| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Wednesday, March 17, 2010

துப்பாக்கிகள் அலையும் இடிபாடடைந்த நகரம்

போரும் வாழ்வும் 06

ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.



பகல் அழிந்துவிட துப்பாக்கி தேடியலையும் இரவு முழுமையாக விரிந்து போயிருந்தது. இராணுவத்தால் மூடுண்ட நகரத்தில் வாழ்ந்து கொண்டு நண்பர்களின் தோழ்களில் பதுங்கியிருந்து அறைக்குள் அடங்கிய நாட்களும் கொடிய யுத்த களம் ஒன்றில் விட்டு வந்த அம்மாவும் தங்கச்சியும் அவர்களை சுற்றி விழும் மரணங்களும் என்னைச் சுற்றி நிகழும் மரணங்களும் எப்பொழுதும் என் கனவுகளைச் சிதைத்தபடி குறி பார்த்திருக்கும் துப்பாக்கியின் சொற்களும் என்று, என் வாழ்வு அச்சம் தரும் காலத்தால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கிகள் அலையும் இடிபாடடைந்த நகரம்

இராணுவத்தின் படையெடுப்புகளுக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்த நான் முதல் முதலில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருந்தேன். முகமாலையில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையிலான சோதனைச் சாவடி அமைந்திருந்தது. வடக்கு யுத்த எல்லையிருந்த முகமாலையிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் சிறியதொரு நகரமாயிருந்த பளையில் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அபாயம் சூழ்ந்திருந்த நகரமாகவே பளை எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது. பளையில் தனியாரின் கடைகள் அரச மற்றும் விடுதலைப் புலிகளின் வங்கிகள், அலுவலகங்கள் என்பன கட்டப்பட்டிருந்தன. எப்பொழுதும் கலகலப்பான நகரமாயிருந்தது. யுத்தத்தால் எப்பொழுதும் காயமடைந்த கட்டிடங்கள் எங்கும் நின்று கொண்டிருந்தன. முகமாலை நிலம் யுத்தத்தின் பெருங் காயத்திற்குள்ளாயிருந்தது. பனைமரங்கள் எல்லாமே தலையிழந்து நின்று கொண்டிருந்தன. சிதைந்து போன அந்த நிலம் போராளிகளது குருதியாலும் இராணுவத்தினரது பலியாலும் இரண்டு தரப்புகளாலும் தொடர்ந்து ஆளப்பட்டுக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தின் கதைகளை அதுநாள் வரை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆவலாயிருந்தது. அது கொண்டிருந்த வரலாற்றின் காயங்களும் துயர்களும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. மனித குலம் எதிர்கொண்டிராத துயரங்களை யாழ்ப்பாணமும் அதன் மக்களும் எதிர்கொண்டிருந்தார்கள். ஈழ மக்களின் புரதானமான - பூர்வீகமான நகரமாயும் - வாழ் நிலமாயும் யாழ்ப்பாணம் திகழ்ந்திருக்கிறது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர்கள், பிரித்தானியர்கள் போன்ற அந்நியர்கள் யாழ்ப்பாணத்தை ஒரு காலகட்டத்தில் ஆக்கிரமித்து கோட்டைகளையும் நகரங்களையும் தெருக்களையும் நிறுவி ஆண்டார்கள். யாழ்பாணத்து மக்கள் போரையும் இடப்பெயர்வுகளையும் ஆக்கிரமிப்புக்களையும் அழிவுகளையும் கொண்ட துயர் மிகுந்த காலத்தையே வரலாறாக கொண்டிருக்கிறார்கள். இலங்கை - ஈழத்திலிருந்து அந்நியர்கள் வெளியேறுவதற்கு முன்பாக அந்நியர்களது படையெடுப்புக்கள் பெரும் வரலாற்று துயர்களையும் காயங்களையும் எற்படுத்தியிருந்தன. வெள்ளைக்காரர்கள் வெளியேறிய பொழுது இலங்கை 1948இல் சுகந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து உள்நாட்டு முரண்பாடுகளும் வாழக்கைப் போராட்டமும் தொடங்கிவிட்டது.

