| உயிர்மை பனுவலில் கடந்த செப்டம்பர் மாத பனுவலிருந்து 'போரும் வாழ்வும்' கட்டுரை வெளிவந்து கொண்டிருக்கிறது | தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

Monday, January 25, 2010

கனவுக்கும் சமாதானத்துக்குமான நகரம்



போரும் வாழ்வும் 05


ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.

கனவுக்கும் சமாதானத்துக்குமான நகரம்

வெளியில் வந்த போராளி அண்ணாவை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவ முகாம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டாத சொல்லிக்கொண்டு வந்தார். அண்ணா நலமாக இருப்பதாகவும் அண்ணாவைப் பார்ப்பதற்கு புதுக்குடியிருப்புக்கு என்னை அடுத்த நாள் அழைத்துச் செல்லுவதாகவும் அங்கு நின்ற மேலும் சில பேராளிகளும் சேர்ந்துகொண்டு சொன்னார்கள். என்னை அழைத்துச் சென்ற போராளிகள் திரும்ப ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார்கள். அப்பொழுது மாலை நேரமாகியிருந்தது. அம்மா பதறியடித்துக் கொண்டு என்ன நடந்தது என்று கேட்டார். எங்கள் வீட்டில் பதற்றம் அதிகரித்தது. அம்மா அழுது கொண்டேயிருந்தார். பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வநது அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அண்ணாவுக்கு எதுவும் நடக்காது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல இரவாகியது.

அம்மாவுக்குத் தெரியாமல் எனது சிறிய வானொலிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள தெருவுக்கு வந்தேன். ‘புலிகளின் குரல்’ என்ற விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியில் ஏழு மணிக்கு இடம்nபுகிற செய்தி முடிவடைந்த பின்னர் களத்தில் வீரச்சாவடைந்தவர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும். செய்தியில் எல்லைப்பகுதிகளில் எதிர்பாராமல் நடந்த சமார்கள் பற்றித்தான் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. வீரச்சாவு அறிவித்தல் என்று தொடங்கியதும் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. ஒவ்வொரு பெயராக வாசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நீண்ட பட்டியல் வாசித்து முடிக்கப்பட்டது. பயப்பிடும்படியாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஒரு ஆறுதலாக இருந்தது. அன்று இரவு அப்படியே அடங்கியபடி கழிந்துபோயிருந்தது.

மறுநாள் 11.07.2001 அன்று எங்கள் வீட்டைத் தேடி போராளிகள் வந்தார்கள். அம்மா பதைபதைப்புடன் ஓடிச்சென்றார். போராளிகள் வீட்டைத் தேடி வந்தால் எல்லேரையும் அது பதற்றத்திற்கு உள்ளாக்கி விடும் என்பதை முன்னைய குறிப்nடிபான்றிலும் எழுதியிருக்கிறேன். வந்த போராளிகள் முதல்நாள் 10.07.2001 அன்று உங்கள் மகன் வீரமரணம் அடைந்துவிட்டார் என்று அம்மாவுக்கு சொன்னார்கள். அம்மா பேரதிர்ச்சியடைந்து புழுதியில் விழுந்து புரண்டு புரண்டு கத்திக்கொண்டிருந்தார். அம்மாவின் அழுகை எங்கள் குடியிருப்பு எங்கும் பரவிக்கொண்டிருந்தது. அண்ணாவின் இழப்பின் சோகத்தால் குடியிருப்பு உறைந்து போயிருந்தது. எங்கள் வீடு ஓவென்ற ஓலத்தால் நிரம்பிக்கிடந்தது. கனவு கனவு என்று அண்ணா அதற்காக தன்னையே கொடுத்துவிட்டான். எங்கள் வீடும் சிவப்பு மஞ்சள் துணிகளாலும் வாழை மரங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது. அண்ணா வீரமரணம் அடைந்து விட்டான் என்பதை என்னால் நம்ப முடியாதிருந்தது. முதல் வாரம் திங்கட் கிழமை எங்களுடன் இருந்தவன். என்னுடன் அடிபட்டுக் கொண்டிருந்தவன். இந்த வாரம் திங்கட் கிழமைக்கிடையில் எல்லாம் முடிந்துபோய் விட்டது. இந்த வாரம் எங்களை விட்டுப் பிரிந்து போயிருந்தான். பேச்சற்ற வெற்றுடலாக வந்திருக்கிறான். நாற்பத்தைந்து நாட்கள் நிரம்பிய அண்ணாவின் குழந்தை எதையும் அறியாது கிடந்தது. அண்ணாவின் மனைவி அழுது அழுது மயங்கிக்கொண்டிருந்தாள். அண்ணா கனவுக்காக புதைக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களுடன் புதைக்கப்பட்டான்.



