| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Saturday, September 26, 2009

மண்மேடாகிற நகரம்


ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.

----------------------------------------------------------------------------------

000
கிளிநொச்சி நகரம் வெறுமையாகிக் கொண்டிருந்தது. அதனைச் சூழ இருந்த கிராமங்களும் வாடிக்கொண்டிருந்தன. கடைகளும் பள்ளிக்கூடங்களும் வீடுகளும் சனங்களுடன் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. போருக்குள் மீள உயிர்த்து பசுமையாக இருந்த நகரம் வாடிக்கொண்டிருந்தது. கிளிநொச்சியைச் சேர்ந்த மக்களும் யாழ்ப்பாண அகதிகளுமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சனங்கள் வன்னிக் காடுகளெங்கும் அலையத் தொடங்கினார்கள்.

1996.07.27 அன்று கிளிநொச்சி நகரத்தின் மீது சந்திரிகா அரசாங்கத்தின் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன. இலங்கை இராணுவத்தின் 54ஆவது டிவிசனின் 3ஆவது படைப்பிரிவு பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க தலமையில் கிளிநொச்சிமீதான தாக்குதல் தொடங்கியது. 1990ஆம் ஆண்டு கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் ஈழத்தின் இரண்டாம் கட்டப்போரில் படையினரிடமிருந்து கைப்பற்றினார்கள். அப்பொழுது கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த இராணுவம், 1985 முதலே நிலைகொண்டிருந்த ஆனையிறவுப் பகுதி நோக்கி பின்வாங்கின. ரேலிகப்டர்கள் தாக்குதல் நடத்த போய்க் கொண்டிருக்கிறது. விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. தூரத்தில் சமர் நடந்து கொண்டிருந்தது. ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பரந்தன் என்ற சிறிய நகரம் இருக்கிறது. ஆனையிறவு பரந்தன்; படைத்தளங்களிலிருந்து இராணுவம் கிளிநொச்சியை நோக்கி நகரத் தொடங்கியது.


இரத்தினபுரம் கிராமமும் ஆனந்தபுரம் கிராமமும் வெறிச் சோடிக்கொண்டிருந்தது. அநேகமாக எல்லோருமே இடம்பெயர்ந்து போய் விட்டார்கள். வீடுகள் கழற்றி ஏற்றப்பட்டும் திரும்பி வரும் நம்பிக்கையில் கதவுகள் பூட்டப்பட்டும் இருந்தன. நானும் என்னுடன் சேர்ந்து வகுப்பில் படித்த துஸியந்தியும் எங்கள் வீட்டிலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்திலிருக்கிற ஏ-9 வீதிக்கு வந்து பார்த்தோம். சனங்கள் எல்லாம் போய் முடிந்து ஏ-9 வீதியே வெறுமையாகக் கிடந்தது. அப்பொழுது மாலை இரண்டரை மணி இருக்கும். நானும் அவளும் எல்லாச் சனங்களும் இடம்பெயர்ந்து போய்விட்டதை எனது அம்மாவிடம் வந்து சொன்னோம்., இராணுவம் கிளிநொச்சிக்கு வர மாட்டான் என்று அம்மா நம்பிக்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி எனது கால்களால் எப்பொழுதும் அளந்து கொண்டிருந்த நகரம். இரத்தினபுரத்திலிருந்து கணேசபுரம் வரையான கிளிநொச்சி நகரத்தின் ஏ-9 வீதி வழியாக அப்பம்மா வீட்டுக்கு அடிக்கடி போய்க்கொண்டிருப்பேன். கடைகளின் பெயர்பலகைகளையும் அலுவலகங்களின் பெயர் பலகைகளையும் திரும்பத்திரும்ப வாசித்தபடி நடந்துகொண்டிருப்பேன். சந்திரன் பூங்கா என்ற பூங்கா ஒன்று டிப்போச்சந்தியில் (பழைய பேரூந்துத் தரிப்பிடம்) அதாவது கிளிநொச்சி மையத்தில் இருக்கிறது. பெரிய குளிர்ந்த மரங்கள் கொண்ட அந்த பூங்காவின் ஊஞ்சல்களில் ஆடிவிட்டு வருவதும் நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பின் பக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் ஆற்று வழிகளால் வருதும் என்று கால்கள் பரந்தபடி திரிந்துகொண்டிருக்கும். 1985களிலும் 1990களிலும் கிளிநொச்சி கடுமையான போருக்குள் சிக்கியிருக்கிறது. டெலிபட்டர்கள் வந்து கிளிநொச்சி நகரத்தை தாக்கிக்கொண்டிருந்தது இப்பொழுதும் சிறிய வயது ஞாபகங்களாய் இருக்கிறது. நகரத்துக்குள் செறிவாக சமர்கள் நடந்தபடியிருந்தன. 1990களில் கிளிநொச்சி விடுதலைப் புலிகள் வசமாகியபோது சிதைந்து அழிவின் எச்சமாயிருந்தது. முழுக்கடட்டிடங்களும் நகரத்துள் சிதைந்து இருந்தது. மீளவும் அதை பசுமையாக கட்டி எழுப்பியபோதுதான் மீளவும் படைகள் கிளிநொச்சி நகரத்தை குறிவைத்து சமரை பிரகடனம் செய்திருந்தது.