ஈழப்போராட்டம் தொடங்கியிருந்த பொழுது எண்பதுகளில் பல எழுச்சிகள் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்தன. ஈழப்போராட்ட எழுச்சியின் களமாகவும் இயக்கமாகவும் யாழ்ப்பாணம் இருந்திருக்கிறது. பல உன்னதமான பேராளிகள் யாழ்ப்பாணத்திலிருந்து உருவாகியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் வாழ்வையும் அடையாளத்தையும் பிரதிபலிப்பதில் யாழ்ப்பாணக் குடாநாடும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. கல்வி, பண்பாடு, கலைகள், வாழ்வு முறைகள் என்பவற்றின் பொக்கிஷமாக மக்களால் என்றும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. உழைப்பு, நம்பிக்கை, எழுச்சி என்பவற்றை யாழ்ப்பாணத்து மக்கள் தங்கள் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். ஈழப்பேராட்டம் தொடங்கிய பொழுது அதற்குப் பிறகு யாழ்ப்பாணம் அச்சம் தருகிற நாட்களையே வாழ்வையே எதிர்கொண்டது. யாழ்ப்பாணத்து மக்கள் மரணத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்கு எதிராக போராளி இயக்கங்கள் எழுச்சிகொண்டன.

1948 இல் கிடைத்த சுகந்திரத்திற்குப் பிற்பட்ட அரசுகளின் வழி வந்த அப்போதைய அரசுகளும் படைகளும் உரிமைகளை மறுத்து தமிழ் மக்களை அழிக்கவும் இருப்பைச் சிதைக்கவும் பேராட்டங்களையும் குரல்களையும் முறியடிக்கவும் மிகுந்த தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இராணுவ ரீதியாக தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கின. இதற்காக மக்களுக்காக ஒரே அணியில் நின்ற இயக்கங்கள் உலகத்தின் முக்கியமாக இந்தியாவின் சதியால் பிரிந்து சிதறுண்டுபோனது. படைகளினால் எதிர்கொண்ட துன்பங்களுடன் போராளி அணிகளின் சிதைவால் - முரண்பாடுகளால் - ஏற்பட்ட விளைவுகள் அளித்த துன்பங்களையும் மக்கள் முகம் கொடுக்க நேர்ந்தது. இந்திய இராணுவ வருகையின் பொழுது பல மக்கள் பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் நெஞ்சை உலுக்கும் கோரப்படுகொலை ஒன்றை இந்தியப் படைகள் நடத்தின. வைத்தியர்கள், தாதியர்கள், நோயாளர்கள் என்று வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் படுகொலையை நிகழ்த்தியது. ஈழமெங்கும் இந்தியப் படைகள் பேரழிவுகளையும் அச்சமான வாழ்வையும் ஏற்படுத்தியபொழுது யாழ்ப்பாணமும் அதிகளவு பாதித்திருந்தது.

ஈழப் பேராட்டம் என்பது பேதங்களற்ற பல்வேறு பேராளிகளால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அனைத்து இயக்கங்களும் மக்களுக்காக துப்பாக்கிகளை ஏந்தினார்கள். சிங்கள அரசை புறக்கணித்து சோசலீச சமத்துவம் கொண்ட ஈழத்தை அமைப்போம் என்று தொடங்கிய இயக்கங்கள் பின்னர் ஏற்பட்ட உள் முரண்பாடுகளால் தமக்குள் தாமே யுத்தம் செய்தன. இயக்கங்கள் ஒன்றை ஒன்று அழித்தன. போராளிகளை போராளிகள் படுகொலை செய்தார்கள். ஈழப் பேராட்டத்தில் எல்லா இயக்கங்களினதும் பங்கு இருக்கிறது. எனினும் விடுதலைப் புலிகளது கைகள் பின்னர் ஓங்கியிருந்தன.  இந்த உள் முரண்பாடுகளில் அநேகம் கதைகள் அறியப்டாதவையாகப் போயிருக்க, பல்வேறு வாக்குமூலங்களையும் குருதி படிந்த நினைவுகளையும் கொண்டதாக இன்றும் இருக்கிறது. 90களில் ஈழத்தில் புலிகளின் பலம் ஓங்கியிருந்தது.  மற்ற இயக்கங்கள் காப்பாற்றிக் கொள்ள  இலங்கை அரசாங்கத்திடம் இணைந்து கொண்டன. அரசாங்கத்துடன் இணைந்த இயக்கங்கள் அநேகளவான மக்களால் வெறுக்கப்பட்ட போதும் சில மக்களிடம் மாற்று இயக்கங்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டுதானிருந்தன. இந்த முரண்பாடுகளும் ஈழ மக்களின் வாழ்வும் பேராட்டமும் ஏற்படுத்திய துயரங்களில் யாழ்ப்பாணம் பல அழிவுகளைச் சந்தித்திருந்தது. 1990 இல் தொடங்கிய தீவக இடப்பெயர்வு அந்த மக்களை அந்தரத்துடன் வழிகளற்று அலைய வைத்தது. கடலில் கைவிடப்பட்ட அந்த மக்கள் தத்தழித்தார்கள். படகுகளில் அராலி ஊடாக பேரவலத்துடன் யாழ் நகரத்தை வந்து சேர்ந்தார்கள்.