அண்ணா உன்னதமான இலட்சியம் கொண்ட மாவீரனாக வாழுகிறவன். அண்ணாவைப்போல உன்னதமாக புனிதமான உணர்வுடன் போரிட்டு கல்லறைகளில் நிரப்பட்டவர்களால் எங்கள் நிலம் வாழ்;வதற்காக அவாவுடன் நிமிர்ந்திருந்தது. அண்ணா காயமடைந்திருக்கும் பொழுது அவனுக்கு தலை முடி வெட்டிய முடி திருத்தகத்தைச் சேர்ந்தவர் என்னைக் கண்டு உங்களுடன் பேச வேண்டும் என்றார். அவர் மருத்துவ முகாங்களுக்கும் போராளிகளின் முகாங்களுக்கும் சென்று போராளிகளுக்கு முடி திருத்துபவர். அண்ணா காயமடைந்திருந்தபோது அவனுக்கு தான்தான் முடி திருத்தியதாகவும் அவன் தம்பியைப் பார்க்கவேண்டும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கத்தி அழுதுகொண்டேயிருந்ததாக அவர் எனக்கு சொன்னார். அண்ணாவின் அழுகையை பார்த்து தாங்க முடியாதபோதே போராளிகள் என்னை அண்ணாவுக்கு காட்ட அழைக்க வந்தார்கள் என்றார். நான் வாசலில் வந்து கொண்டிருந்தபொழுதுதான் அண்ணாவின் உயிர் பிரிந்திருந்தாகவும் அவர் சொல்லியபோது அவனைப் பார்க்கமலே அவனுடன் பேசாமலே பிரிந்த அனுப்பிய குற்றம் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. மணியன்குளம் சந்தியில் முடி திருத்தகம் வைத்திருக்கும் அவரின் கடையிலும் அண்ணா முடி திருத்தியிருக்கிறான்.


அண்ணாவின் மரணவீட்டுக்கு வந்த எங்கள் உறவினர்கள் அதற்கு பின்னர் எங்களுடன் முழு உறவையும் துண்டித்துக்கொண்டார்கள். சில உறவினர்கள் அன்றைய நாள் வரவே இல்லை. எந்த உறவினர்களுக்காகவும் நாங்களோ அண்ணாவோ காத்திருக்கவில்லை. அவர்களது அணுமுறைகள் சொற்களை கேட்டு புன்னாகிப்போன மனதுடன் வாழ்ந்துகொண்டிருக்கையில் அவர்களது உறவுத் துண்டிப்பு குறித்தே வருகை குறித்தோ நாங்கள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அண்ணா ஒரு உன்னதமான போராளியாக இருந்து மாவீரர் அடைந்தவன் என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். சாதாரண வாழ்வை விட தியாகங்களை செய்யவும் துணிச்சல் மிக்க மனநிலையும் கொண்டவன் என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். நான் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதிருந்ததினால் என்னை மீள பரீட்சைக்;கு தோற்றும்படி அண்ணா கூறயிருந்தான். அண்ணா மரணமடைந்து நான்கு நாட்களாகியிருந்தன. பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி முடிவடைந்துவிட்டது. எனினும் அண்ணாவுக்காக பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவாவுடன் எனது பாடசாலையான கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சென்றேன். விண்ணப்படிவங்கள் எல்லாம் முமையாக பதிவு செய்து முடிவடைந்திருந்தது. அண்ணாவின் மரணம் காரணமாகவே பதிவு செய்ய முடியவில்லை என்பதனால் எனது பெயரை பதிவு செய்த பட்டியலின் இறுதியில் சொறுகி சேர்த்துக்கொண்டார்கள்.