ஈழப்போரில் மூன்றாம் கட்டத்தில் பாரியளவிலான இடப்பெயர்வுகளை தமிழ் மக்கள் சந்திக்கத் தெடங்கினார்கள். 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் 5 லட்சம் மக்களது யாழ்ப்பாண இடப்பெயர்வு வரலாற்றின் மிகப்பெரும் துயராக நிகழ்ந்தது. அந்த மக்கள் வன்னிப் பகுதி எங்கும் பரவலாக தஞ்சமடைந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தை சந்திரிகா அரசு கைப்பற்றிய வேளை புலிகள் பாரிய பின்னடைவை சந்தித்ததாக செய்யப்பட்ட பிரச்சாரத்தை முறியடிக்கிற விதமாக மூன்று மாதத்தில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு படைத்தளத்தைக் கைப்பற்றினார்கள். பின்னடைவும் கைப்பற்றலும் இடப்பெயர்வும் மாறிமாறி நடந்துகொண்டிருந்தது.

ஆனால் கொஞ்ச நாளாக கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றப் போகிறது என்ற கதை எனது காதில் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஆனையிறவிலும் பரந்தனிலும் நிலை கொண்டிருந்த இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்ற முனையத்தொடங்கியதும் சனங்கள் இடம்பெயர்வது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கொண்டு செல்லக்கூடிய பொருட்களை எல்லாம் உரப்பை எனப்படுகிற பையில் கட்டி வைக்க வேண்டும் என்று அம்மா சொல்லிக்கொண்டிருக்க நான் எல்லாவற்றையும் பொறுக்கி உரப்பையில் கட்டி வைத்தேன். எங்கு போவது எப்படி பிழைக்கிறது என்ற குழப்பத்தில் அம்மா இருந்தார். அம்மாவின் நெருங்கிய நண்பி பவா அன்றி. அவர்தான் எங்களை மிகவும் நெருக்கடியான காலம் எல்லாவற்றிலும் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அவருடைய மகள்தான் என்னுடன் படிக்கிற துஸியந்தி. அன்றியிடம் நிறைய மாடுகள் இருக்கின்றன. அவரும் அவருடைய கணவரும்; எல்லா மாடுகளையும் சாய்த்துக்கொண்டு கிளிநொச்சிக்கு மேற்காக இருக்கிற முறிப்பு என்ற கிராமத்திற்கு போயிருந்தார்கள்.