யாழ்ப்பாணத்தின் முக்கியமான நகரங்கள் இடங்கள் என்பன விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. காங்கேசன்துறை துறைமுகம், பருத்தித்துறை துறைமுகம், பலாலி விமானத்தளம் என்பன இராணுவத் தளங்களாக இருந்தன. முழு ஈழப்போராட்ட அணிகளும் எதிர்கொண்ட இராணுவத் தளங்களை பின்னர் விடுதலைப்புலிகள் எதிர்கொண்டார்கள். 1994 இல் சந்திரிக்கா அரசாங்கம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியைக் கொடுக்க 1995 இல் மீண்டும் போர் வெடித்தது. சந்திரிக்கா அரசு யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்ற தாக்குதல்களைத் தொடங்கிய பொழுது யாழ்ப்பாணத்து மக்கள் பெருந் துயரங்களை அனுபவித்தார்கள். உலகத்தின் மக்களை உலுக்கும் கொலைகள் நடந்தேறின. ‘நவாலிப்படுகெலை’ என்ற நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவிச் சனங்கள்மீதான விமானத்தாக்குதலில் 160 இற்கு மேற்பட்ட சனங்கள் மிகக்கோரமாக பலியாகினார்கள். ‘நந்தாவில் அம்மன்கோயில் படுகொலை’ என்ற கொக்குவிலுள்ள நந்தாவில் அம்மன் கோயிலில் தஞ்சடைந்திருந்த மக்கள்மீதான விமானத்தாக்குதலிலும் அப்பாவிகள் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டார்கள். ‘நாகர் கோவில் படுகொலை’ என்ற நாகர்கோவில் மத்திய பாடசாலை மீது 1995 செப்டம்பர் 22ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 25 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலியாகியிருந்தார்கள். இப்படி மக்களின் குடிமனைகள், மக்கள் அலுவலகங்கள், நகரங்கள், வீதிகள் என்று எல்லாவற்றையும் இலக்கு வைத்து சந்திரிக்கா அரச படைகள் நடத்திய விமானத் தாக்குதல்கள் ஷெல் தாக்குதல்களில் யாழ்ப்பாணமே குருதி படிந்த நகரமாகவும் நிலமாகவும் குடாவாகவும் காணப்பட்டது.