வீட்டில் வறுமை காரணமாக அம்மா ஒரு வீட்டில் தங்கி நின்றுகொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். கிளிநொச்சி விவசாய விரிவாக்கப் பணிமனையின் பணிப்பாளர் சீதாலட்சுமி என்பவரின் வீட்டிலேயே அம்மா வேலை பார்த்தார். அம்மாவுக்கு ஆயிரம் ரூபா சம்பளமே ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டது. நான் நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கினேன். தங்கச்சியும் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் நானும் தங்கச்சியும்தான் தனியே இருந்தோம். அம்மாவைப் பிரிந்து அம்மாவின்; ஆயிரம் ரூபா பணத்தில் காலத்தை கழித்துக் கொண்டிருந்த அந்த நாட்களை மறக்க முடியவில்லை. அன்றைய பொருட்களின் விலை நிலவரத்தில் வெறும் அரிசி மடடுமே வாங்க அந்தப் பணம் போதுமாயிருந்தது. தங்கச்சி அப்பொழுது மூன்றாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவைக் கேட்டு அழுவாள். அமமாவைப் பார்க்க வேண்டும் என்று காத்திக்கொண்டிருப்பாள். அம்மா மாதத்தில் இரண்டு நாட்கள் வீட்டுக்கு வருவார். அந்த நாட்களுக்காக மிகுதி இருபத்தெட்டு நாட்களும் அவள் காத்திருப்பாள். அவள் அம்மாவைப் பிரிந்திருப்பதும் அவளது ஏக்கமும் அம்மாவுக்காக காத்திரப்பதும் என்னை கடுiயாக வாட்டிக்கொண்டிருக்கும். அவளை குளிப்பாட்டி உணவு சமைத்துக்கொடுத்து பாடசாலைக்கு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டு நான் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லுவேன். அந்த நாட்களில் இடம்பெயர்ந்து எங்கள் குடியிருப்பில் இருந்த லட்சுமியக்கா, மணியக்கா என்ற குடும்பங்கள் எங்கள் துன்பத்தை அறிந்தவர்கள். எங்களுக்கு ஆறுதல் தருபவர்கள். அவர்கள் தங்கச்சியைப் பார்த்துக் கொள்ளுவார்கள். நிறையவகையில் பல உதவிகளையும் நம்பிக்கைகளையும் தந்திருக்கிறார்கள்.


இப்படியே ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. நான் பரீட்சை எழுதி அதற்கான பெறுபேறும் வந்து விட்டது. கணித பாடத்தை புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்ததால் அந்தப் பாடத்தை படிப்பதையே நிறுத்தி விட்டு ஏனைய பாடங்களைப் படித்தேன். ஏனைய பாடங்களில் சித்தியடைந்ததினால் உயர்தர வகுப்பிற்கு செல்ல அனுமதி கிடைத்திருந்தது. எனினும் உயர்தரம் படித்துக் கொண்டு கணிதபாடத்தை மீளத் தோற்றி சித்தியடைய வேண்டும். இனி கணித்திலும் சித்தியடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் உயர்தரம் படிக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன். கிளிநொச்சியில் உள்ள எனது பாடசாலையான மத்திய கல்லூரிக்குச் சென்றே உயர்தரம் படிக்க வேணடும். கிளிநொச்சிக்கு செல்லுவதற்கான சூழலும் முழுயையாக வந்து விட்டது. இடம்பெயர்ந்து கிளிநொச்சியை விட்டு பெயர்ந்திருந்த அனைத்து மக்களும் கிளிநொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி சமாதான நகரமாகிக் கொண்டிருந்தது.


யுத்தத்தால் மிகுந்த பாதிப்புக்களை சந்தித்து நொந்து போயிருந்த தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்பினார்கள். அழிந்துபோன தேசத்தை உயிர் பெறச் செய்யவும் உயிழிப்புக்களையும் மரண அவலங்களையும் தவிர்த்துக்கொள்ளவும் அவர்கள் சமாதானத்தை விரும்பினார்கள். சமாதானம் என்றதும் எமது மக்கள் இனி யுத்தமும் அழிவும் அவலமும் அலைச்சலும் இல்லையென்று நினைத்துக் கொண்டார்கள். கிளிநொச்சி நகரமும் வன்னிப் பெருநிலமும் பெருமெடுப்பில் மீண்டு எழத்தொடங்கியது. கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேசப் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெறத் தொடங்கின. டெலிகப்படர்களில் சமாதானத்தின் தூதுவர்கள் வந்து ‘முற்றவெளி’ என்ற கிளிநொச்சி நகரத்தின் மையத்திலிருக்கிற மைதானத்தில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். வன்னி நிலமெங்கும் சருவதேச தொண்டு நிறுவனங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட வாகனங்கள் பயணம் செய்து கொண்டிருந்தன.

ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய கால்திலிருந்து சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தகளும் நடந்து வந்திருக்கின்றன. பண்டராநயக்கா செல்வநாயம் ஒப்பந்தம் டட்லி சேனநாயக்கா வெல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தகள் மிகக் குறுகிய கால்திலேயே கிழித் தெறியப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரச தலைவர்கள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளத் தவறியதுடன் ஒடுக்குமுறைகளுக்கும் இன அழிப்புகுளக்குமே தங்கள் காலங்களை செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் யாவுமே தமழி ;மக்களை அலைக்கழித்து ஏமாற்றியிருந்தன. தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொள்ளுவதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஈழப் போராட்ட அமைப்புக்கள் மீள மீள பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தன. வரலாற்றின் அணைத்து ஈழப் பேராhட்ட அமைப்புக்களும் இணைந்து கலந்து கொண்ட ‘திம்புப்பேச்சுவார்த்தை’ 1985ஆம் ஆண்டு ஜீலை 8 இல் ஆரம்பமாகி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


இந்திய அரசின் அனுசரனையுடன ஜவர்த்தன உட்பட பத்துப்பேருடன் ஈழ விடுதலைப் பேராட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பேராளிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அன்ரன் மற்றும் திலகரும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமையிலிருந்து வரதராஜப்பெருமாள் மற்றும் கேதீஸ்வரனும், ரெலோ அமைப்பிலிருந்து சாள்ஸ்அன்ரனிதாஸ் மற்றும் மோகனும், ஈரோஸ் அமைப்பிலிருந்து ராஜிசங்கர் மற்றும் ஈ. இரத்தினசபாபதியும் புளொட் அமைப்பிலிருந்து வாசுதேவா மற்றும் தருமலிங்கம் சித்தார்த்தனும் த.ஐ.வி.மு அமைப்பிலிருந்து சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தனும் கலந்து கொண்டார்கள் அனைத்து இயக்கங்களும் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பனவற்றை வலியுறுத்தியிருந்தன. முதலாவதாக நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தால் கோரிக்கைள் நிராகரிக்கப்பட்டதினால் தோல்வியில் முடிவடைந்தது. அனைத்து இயக்கங்களும் இணைந்து கொண்ட இந்தப் பேச்சுவார்த்தை வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. இதன் பிறகு 1995 ஜனவரி 3ஆம் நாள் சந்திரிகா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையாக சந்திரிகாவில் பிரகடனம் செய்யப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையும் பிறகு தோல்வியில் முடிவடைந்திருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் ஒரு தலைப்பட்சமாக விலகியதை அடுத்து சந்திரிகா அரசு அப்போது யுத்தத்தை தொடங்கியிருந்தது.

தமீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 23.02.2002 நாளிலிருந்து யுத்தம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் இந்த யுத்த நிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிரந்தரமான அமைதியை தரும் என்று நம்பினார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் வடக்கு கிழக்கில் தமது கண்காணிப்பு அலுவலகங்களை நிறுவினார்கள். சோதனைச் சாவடிகள் திறந்து மக்கள் போக்குவரத்துகளில் ஈடுபட்டார்கள். தடைசெய்யப்பட்ட பொருட்களில் அநேகமானவை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அப்பொழுது இராணுவத்தின் பகுதிகளுக்கும் புலிகளின் பகுதிகளுக்கும் இடையில் மண்டூர், பட்டிருப்பு, களுதாவெளி வள்ளத்துறை, அம்பலந்தீவு வள்ளத்துறை, மண்முனை வள்ளத்துறை, வவுணத்தீவு, கரும்பாலம், சித்தாண்டி படகுத்துறை, கிரான் பாலம், கிண்ணியடி படகுத்துறை, வாழைச்சேனை, மாங்கேணி, மகிந்தபுரம், மூதூர், உயிலங்குளம், ஓமந்தை முதலிய சோதனைச் சாவடி நிலையங்கள் திறக்கப்படடன. இறுக்கமான விதிகளுடன் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஒரு பகுதிக்குள் இருந்து மற்ற கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்படுகிற பொருட்கள் முதல் போராளிகள் இராணுவ அதிகாரிகள் செல்லுவது வரையான விதிகளையும் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டிருந்தது.