துஸியந்தியும் நனும் அம்மாவும் எனது தங்கச்சியும் தான் எங்கள் கிராம்த்தில் இன்னும் வெளியேறாமல் இருந்தோம். விடுதலைப் புலிகள் இராணுவம் முன்னேறி வருவதை அறிவித்தபோதும் அதனை நாங்கள் கேட்கவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டது என்று சனங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள. எங்களுக்கு வெளியேறுவதற்கு வழியில்லாததாலும் மனதில்லாதாலும் நாங்கள் வெளியேறாமல் இருந்தோம். மாலை நேரமாக தாக்குதல் வேகமெடுக்கத் தொடங்கியது. எங்கள் வீடுகளுக்கு மேலால் செல்கள் போய் கனகாம்பிகை குளம் பகுதியிலும் இரணைமடுவில் விழுந்துகொண்டிருந்தது. நாங்கள் பதறத் தொடங்கி விட்டோம். கண்களில் மரண பயம் எற்பட்டது. இரவு மெல்ல வரவர அச்சம் விரியத் தொடங்கியது. யாரும் இல்லாமல் நாங்கள் வீட்டுக்குள் பதுங்கிக் இருந்தோம்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பொன்னையா தாத்தா என்கிற வயது முதிர்ந்தவர் வந்து வீட்டுக்கு முன்னால் நின்று கூப்பிட்டார். அந்தக் குரல் எங்களுக்கு பெரிய ஆறுதலாகக் கேட்டது. தான் இன்னும் போகவில்லை என்றும் தனது மகளும் வீட்டிலதான் இருக்கிறதாகவும்; நாங்களும் தனது வீட்டுக்கு வந்து எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் எங்களை தன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்றார். அவர்களது வீடு கைகளினால் மண்ணை குழைத்து செய்யப்பட்ட பெரிய சுவர்களை உடைய வீடு. இந்த சுவாரை உடைத்துக்கொண்டு செல்கள் வரமாட்டாது என்று எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். செல்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன., எங்களைக் கடந்து போகின்றன. மெல்ல விடியத் தொடங்க நாங்கள் புறப்படுவோம் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்திருக்கிறிங்கள் தானே என்று பொன்னையாதாத்தா கேட்டுக்கொண்டிருந்தார். எங்களது கொஞ்சப் பொருட்கள் எடுத்து கட்டி வைக்கப்பட்ட பைகள் வீட்டில் தயாராக இருந்தன.

நாங்கள் எங்கு போவது? எங்கு இருப்பது? என்று நான் அம்மாவை கேட்டுக்கொண்டிருந்தேன். பொன்னையா தாத்தாவிற்கு இடம் தெரியும் அவர் கூட்டிக்கொண்டு போவார் என்று அம்மா சொன்னார். ஸ்கந்தபுரத்திற்கு எல்லோரும் போவோம். அங்கு கரும்புத்தோட்டம் என்கிற அகதிமுகாம் இருக்கிறது என்றார். இரவிரவாக தூக்கம் இல்லை. செக்கனுக்கு செக்கன் செல்வந்து விழுகிறது. திடீரொன எழும்பிய பொன்னையா தாத்தா அம்மி, ஆட்டுக்கல்லு போன்ற வீட்டுப் பொருட்டகளை எல்லாம் கொண்டுபோய் அவர்களின் மண் கிணற்றுக்குள் போட்டார். எப்பொழுது மீள வருவோமோ என்ற ஏக்கத்துடன் திரும்பி வந்தால் கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கலாம் என அவர் சொல்லிக்கொண்டிருந்தார். காலையில் நேரத்துடன் ஏ-9 வீதியைக் கடந்து உதயநகர்க்குப்போய் அங்கிருந்து அம்பாள்குளம்போய் செல்வாநகர், கனபுரம், முறிப்பு என்று ஊர்களை தாண்டுவதை பொன்னையாதாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். ஆகச் சிறிய வயத்தில் அந்த வழிகளுக்கும் இடங்களுக்கும் சிலதடவைகள் போயிருந்தாலும் அவை பிடிபடாத திசைகளாகவும் மிகத்தூரத்தலிருக்கிற கிராமங்களாகவும் இருந்தன.

காலையில் புறப்பட்டோம். செல்தாக்குதல்கள் கொஞ்சம் குறைவாக இருந்தன. நான் உரப்பை ஒன்றில் கொஞ்ச சமையால் பாத்திரங்களை போட்டு கட்டி வைக்கப்பட்ட பையை எடுத்துக்கொண்டேன். அம்மா பதிவு ஆவணங்கள் கொஞ்ச உடுப்புகள் வைக்கப்ட்ட உடுப்புப் பெட்டியை எடுத்துக்கொண்டார். ஒரு கையில் அந்த உடுப்புப்பெட்டி மற்றக்கையில் தங்கச்சியையும் தூக்கிக் கொண்டு அம்மாவும் நானும் துஸியந்தியும் பொன்னையா தாத்தாவும் அவரின் மகளும் போய்க்கொண்டிருந்தோம். அப்பொழுது சமர் ஒய்ந்திருந்தது. இந்த இடைவெளியில் வேர்த்துக் களைத்துப் பசியெடுக்கவும் குறித்த கிராமங்களுக்கால் நடந்து தாக்குதல் குறைந்த அவகாசத்திற்குள் முறிப்புக்குப் போய்விட்டோம்.

