண்டிருக்கும். எப்படியும் நாள் ஒன்றுக்கு 3000 செல்களுக்கு மேலாக இராணுவம் எறிந்தபடியிருக்கும்.

அன்றும் இரவிரவாக செல் தாக்குதல் அதிகரித்துக்கொண்டிருந்தது. காலையில் முறிப்பை விட்டும் வெளியேறிவிடலாம் என பேசிக்கொண்டோம். முறிப்பிற்கு அடுத்து கோணாவில் என்ற கிராமம் இருக்கிறது அங்கு போய்விடலாம் என அன்றி சொல்லிக்கொண்டிருந்தார். விடியக்காலையில் தாக்குதல் ஒய்ந்திருந்தது. அம்மா எங்களுக்கு தேனீர் தயாரித்து தந்தார். குடிக்க கையில் எடுத்தும் திடிரென இராணுவம் செல் அடிக்கத் தொடங்கியது. செல்கள் மிக அருகில் வந்து விழுந்து கொண்டிருந்தன. கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றிக்கொண்டது. அங்கிருந்து உருத்திரபுரம், முறிப்பு என்று பரவாலாக இராணுவம் செல் அடித்துக்கொண்டிருந்தது. தேனீரை கொஞ்சமும் குடிக்காமல் அதை ஒரு பானைக்குள் ஊற்றி எடுத்துக் கொண்டு சமையல் பாத்திரங்களை அதே உரப்பiயில் போட்டுக்கொண்டு உடுபுப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு நாங்கள் வெளியேறத்தொடங்கினோம்.

அப்பொழுது செல்கள் எங்களுக்கு பக்கத்திலும் எங்களை கடந்தும் மேலாலும் விழுகின்றன. எங்களுக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் செத்து விழுந்து கொண்டிருந்தார்கள். பிணங்களை கண்டதும் அச்சமடைந்த என்னை வேறு வீதிகளால் அழைத்துக்கொண்டு அம்மா ஓடிக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னால் சைக்கிளில் போனவர் செல்பட்டு சைக்கிளுடன் பலியாகி விழுந்து கிடந்தார். விழுந்து பதுங்கிப் பதுங்கி ஒடிக்கொண்டிருந்தோம். செல் கூவும் சத்தம் கேட்டதும் விழுந்து பதுங்கிக் கொள்வதும் வந்து விழுந்து வெடித்தவுடன் எழும்பி ஓடுவதுமாக இருந்து. ஒருவாறு முறிப்புச் சந்தியை வந்து சேர்ந்த பிறகுதான் உயிரோடு இருப்பது பற்றி நம்பிக்கை வந்தது. பனைக்குள் ஊற்றி வைத்திருந்த தேனீர் உரப்பையின் கீழால் வழிந்துகொண்டிருந்தது. கிளிநொச்சியில் தேனீர்க்கடை வைத்திருந்த வயதான அம்மா எங்களுக்கு தேனீர்தந்து விரைவாக முறிப்புச் சந்தியை விட்டு புறப்படும்படி சொன்னார்.

நாங்கள் கோணாவிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம். அதுவும் பவா அன்றியின் சொந்தக்காரரின் வீடுதான். இனிப் பிரச்சினை இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சண்டை அங்குதானே நடைபெறுகிறது என்று தூரத்தில் நடப்பதுபோலத்தான் இருந்து. மரங்களின் கீழாகவும் மரங்களற்றும் அந்தக் காணி எங்கும் சனங்கள் தஞ்சமடைந்திருந்தார்கள். கோணாவிலே அகதி மயமாகியிருந்தது. மறுநாட் காலையில் நாங்கள் தங்கியிருந்த மாமரத்தின்கீழ் இருந்து தேனீர் வைத்துக்கொண்டிருந்தோம். திடீரென ஒரு செல் வந்து பக்கத்தில் விழுந்தது. பக்கத்தில் நின்ற பெரிய பாலை மரத்தில் அந்தச் செல் வந்து மோதித்தான் வெடித்தது. அந்தப்பாலை மரம் இல்லாது விட்டால் அந்தச் செல் நாங்கள் இருந்த இடத்தில்கூட வெடித்திருக்கலாம். பாலை மரத்தின் கீழாக அதனைச் சுற்றி கிட்டத்தட்ட 200 மாடுகளை யாரோ கொண்டு வந்து பட்டி கட்டி விட்டிருந்தனர். மாடுகள் பரவலாக சிதறிச் செத்துக்கிடந்தன. குருதிiயும் சதையுமாக கிடந்தது பக்கத்துக் காணி.

நாங்கள் திரும்பவும் புறப்பட்டோம். கோணாவிலுக்கு அடுத்து ஸ்கந்தபுரம் சிறு பட்டினம் இருக்கிறது அந்தப் பகுதியை நோக்கி நாங்கள் புறப்பட்டோம். சனங்கள் நிறை நிறையாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். என்னால் சமையல் பர்திரப்பொதியைச் சுமக்க முடியாதிருந்தது அதைனை பார்த்த ஒருவர் தனது சைக்கிளில் அதை வைத்து உருட்டிக்கொண்டு வந்தார். நான் சமையல் பையுடன் மெல்ல மெல்ல ஸ்கந்தபுரம் வந்து சேர்ந்தேன். சனங்கள் மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்தன. எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த அம்மாவைக் காணவில்லை. ஸ்கந்தபுரம் முருகன் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு மரத்தின் கீழ் நான் கொண்டு வந்த பையை வைத்துவிட்டு அம்மாவை தேடிக்கொண்டு திரும்பிப் போனேன். அம்மாவை தவற விட்டு விடுவேனோ என்று அஞ்சியபடி இருக்க அம்மா வந்து கொண்டிருந்தார்.

1996.07.27 அன்று தொடங்கிய சத்ஜெய இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘இறுதி யுத்தம்’ என்று தொடங்கப்பட்டதுடன் ‘சமாதானத்திற்கான போர்’ எனவும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதூங்கவினால் பிரகடனம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 70 நாட்களுக்குப் பிறகு 12 கிலோமீற்றர் பகுதியை இராணுவம் கைப்பற்றியது. புலிகள் கடுமையான எதிர்த் தாக்கதலை நடத்தியதனால் இராணுவம் முன்னேற இரண்டு மாதங்களுக்கு மேல் எடுத்து மெல்ல மெல்லவே நகர்ந்து கொண்டு தான் நடவடிக்கையில் ஈடுபட்டது. கிளிநொச்சி நகரத்தை மையப் படைத்தளமாகக் கொண்டு 60 சதுரக் கிலோமீற்றர் நிலப் பரப்பை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. 70ஆவது நாள் நாங்கள் ஸ்கந்தபுரத்தை அடைந்தபோது உருத்திரபுரம் கிராமத்தில் இருக்கிற இந்துக் கல்லூரி என்ற பள்ளியுடன் கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவம் ஒரு சதுர வடிவிலான நில ஆக்கிரமிப்பு நிலையை கொண்டிருந்தது. இராணுவம் எங்கும் மண்தடைகளை எழுப்படியிருக்க கிளிநொச்சி நகரம் மண்மேடாகிக்கொண்டிருந்தது.