இந்த மரண ஏக்கம் சுமந்த வாழ்வில் மனித இனம் எதிர்கொள்ள முடியாத இடப்பெயர்வு ஏற்பட்டது. 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கப் போகிறது என்று விடுதலைப் புலிகள் ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். வலிகாமம் பிரிவிலிருந்து தென்மராட்சி வடமராட்சிப் பிரிவுகளுக்கு 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அன்றிரவு நடக்கத் தொடங்கியவர்கள் கால் வைக்க முடியாத சன நெருக்கடியாலும் சனங்களை அடக்கிக் கொள்ள முடியாத வீதிகளும் பேரவலத்திற்கு உள்ளாகியது. கைதடிப் பாலத்தை கடந்தபொழுது கடல்நீரேரியில் மக்கள் அவற்றுக்குள் தாழந்தும் மிதந்தும் பெருமழையில் நனைந்தும் பெருந்துயரத்தை அனுபவித்தார்கள். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று எல்லோருமே கால் எடுத்து வைக்க முடியாமலும் கடந்து விட முடியாமலும் தவித்தார்கள். வரும் வழியில் பலர் தொலைந்து போனார்கள். முதியவர்கள் கைவிடப்பட்டார்கள். பலர் இறந்து போனார்கள். ‘சூரியக்கதிர்’ எனப் பெயரிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை மக்களை பிரித்து வன்னிப் பெருநிலத்திற்கும் வடமராட்சிக்கும் என்று பிரித்து கெண்டு சென்றது. விடுதலைப்புலிகள் கணிசமான மக்களை தம்முடன் வன்னிக்கு நகர்த்தினார்கள். சில மக்கள், இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். வன்னியிலிருந்தும் படகுகளில் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம் ஏற்படுத்திய படுகொலைகள் அச்சமான வாழ்க்கை என்பன மக்களை திகிலடையச் செய்திருந்தன. இளைஞர்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். இளைய சமுதாயத்தை அழித்து சமுகத்தில் சோம்பலை ஏற்படுத்த இராணுவம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் கொலை நகரமாக மாறிக் கொண்டிருந்தது. இரகசியமாக அறியப்படாத வகையில் இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இப்படி துயர் படிந்த வரலாற்றைக் கண்ட யாழ்ப்பாணத்தை பார்த்துக் கொண்டு வந்தேன்.

ஏ-9 வீதியில் கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பொழுது எங்கும் பாரிய இராணுவ முகாங்களும் காவலரண்களும் என்று யாழ்ப்பாணம் இராணுவ மயமாகிக்கிடந்தது. நான் பயணித்த பேருந்தில் பெண் போராளிகள் மற்றும் ஆண் பேராளிகள் இருந்தார்கள். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போராளிகள் யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். சாவகச்சேரி, நாவற்குழி;; கைதடி என்று வரும் இடங்கள் எல்லாவற்றிலும் அழிந்த காயமடைந்த கட்டிடங்கள் நின்று கொண்டிருந்தன. சனங்களின் வீடுகள் காயப்பட்டிருந்தன. பெரும்பாலான வீடுகளில் இராணுவம் குடியிருந்தது. பல வீடுகள் மக்களின்றி வெறுமையாயிருந்தது. யாழ் நகரத்திற்கு வந்திறங்கினேன். யாழ் நரத்தின் பின் புறமாக நின்ற கட்டிடங்கள் யுத்தத்தின் பெருங்காயங்களையும் சிதைவுகளையும் வரலாற்றின் இடிபாடுகளையும் சனங்களின் சோகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து மக்களின் யுத்தத்தில் அடிபட்டுப்போன வாழ்க்கைத் துயரை வெளிப்படுத்திக் கொண்டு நின்றது. 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் வெள்ளை அடிக்கப்பட்டு காயம் மறைக்கப்பட்டிருந்தது. யாழ் நகரத்தில் ஈழப்பேராட்ட மாற்று அரசியல் அணிகளின் அலுவலகங்கள் இருந்தன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர முண்ணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற அணிகளின் அலுவலகங்கள் இராணுவப் பாதுகாப்புடன் அமைந்திருந்தன.