பவா அன்றி எங்களுக்காக காத்துக்கொண்டு நின்றார். நேற்றுக்காலையிலயே வெளியேறியிருக்கலாம். இரவிரவாக கடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததினால் என்னவோ ஏதொ என்று பதைபதைத்துக் கொண்டிருந்ததாக அன்றி சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் எங்கு போவது என்று நினைத்துக்கொண்டிருக்க பவா அன்றி எங்களை தங்களுடன் வந்திருக்கும்படி கேட்டார். தங்கள் அம்மா வீட்டில் இருக்கலாம் என்றும் பக்கத்தில் ஒரு கொட்டில் இருக்கிறது அதில் தங்கலாம் என்றும் சொன்னா. மிகவும் நிம்மதியாக இருந்தது. எங்களைக் கூட்டிக்கொண்டுபோய் உணவு கொடுத்து இருப்பதற்கு அந்த கொட்டிலையும் தந்தார்கள்.

000
அண்ணா ஒரு கடையில் வேலைக்கு போய் நின்றிருந்தான். அவன் கடையின் பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்தக் கடை முதலாளியுடன் முதலே எங்கோ போயிருந்தான். அவன் பாதுகாப்பாக இருப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் எந்த திசையில் போயிருப்பான் என்று தெரியவில்லை. கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த சனங்கள் ஸ்கந்தபுரம், அக்கராயன் இருக்கிற மேற்க்குப் பக்கமாகவும் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு இருக்கிற கிழக்குப் பக்கமாகவும் பிரிந்து பிரிந்து போய்க் கொண்டிருந்தார்கள். அண்ணா நாங்கள் வந்த பக்கமாகவே வந்திருந்தான். ஸ்கந்தபுரத்தில் அந்த கடை மீள திறக்கப்பட்டிருந்தது. அண்ணா எங்களை தேடி கண்டு பிடித்துவிட்டான். லீவு பெற்று எங்களிடம் வந்தான். அதிஸ்ட வசமாக நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டோம். சிதறி உடைந்த எங்களுக்கு அவனது வருகை பெரிய நிம்மதியை தந்திருந்தது. அண்ணா எங்களைவிட்டு போக மறுத்து எங்களுடன் நிரந்தரமாக இருந்து கொண்டான். எங்களுக்கு அதுதான் பொருத்தமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

படைகள் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நின்றன. நாங்களும் சமீபமாகத்தான் இருந்தோம். முறிப்பு கிளிநொச்சியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. கிளிநொச்சிப் பக்கம் நோக்கி முறிப்பின் முடிவிடத்தில் கிளிநொச்சிக்கு நான்கு கிலோமீற்றர் தூரத்தில் நாங்கள் இருந்தோம். படைகள் எறியும் செல்கள் முறிப்புப் பக்கம் வருவது குறைவாக இருந்தது. கிளிநொச்சி நகரத்துடன் இரணைமடு, கனகாம்பிகை, திருவையாறு, கனகபுரம் போன்ற இடங்களில் விழுந்து கொண்டிருந்தன. படைகள் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்கதலை தாக்கிப் பிடிக்க முடியாமல் பரந்தனுக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நிலைகொண்டிருந்தபோது தாக்குதல்கள் சற்று குறைந்திருந்தன. தங்கள் பொருட்களை விட்டு வந்தவர்கள் இடையிடையே அவற்றைப்போய் எடுத்து வந்தனர்.