நான் உயர்தரம் படிப்பதற்காக கிளிநொச்சிக்கு திரும்பி வந்தேன். அப்பொழுது கிளிநொச்சியில் எங்களுக்கு வீடு கட்டுவதற்கும், காணி துப்புரவு செய்வதற்கும் வசதியற்றிருந்தது. எங்களுக்கு வீடற்றிருந்தது. அம்மா எங்கோ இருக்க நான் எங்கோ இருக்க தங்கச்சியையும் பிரிந்துவிட நேர்ந்தது. வறுமையாலும் வீடில்லாததாலும் பல துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. தங்கச்சியைத் தான் வைத்து பார்ப்பதாக அண்ணாவின் மரணவீட்டில் வைத்துச் சொல்லிய அம்மாவின் இரண்டாவது சகோதரி ஒரு கிழமையிலேயே தங்கச்சியை கூட்டிச்செல்லுமாறு என்னிடம் சொல்லிவிட்டார். அப்பொழுது தங்கச்சிக்கு எட்டு வயதுதான். உயர்தரம் படித்து முடிக்கும் வரையில் என்னை பார்ப்பதாக சொல்லிய அப்பாவின் சின்னம்மாவின் வீட்டிலும் பதினைந்து நாளுக்கு மேல் இருக்க முடியவில்லை. இரவு ஒன்பது மணிக்குப் பிறகு படிக்க வேண்டாம் என்ற அவரது கட்டளையிட்டதுடன் பிறகு அவரது கொடுமையான சொற்களாலும் நடவடிக்கையாலும் மனமுடைந்துபோயிருந்தும் அவராகவே என்னை தன் வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

கிளிநொச்சி திருவையாற்றில் இருக்கிற சின்னப்பெரியம்மா வீட்டிலிருந்து தங்கச்சியை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தேன். எனது சைக்களின் பின்னால் இருந்து தங்கச்சி அழுதுகொண்டேயிருந்தாள். அவள் தன்னைக் ‘குருகுலம்’ என்ற சிறுவர் இல்லத்த்தில் விட்டுவிட்டு என்னைப் படிக்கும்படி சொன்னாள். யுத்தத்தாலும் குடும்ப பிரிவுகளாலும் பிறவழிகளிலும் பெற்றோர்களை இழந்த பி;ள்ளைகள் அங்கு படித்தக் கொண்டிருந்தார்கள். பல மாணவிகள் குருகுலம் கருணாநிலையம் என்ற இல்லங்களிலிருந்து வந்து எனது வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்த நாளே தங்கச்சியை குருகுலம் சிறுவர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்தேன். தங்கச்சி மிகுந்த மென்மையானவள். எட்டு வயது என்றபோதும் நான்கு வயது மாதிரிதானிருப்பாள். அம்மா அல்லது நான் அவளுக்குப் பக்த்தில் இருக்க வேணடும். அவளை அந்த இல்லத்தில் சேர்த்துவிட்டு திரும்பும் பொழுது அழுகையே எனக்குப் பீறிட்டுக்கொண்டிருந்தது. நானும் அப்பாவின் சின்னம்மா வீட்டிலிருந்து வெளியேறி ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரின் வீட்டிலிருந்து படிக்கத் தொடங்கினேன். அம்மாவின் வயதையே உடைய அந்த ஒன்றுவிட்ட அண்ணா மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டவர். கிளிநொச்சியில் இராணுவம் நிலைகொண்டிருந்தபோது வீட்டிற்கு வரும்பொழுது அவர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதை முன்னைய குறிப்பொன்றில் எழுதியிருந்தேன். கோணேஸ்வரி எனப்படுகிற அந்த அண்ணாவின் மனைவி என் அம்மாவைப்போலவே என்னை கவனித்து வந்தார்.