பல்கலைக்கழக வாழ்வு என்னை கனவுகளுடன் அழைத்துச் சென்றது. நான் புதிய சூழலில் வாழவும் புதிய அனுபவங்களை பெறவும் இடமளித்தது. இராணுவத்தின் முற்றுகையுள் எந்நேரமும் இருந்த பல்கலைக்கழகத்தில் நான் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் திணிக்கப்பட்டன. அபாயமான வலைக்குள் வந்தது போன்ற பீதி ஏற்பட்டது. எனது அணியில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தார்கள். திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி போன்ற பிற மாவட்டங்களிலிருந்து தமிழ் முஸ்லீம் மாணவர்கள் வந்திருந்தார்கள். அந்த நாட்களில்தான் நான் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். பதின் மூன்று வயதில் எட்டாம் வகுப்பிலிருந்தே அன்றாடம் எதிர் கொள்கின்ற விடயங்களை கவிதைகளைப்போலவும் நாட்குறிப்புகள்போலவும் எழுதி வைத்திருந்தேன். பல்கலைக்கழகம் வந்தவுடன் வாசிப்புப் பழக்கம் விரிந்தது. எதையும் எழுத முடியாத அது பற்றி யோசிக்க முடியாத போர்ச் சூழலில் வாழ்ந்து கொண்டிந்த நினைவுகள் எப்பொழுதும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தின் வாழ்வு அன்றாட நிகழ்வுகள் என்பன என் கவிதைகளில் பாதிப்பை ஏற்படுத்தின. முதலில் எதையோ எழுதிய பொழுதும் யாழ்;பாணத்தில் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த துப்பாக்கிகளுக்குள்ளான வாழ்வு அதை எழுத வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது.

அப்பொழுது சமாதான காலம். ஆனால் சமாதானம் தொடங்கி 3 வருடங்கள் கழிந்துபோயிருந்த நிலையில் எந்தத் தீர்வுகளும் எட்டப்படவில்லை. சமாதானம் எப்பொழுதும் வெடிக்கத் தயாராக இருக்கும் குண்டைப்போல எல்லோருக்கும் மேலே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அனைவரும் வன்முறைகளில் இறங்கத் தொடங்கினார்கள்.  விடுதலைப் புலி ஆதரவாளர்களையும் ஈழப் பேராட்ட எழுச்சியை முன்னெடுத்தவர்களையும் இராணுவம் படுகொலை செய்து கொண்டிருந்தது. இந்தப் படு கொலைக் கலாசாரம் இறுதியில் எல்லா மக்களையும் அஞ்சும் ஒரு வாழ்க்கைக்கு கொண்டு வந்தது. மக்கள் எல்லோருடைய துப்பாக்கிகளுக்கும் அஞ்சினார்கள். விடுதலைப்புலிகள் இராணுவத்தின் வாகன அணிகளை ரோந்துகளை இலக்கு வைத்து கிளைமோர்த்தாக்குதல்களை நடத்தினார்கள்.  இதற்குப் பதிலாக வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவம் ஊடுருவி பல கிளைமோர் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தது. இதில் மக்கள் பெருமளவில் பலியாகினார்கள்.

இப்படியான சூழலில் செப்டம்பர் 30 2005 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ‘பொங்குதமிழ் எழுச்சி 2005’ நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் மக்களின் விடுதலை உணர்வு நிரம்பிய எழுச்சியாக ஜனநாயகப் பேராட்டமாக ‘பொங்குதமிழ்’ உருவாக்கம் பெற்றது. இந்த பேராட்டத்தை மக்கள் கோரிக்கையை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த செம்மையுடன் நடத்தினார்கள். 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி முதலாவது பொங்குதமிழ் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றது. இராணுவத்தின் கடுமையான முற்றுகைக்குள் அச்சுறுத்தலுக்குள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அந்தப் பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள். பல்கலைக் கழகத்தை இராணுவம் சுற்றி வளைத்து முற்றுகையிட்ட பொழுதும் மக்கள் அனைவரும் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். வேலிகளாலும் மதிலாலும் ஏறி வளாகத்திற்குள் நுழைந்தார்கள். ஏதோ ஒரு வழியால் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தார்கள். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக முதலாவது பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. எழுச்சி பூர்வமான உணர்வு நிரம்பிய கலையின் ஊடாக மக்களின் அபிலாசைகளை உலகத்திற்கு பொங்குதமிழ் என்ற எழுச்சி எடுத்துக் கூறியது. முழு மக்களுக்கும் முழு ஈழத்திற்குமான விரிந்த ஆழமான எண்ணம் பொங்குதமிழில் இருந்தது.