திருடர்களும் வீட்டில் உள்ள பொருட்களையும், தளவாடங்களையும், வீடு கடைகள் கட்டப்பட்ட சீமெந்துக் கற்களை உடைத்து எடுத்தக்கொண்டும் வந்தார்கள். துஸியந்தியின் அப்பாவும் கிளிநொச்சியில் வீட்டிற்கு போய் வந்தார். அம்மாவிடம் மிகவும் சிரமப்பட்டு; ஒருவாறு அனுமதியை வாங்கிக்கொண்டு துஸியந்தியின் அப்பாவுடன் நானும் அண்ணாவும் எங்கள் வீட்டுக்குப்போனோம்.

எங்கும் செல்கள் விழுந்து சிதைந்திருந்தன. கடைகள் செல் தாக்குதல்களினாலும் விமானத் தாக்குதல்களாலும் சிதைவடைந்திருந்தன. கிளிநொச்சி நகரம் அழிந்து பெரும் அவல முகத்துடன் இருந்தது. தன்னுடைய மக்களையும் தனது வகீகரமான தோற்றத்தையும் செழிப்பையும் அது இழந்திருந்தது. அழிவின் பெரும் சாட்சியாய் வீதிகள் எங்கும் புழுதி கிளம்பி எல்லா சுவர்களும் உடைந்து கொண்டிருந்தது. ‘சுப்பர் சொனிக்’ எனப்படும் விமானங்கள் குண்டுகளை வீசியதில் எங்கும் பெரிய கிடங்குகள் இருந்தன. வீடுகள் பாழடைந்து உடைந்து அகற்றப்பட்டு கிராமமே சிதைந்து போய்க் கிடந்தது. தென்னை மரங்கள் மாமரங்கள் காயப்பட்டு சிதைந்து கிடந்தது. எல்லாவற்றையும் பார்த்தபடி கடந்து எங்கள் வீட்டுக்குப் போனாம்.

எங்கள் வீடு சிறிய மண்ணால் கற்கள் அரிந்து கட்டப்பட்ட வீடு. தகரத்தால் செய்யப்பட்ட கதவை கம்பியால் இணைத்து பின்பக்கமாக கட்டி சின்ன ஆமைப் பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள்ளே எங்களின் கொஞ்ச உடமையாக ஒரு மேசையும் ஒரு கட்டிலும் ஒரு கதிரையும் இருந்தன. அதை யாராவது திருடி விடுவார்களோ என்ற பயத்துடன் எட்டிப்பார்த்தோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே பொருட்களும் அப்படியே இருந்தன. நான் ஒரு தண்ணீர் அள்ளும் குடத்தையும் வீட்டில் நின்ற கோழி ஒன்றை பிடித்துக்கொண்டும் அண்ணா ஒரு பெரிய வாளியையும் எடுத்துக்கொண்டும் புறப்பட்டோம். அன்று சமர்கள் ஓய்ந்திருந்தன. அன்று முறிப்புக்கு வந்து சேருவதற்கு மாலை நான்கு மணியாகிவிட்டது. உள்வீதிகளுக்கால் நடந்து போய் வந்து சேருவதற்கு ஒரு நாளே தேவைப்பட்டது. அம்மா தங்கச்சியை தூக்கி வைத்திருந்தபடி எங்களைப் பாhத்தபடி நின்றுகொண்டிருந்தார்.

தங்கச்சிக்கு முட்டை ஊட்ட வேண்டும் என்பதற்காக கஸ்டப்பட்டு ஓடித் திரிந்து பிடித்து வந்த கோழி பையை விட்டு வெளியில் எடுக்கும்போது மூச்சடங்கி செத்துப் போய்க்கிடந்தது. மிகவும் கவலையாக இருந்தது. எப்பொழுதும் எங்ளை வாட்டிக்கொண்டிருந்த வறுமை இன்னும் வதைக்கத் தொடங்கியது. பவா அன்றியின் உதவியில் ஒரு மாதிரி நாட்கள் போய்க்கொண்டிருந்தன. எந்த வருமானமும் வருவாயும் அற்று இருந்தோம். அண்ணா வரும்போது அவனது சம்பளமாக 500 ரூபாவைக் கொண்டு வந்திருந்தான். தங்கச்சிக்கு குடிப்பதற்கு மாப்பைக்கற்று வாங்க வேண்டும். இப்படி நெருக்கடிகளின் மத்தியில் இருந்துகொண்டேயிருந்தோம்.

இன்னொரு நாள் நானும் அண்ணாவும் உடுப்புக்களை எடுப்பதற்காக கிளிநொச்சிக்குப் தனியே போனோம். நாங்கள் கிளிநொச்சி நகரத்தை அண்மித்த போது எந்தச் சத்தங்களும் கேட்கவில்லை. நாங்கள் வீட்டுக்குள் நுழைய கதவு கம்பிகள் அறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தது. வீடு வெளித்துக்கிடந்தது. மேசை கட்டில் கதிரை எல்லாம் களவாடப்பட்டிருந்தது. யாரோ வாங்கித் தந்த கொம்பாஸ் ஒன்று லாச்சிக்குள் இருந்தது. எல்லாவற்றையும் களவாடக்கொடுத்த பெரும் ஏறமாற்றம் அதிர்சியைத் தந்தது. அந்த பொருட்களை எதாவது வண்டியில் ஏற்றிக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் அதற்கு பணமில்லை. கடைசியில் அதை திருடர்கள் கொண்டு போய்விட்டார்கள்.

இதைப் பற்றி யோசித்தபடி நான் திண்ணையில் இருந்தேன். இலேசாக விமானம் இரைகிற சத்தம் கேட்டது. சொற்ப மணித்துளியில் ‘சுப்பர்சொனிக்’ எனப்படுகிற குண்டுத் தாக்குதல் நடத்துகிற அப்போது பாவிக்கப்படும் அதிவேக விமானங்கள் இரண்டு வந்து கிளிநொச்சி நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து குண்டுகளைப் பொழிகிறது விமானங்கள். என்னை நிலத்தில் பதுங்கச் சொல்லி விட்டு அண்ணா விமானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். வீடு எங்கும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அன்று உயிருடன் திரும்ப முடியாது என்று நினைக்கிறேன். அம்மாவும் தங்கச்சியும் நினைவுக்கு வந்தார்கள். அம்மா சொல்லச் சொல்ல கேட்காமல் வந்ததன் விளைவுதான் என்று மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

கிளிநொச்சி நகரம் சாம்பலாகும் அளவில் விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தன. விமானங்கள் ஏற்படுத்திய பெரும் பயத்துடன் பொருட்கள் களவுபோன ஏமாற்றத்துடன் இருந்த உடுப்பக்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். இனிமேல் வீட்டுக்கு வருவதில்லை என்று முடிவும் எடுத்துக்கொண்டோம்.

000
இடம்பெயர்ந்த இடங்கள் எங்கும் ‘புதிய பேராளிகள் இணையும் இடம்’ என்று விடுதலைப்புலிகளின் பிரச்சார திரைப்படங்களும் தாக்குதல் விபரணக்காட்சிகளும் கட்டப்படும் பந்தல்களும் பிரச்சாரங்களுமாக இருந்தன. வீதியில் போகும் எல்லேரையும் மறித்து வைத்து போராளிகள் போராட்டத்தில் இணையுமாறு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அண்ணா அந்தப் பிரச்சாரத்தின்போது பேராட்டத்தில் சேர்ந்துகொண்டான். அண்ணா சேர்ந்து கொண்டது எங்களுக்கு முதலில் தெரியாது. வீடு திரும்பாத அண்ணாவுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அண்ணா வரவில்லை. அவன் இயக்கத்தில் சேர்ந்திருப்பான் என்ற முடிவுக்கு வந்து அம்மா தேடத் தொடங்கினார். பத்து வயதிலிருந்து அடிக்கடி இயக்கத்தில் சேரும் அண்ணா 15ஆவது வயதில் ஐந்தாவது தடவையாக அப்பொழுது சேர்ந்திருந்தான். அம்மா என்னையும் தங்க்சியையும் பவா அன்றியுடன் விட்டுவிட்டு அண்ணாவைத் தேடுவதற்கு மறு நாள் காலை சென்றார்.