நான் பொங்கு தமிழ் பிரசாரங்களுக்கு சென்றேன். வீடு வீடாக சென்று மக்களிடம் பொங்கு தமிழ் நிகழ்வு பற்றிய விளக்கங்களையும் சொல்லி அவர்களை அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபொழுது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு தாங்கள் அவசியம் கலந்து கொள்வோம் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை பொங்கு தமிழ் பிரசாரம் நடைபெற்றது. 30ம்திகதி குறிப்பிட்டபடி பொங்குதமிழ் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். மக்கள் தங்கள் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் கடுமையாக வெளிப்படுத்தினார்கள். யுத்தத்தை விரும்பாத மக்கள் இந்த ஜனநாயகப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்தார்கள். அன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சூழலில் கடுமையான சன நெருக்கடி காணப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் உயிரை மக்களுக்காக முன்வைத்து பொங்கு தமிழை நடத்தினார்கள். பொங்கு தமிழில் விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகள் என்றும் தலைவர் பிரபாகரன் தேசியத் தலைவர் என்றும் கோஷங்கள் முன் வைக்கப்பட்டன. பொங்குதமிழ் நிகழ்வு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது என்ற கருத்தால் சில மாற்று இயக்கங்கள் பொங்குதமிழை எதிர்த்தன.

பல்கலைக் கழகத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையிடையே விடுமுறைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். அங்கு பதற்றமற்ற இயல்பான வாழ்வு நடந்து கொண்டிருந்தது. கிளிநொச்சிக்கு போவதும் அங்கு இருப்பதுமே பாதுகாப்பானதாக இருந்தது. இராணுவமயமான வாழ்விலிருந்து வன்னிக்கு சென்றதும் சுகந்திரமான வாழ்வும் சூழலும் இருப்பதையே உணர முடிந்தது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி நான் எங்கள் மாணவர்களுடன் இராணுவத்தின் கொடுமையான தாக்குதலுக்குள் சிக்கினேன். அன்றைய தினம் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைக் நிறுத்தக் கோரி போர் நிறுத்த கண்காணிப்பகத்திற்கு கோரிக்கை ஒன்றை கொண்டு சென்றபடி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய சமூகம் மாபெரும் பேரணியில் ஈடுபட்டது. யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர்கள், துனைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். மாணவர்களின் அணியில் நானும் அடங்கியிருந்தேன். எங்களின் முன்னால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றார்கள். பல்கலைக் கழகத்திலிருந்து சென்று பரமேஸ்வராச் சந்தியை அடைந்த பொழுது எங்களை இராணுவம் திரும்பிப்போகச் சொன்னது. திரும்பாமல் நாங்கள் தொடர்ந்து சென்றபொழுது எங்களை நோக்கியும் வானத்தை நோக்கியும் நிலத்தை நோக்கியும் படைகள் துப்பாக்கிச் சூடுகளை நடத்தின. துப்பாக்கியால் மாணவர்கள் துனைவேந்தர், விரிவுரையாளர்மீது கடுமையாகக் தாக்கியபடி தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன. எல்லோரும் சிதறி ஓடினார்கள். துப்பாக்கிச் சூடுகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன. துரத்திக் கொண்டிருந்தன. மதில்களால் ஏறிக் குதித்து ஓடி ஓடி பல்கலைக் கழகத்திற்கு வந்தோம். அன்றைய நிகழ்வுகளையும் பாதுகாப்பின்மையையும் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம் காலவரையற்றபடி மூடப்பட்டது. அன்றே நாங்கள் புறப்பட்டு எங்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தோம்.

மறுநாள் 20ஆம் திகதி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து இராணுவம் அட்டகாசங்களை புரிந்தது. வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதுடன் சில விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் கைது செய்திருந்தது. பல்கலைக் கழகம்மீது இராணுவம் கடுமையான சீற்றம் கொண்டது. யாழ்குடா நாடு இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் இருந்த பொழுது யாழ் பல்கலைக்கழகம் குறிப்பாக மாணவர்கள் முன் வைத்த கேள்விகள் பொருந்திய எழுச்சி அவர்களுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இந்த நெருக்கடிகளுடன் விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றார்கள். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டபோது நிராயுதபாணியாக பேச வந்த இலங்கைக் காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டபோது மேலும் முரண்பாட்டு நிலை தீவிரம் பெற்றது.

பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் 3 மாதங்கள் வரை வீட்டிலிருக்க வேண்டி வந்தது. அப்பொழுது தமீழத் தேசியத் தொலைக் காட்சியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. முதலில் என்னை நேர்காணல் செய்வதற்காக அங்கு பணிபுரிந்த அனுஷா என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வந்தார். எனது கவிதைகள் பற்றியும் வறுமையான சூழ்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் சென்றது பற்றியும் அண்ணாவின் போராட்ட நினைவுகள் பற்றியும் அம்மாவின் தியாகங்கள் பற்றியும் அந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமீழத் தேசிய தொலைக்காட்சியில் நான் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. கல்வி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கும் பணியில் அமர்ந்தேன். அப்பொழுது யுத்த களங்களில் படப்பிடிப்புகளில் ஈடுபட்ட பேராளிகளுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. எனது முதலாவது நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அன்பழகன் என்ற பேராளி பின்னைய நாட்களில் எனக்கு நெருங்கிய தோழனாக மாறியிருந்தான். கல்வி சார்ந்த அந்த நிகழ்ச்சி எமது மாணவர்களின் கல்வி நிலவரங்களையும் நெருக்கடிகளையும் சிறுவர்கள் குழந்தைகளது துயரமான வாழ்வையும் பல இடங்களில் எனக்கு காண்பித்தது. முதன் முதலில் யாழ் பளை மத்திய கல்லூரிக்குச் சென்றிருந்தேன். யுத்தத்தால் சிதைவடைந்த அந்தப் பாடசாலை பற்றிய வரலாறு அதன் சமகால நிலவரங்கள் என்பன அடங்கிய அந்த விவரணச் சித்திரத்தை அனுஷா என்ற என் தோழி ஒருவருடன் இணைந்து தயாரித்தேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனச் சிதைவுக்குள்ளான சிறுவர்களும் அவர்களது குடும்பப் பின்னணிகளும் மனதை அதிர வைத்தன. மேலும் சில விவரணங்களையும் குறும்படங்களையும் தயாரித்திருந்தேன்.