அப்படி ஒருவர் இயக்கத்தில் சேரவில்லை என்றுதான் எங்கும் கூறப்பட்டிருந்தது. அம்மா ஒரு இடத்தில் அவன் எங்கு போயிருப்பான் என்று கேட்டதற்கு எங்காவது குளத்தில் மூழ்கிக்கூட செத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். அம்மை மனம் தகர்ந்து வீட்டுக்கு திரும்பினார். இயத்தில் சேர்பவர்களை முதலில் சேரவில்லை என்றுதான் கூறுவார்கள். பிறகு இயக்கப்பெயரையும் பேராளி குடும்ப அட்டையும் பேராளி மாவீரர் குடும்ப நலன் காப்பகத்தில் வழங்குவார்கள். முன்பு அண்ணா இயக்கத்தில் சேரும்போது அவனுக்கு வயது குறைவு என்பதனால் அவன் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான்.

வழமையாக செல்கள் வந்து விழும் சத்தம் கேட்டபடிதானிருக்கும். தீடிரென பயந்தபடி நாளாந்தம் கேட்டுக்கொண்டிருந்ததோம். அன்றிரவு செல்கள் அருகருகாக விழும் சத்தம் கேட்கத் தொடங்கின. கிளிநொச்சிப் பக்கம் போனவர்கள் யாராவது செத்திருப்பார்கள், காயப்பட்டிருப்பார்கள் என்று பிறகு செய்திகள் வந்து கொண்டிருக்கும். எப்படியும் நாள் ஒன்றுக்கு 3000 செல்களுக்கு மேலாக இராணுவம் எறிந்தபடியிருக்கும்.

அன்றும் இரவிரவாக செல் தாக்குதல் அதிகரித்துக்கொண்டிருந்தது. காலையில் முறிப்பை விட்டும் வெளியேறிவிடலாம் என பேசிக்கொண்டோம். முறிப்பிற்கு அடுத்து கோணாவில் என்ற கிராமம் இருக்கிறது அங்கு போய்விடலாம் என அன்றி சொல்லிக்கொண்டிருந்தார். விடியக்காலையில் தாக்குதல் ஒய்ந்திருந்தது. அம்மா எங்களுக்கு தேனீர் தயாரித்து தந்தார். குடிக்க கையில் எடுத்தும் திடிரென இராணுவம் செல் அடிக்கத் தொடங்கியது. செல்கள் மிக அருகில் வந்து விழுந்து கொண்டிருந்தன. கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றிக்கொண்டது. அங்கிருந்து உருத்திரபுரம், முறிப்பு என்று பரவாலாக இராணுவம் செல் அடித்துக்கொண்டிருந்தது. தேனீரை கொஞ்சமும் குடிக்காமல் அதை ஒரு பானைக்குள் ஊற்றி எடுத்துக் கொண்டு சமையல் பாத்திரங்களை அதே உரப்பiயில் போட்டுக்கொண்டு உடுபுப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு நாங்கள் வெளியேறத்தொடங்கினோம்.

அப்பொழுது செல்கள் எங்களுக்கு பக்கத்திலும் எங்களை கடந்தும் மேலாலும் விழுகின்றன. எங்களுக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் செத்து விழுந்து கொண்டிருந்தார்கள். பிணங்களை கண்டதும் அச்சமடைந்த என்னை வேறு வீதிகளால் அழைத்துக்கொண்டு அம்மா ஓடிக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னால் சைக்கிளில் போனவர் செல்பட்டு சைக்கிளுடன் பலியாகி விழுந்து கிடந்தார். விழுந்து பதுங்கிப் பதுங்கி ஒடிக்கொண்டிருந்தோம். செல் கூவும் சத்தம் கேட்டதும் விழுந்து பதுங்கிக் கொள்வதும் வந்து விழுந்து வெடித்தவுடன் எழும்பி ஓடுவதுமாக இருந்து. ஒருவாறு முறிப்புச் சந்தியை வந்து சேர்ந்த பிறகுதான் உயிரோடு இருப்பது பற்றி நம்பிக்கை வந்தது. பனைக்குள் ஊற்றி வைத்திருந்த தேனீர் உரப்பையின் கீழால் வழிந்துகொண்டிருந்தது. கிளிநொச்சியில் தேனீர்க்கடை வைத்திருந்த வயதான அம்மா எங்களுக்கு தேனீர்தந்து விரைவாக முறிப்புச் சந்தியை விட்டு புறப்படும்படி சொன்னார்.