இந்தப் பணியில் மூன்று மாதங்களை நிறைவு செய்திருந்தபோது மீண்டும் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் பல்கலைக்கழகம் தொடங்கியது. பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். வளாகம் செழிப்பிழந்து வெறுமையுடன் இருந்தது. முழு யாழ்ப்பாணமும் ஒருவிதமான சோர்வுக்கு உள்ளாகியிருந்தது. மாணவர்கள் பலர் வகுப்புக்கு திரும்பவில்லை. நிறைய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்திருந்தார்கள். முஸ்லீம் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் பல்கலைக் கழகத்திற்கு திரும்பி வரவில்லை. எங்கும் அறியாத மரணங்களே நிகழ்ந்து கொண்டிருந்தன. பெரும் அச்சமான சூழல் தொடர்ந்து கொண்டிருந்தது. பேச்சு வார்த்தைகளும் சமாதானங்களும் யுத்தத்தை வளர்க்கிற காலமாகவும் தயார்படுகிற அவகாசமாகவும் இரண்டு தரப்புகளிடமும் நடந்து கொண்டிருந்தது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நnடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசின் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ பதவி ஏற்ற நாளிலிருந்து இரண்டு தரப்புகளும் யுத்தத்தை வெளிப்படையாக வரவேற்றபடியிருந்தன. அரசாங்கம் ஏமாற்றினால் யுத்தம் வெடிக்கும் ஈழம் அமையும் என்ற விடுதலைப் புலிகளின் எச்சரிக்கைத்தனமான அறிவிப்புகளும் பயங்கரவாதிகளிடமிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்து யுத்தத்தை தொடங்கி அவர்களை அழியுங்கள் என்ற இனவாதிகளது கோஷசங்களும் அனைத்து இன மக்களையும் பதற்றத்திற்கு உள்ளாக்கின.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்பிருந்த நிலையிலிருந்து பாரிய வளர்ச்சிகளைப் பெற்றிருந்தார்கள். விமானப்படை, தாக்குதல்கள் அணிகள், யுத்த கள வாகனங்கள், ஊடகங்கள், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் என்று பல வகையில் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். வன்னியிலும் கிழக்கின் சில பகுதிகளிலும் புலிகளின் பலம் அசைக்க முடியாதபடியிருந்தது. சமாதான காலம் என்பது யுத்தின் ஓய்வுக்காலமாகவும் அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் காலமாகவும் இருந்திருக்கிறது. இரண்டு தரப்புக்களும் சமாதானத்தில் நம்பிக்கை வைக்காமல் யுத்ததின் மூலமே வெல்ல முடியும் - தீர்க்க முடியும் என்று நம்பினார்கள். புலிகளின் கோரிக்கைக்கு இணங்கக்கூடாது என்று அரசும் அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என்று விடுதலைப் புலிகளும் நினைத்தார்கள். உன்மையில் அப்படியான நிலைப்பாடே இரண்டு தரப்பிடமும் இருந்தது. ஆனால் தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. 2006ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடிய பொழுது கிழக்கில் யுத்தம் ஒப்பந்தத்தை கிழித்துக்கொண்டு வெடித்தது. சில நாட்கள் இந்த அணைக்கட்டை திறப்பதற்காக மனிதாபிமான படை நடவடிக்கை என்ற பெயரில் நான்காம் கட்ட ஈழப் போரை அரசாங்கம் தொடக்கி வைத்தது. கிழக்கிலிருந்த ஒரு சில பேராளிகளால் விளைவுகள் அறியாமல் மூடப்பட்ட போது மாவிலாறு அணைக்கான யுத்தம் வெடித்தது. இறுதியில் மாவிலாற்றை போர் நடவடிக்கையின் மூலம் இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்ற பின்னர் யுத்தம் நடத்த வேண்டும் என்ற வெறியில் இருந்தார். யார் யுத்தத்தை தொடங்குவது எங்கு தொடங்குவது என்ற மர்மம் நீடித்துக் கொண்டிருந்தது. இரண்டு தரப்பும் தங்கள் பலங்களில் கடுமையான நம்பிக்கையுடன் இருந்தன.
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம்மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்ற ஊகங்கள் வெளி வரத் தொடங்கின. என்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த சுதர்சன் என்ற தோழன் யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு வந்தான். அவன் யாழ்ப்பாணத்தில் பலாலிக்கு அருகில் உள்ள புன்னாலைக் கட்டுவன் என்ற இடத்தை சேர்ந்தவன். கிளிநொச்சியில் முறிப்பு என்ற இடத்தில் அவன் தங்கியிருந்த அவனது சகோதரியின் வீட்டுக்கு அன்றிரவு சென்ற வேளை போராளிகள் யாழ்ப்பாணம்மீது தாக்கப் போகிறார்கள் எனவும் தோல்வியடையும் இராணுவம் மக்களையும் குறிப்பாக மாணவர்களை எதுவும் செய்வார்கள் என்பதால் இங்கு வந்திருக்கிறேன் என்றும் என்னை யாழ்ப்பாணம் போக வேண்டாம் என்றும் சொன்னான். என்னுடன் அறையில் தங்கியிருந்த வவுனியாவைச் சேர்ந்த சீலன் என்ற தோழனும் முத்தையன்கட்டு முல்லைத்தீவைச் சேர்ந்த சூரி என்ற தோழனும் எனக்காக காத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு வந்திருந்தேன். நான் வந்ததும் எல்லா மாணவர்களும், போராளிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் போகிறார்களாம் என்று செய்திகள் அடிபடுகின்றன உண்மையா என்று கேட்டார்கள். பாதி மாணவர்கள் அந்தச் செய்தி அறிந்த உடனேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். யாழ்பபாணம் முழுவதும் இந்தக் கதை பரவியிருக்க வேண்டும்.

ஓகஸ்ட் 11 2006ஆம் ஆண்டு. அன்றைய தினம் மாலை ஐந்தரை மணியிருக்கும் நானும் சீலனும் பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருக்கும் உணவகம் ஒன்றுக்குள் இரவு உணவை வாங்கிக்கொண்டிருந்த பொழுது ஷெல்கள் வந்து விழும் பெரும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

நன்றி : உயிர்மை மார்ச் 2010

No comments:

Post a Comment