நாங்கள் கோணாவிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம். அதுவும் பவா அன்றியின் சொந்தக்காரரின் வீடுதான். இனிப் பிரச்சினை இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சண்டை அங்குதானே நடைபெறுகிறது என்று தூரத்தில் நடப்பதுபோலத்தான் இருந்து. மரங்களின் கீழாகவும் மரங்களற்றும் அந்தக் காணி எங்கும் சனங்கள் தஞ்சமடைந்திருந்தார்கள். கோணாவிலே அகதி மயமாகியிருந்தது. மறுநாட் காலையில் நாங்கள் தங்கியிருந்த மாமரத்தின்கீழ் இருந்து தேனீர் வைத்துக்கொண்டிருந்தோம். திடீரென ஒரு செல் வந்து பக்கத்தில் விழுந்தது. பக்கத்தில் நின்ற பெரிய பாலை மரத்தில் அந்தச் செல் வந்து மோதித்தான் வெடித்தது. அந்தப்பாலை மரம் இல்லாது விட்டால் அந்தச் செல் நாங்கள் இருந்த இடத்தில்கூட வெடித்திருக்கலாம். பாலை மரத்தின் கீழாக அதனைச் சுற்றி கிட்டத்தட்ட 200 மாடுகளை யாரோ கொண்டு வந்து பட்டி கட்டி விட்டிருந்தனர். மாடுகள் பரவலாக சிதறிச் செத்துக்கிடந்தன. குருதிiயும் சதையுமாக கிடந்தது பக்கத்துக் காணி.

நாங்கள் திரும்பவும் புறப்பட்டோம். கோணாவிலுக்கு அடுத்து ஸ்கந்தபுரம் சிறு பட்டினம் இருக்கிறது அந்தப் பகுதியை நோக்கி நாங்கள் புறப்பட்டோம். சனங்கள் நிறை நிறையாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். என்னால் சமையல் பர்திரப்பொதியைச் சுமக்க முடியாதிருந்தது அதைனை பார்த்த ஒருவர் தனது சைக்கிளில் அதை வைத்து உருட்டிக்கொண்டு வந்தார். நான் சமையல் பையுடன் மெல்ல மெல்ல ஸ்கந்தபுரம் வந்து சேர்ந்தேன். சனங்கள் மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்தன. எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த அம்மாவைக் காணவில்லை. ஸ்கந்தபுரம் முருகன் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு மரத்தின் கீழ் நான் கொண்டு வந்த பையை வைத்துவிட்டு அம்மாவை தேடிக்கொண்டு திரும்பிப் போனேன். அம்மாவை தவற விட்டு விடுவேனோ என்று அஞ்சியபடி இருக்க அம்மா வந்து கொண்டிருந்தார்.

1996.07.27 அன்று தொடங்கிய சத்ஜெய இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘இறுதி யுத்தம்’ என்று தொடங்கப்பட்டதுடன் ‘சமாதானத்திற்கான போர்’ எனவும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதூங்கவினால் பிரகடனம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 70 நாட்களுக்குப் பிறகு 12 கிலோமீற்றர் பகுதியை இராணுவம் கைப்பற்றியது. புலிகள் கடுமையான எதிர்த் தாக்கதலை நடத்தியதனால் இராணுவம் முன்னேற இரண்டு மாதங்களுக்கு மேல் எடுத்து மெல்ல மெல்லவே நகர்ந்து கொண்டு தான் நடவடிக்கையில் ஈடுபட்டது. கிளிநொச்சி நகரத்தை மையப் படைத்தளமாகக் கொண்டு 60 சதுரக் கிலோமீற்றர் நிலப் பரப்பை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. 70ஆவது நாள் நாங்கள் ஸ்கந்தபுரத்தை அடைந்தபோது உருத்திரபுரம் கிராமத்தில் இருக்கிற இந்துக் கல்லூரி என்ற பள்ளியுடன் கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவம் ஒரு சதுர வடிவிலான நில ஆக்கிரமிப்பு நிலையை கொண்டிருந்தது. இராணுவம் எங்கும் மண்தடைகளை எழுப்படியிருக்க கிளிநொச்சி நகரம் மண்மேடாகிக்கொண்டிருந்தது.

1 comment:

  1. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    ReplyDelete