அவர்களின் வீடு கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இருக்கிறது. எங்கள் தெருவுக்கு ‘நீக்லஸ் வீதி’ என்றே பெயரிடப்பட்டிருந்தது. நீக்லஸ் என்பவர் இங்கு குறிப்பிட்ட அண்ணாவின் தம்பி. ஈழத்துக்கு வந்த இந்திய இராணுவத்தினருடன் ஏற்படட மோதலில் காயமடைந்தவேளை தமிழகத்தில் வைத்து மருத்துவம் செய்து உயிர் தப்பியிருந்தார். மிகச்சிறிய வயது ஞாபகங்களாக அவர் களவாக வீட்டுக்கு வந்து செல்லுவது இப்பொழுதும் இருக்கிறது. காலையில் எங்கள் ஊரிலுள்ள இளைஞர்களை எல்லாம் இந்திய இராணுவம் வரிசையாக அழைத்துச் செல்லும். இரவுகளில் இந்திய இராணுவம் போராளிகளை மோப்பம் படித்தபடி அலைந்து கொண்டிருக்கும். இரவு மிகுந்த அச்சம் தருவதாகவே இருக்கும். யாரும் வெளியில் வருவதில்லை. பெரியம்மாவும் அம்மாவும் அவரை பக்கத்திலிருக்கிற காட்டு ஆறு ஒன்றுக்குள் வைத்தே பார்ப்பார்கள். என்னில் மிகுந்த பிரியம் கொண்டவர். சில நாட்களிலேயே இந்திய இராணுவத்தினருடன் ஏற்பட்ட மற்றுமொரு சமரில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார். அவரது வீரமரணத்தால் பெரியம்மா மிகவும் மனமுடைந்துபோய் பின்னர் இறந்துபோயிருந்தார்.

பாதைகள் திறக்கப்பட்டு வி;ட்டன. மிக நீண்டகாலமாக பூட்டப்பட்டிருந்த ஏ-9 வீதி திறக்கப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சனங்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு போகத் தொடங்கினார்கள். யாழ்பபாணத்திற்கான தரை வழிப் பாதையான ஏ-9வீதி பன்னிரண்டு வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது. யுத்தம் மூளுகிற காலங்களிலும் உக்கிரமடைகிற காலங்களிலும் இந்தப் பாதை மூடப்பட்டிருப்பதுடன் ஏ-9 வீதி முழுமையாக சனங்களால் பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது. போன போன இடங்களுக்குள் சிக்கிய பகுதிகளுக்குள் முடங்க வேண்டியதுதான். தொடர்புகள் பயணங்கள் நடைபெறுவதில்லை. கடல் வழியாக கிளிhலி போன்ற ஆபத்தான பயணங்கள் இடையில் நடந்திருக்கின்றன. அப்பொழுது இலங்கை கடற்படையினரால் கடலில் வைத்து பல நூற்றுக்கணக்கான மக்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பு கண்டி என்று ஏனைய பகுதிகளுக்குமான பேருந்துகளும் கஜஸ் வாகனங்களும் என்று எப்பொழுதும் ஏ-9 வீதி கலகலப்பாகவே இருந்தது. யுத்தத்தால் முற்றாக சிதைத்து நொருக்கிய வீதி புனரமைக்கப்பட்டு வாகனங்களால் நிரம்பிக்கிடந்தது. படிப்பபடியாக கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருந்தன. கிளிநொச்சி நகரம் வசீகரமான தோற்றத்தைப் பெற்றுக் கொண்டிருந்தது. கிளிநொச்சி நகரத்தை மக்களும் பேராளிகளும் இணைந்து அதிசயிக்கிற வித்தில் கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. சமாதானம் யுத்தத்தால் சிதைந்த நகரத்தை புனரமைத்துக் கொண்டிருந்தது. தெருக்கள் அழகாயின. வயல்களும் தோட்டங்களும் குளிர்ச்சியுடன் உயிர்;பெற்றன. வீடுகள் அழகாக எழும்பி உயர்ந்து கொண்டிருந்தன.

கிளிநொச்சி சமாதான நகரமாயும் ஈழக்கனவின் தலைநகரமாயும் உலகத்தின் கவனத்தைப்பெற்றது. கிளிநொச்சியை தங்கள் இராஜதந்திர நகரம் என்று புலிகள் சொன்னார்கள். சமாதானத் தூதுவர்கள் எப்பொழுதும் கிளிநொச்சிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் நடக்கத் தொடங்கின. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முதலாவது பேச்சுவாhத்தை நேர்வேயின் அனுசரணையுடன் தாய்லாந்தில் 2002 செப்டெம்பர் 16 முதல் 18 வரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் தரப்பில் அன்ரன் பாலசிங்கம் தலமையில் விஸ்வலிங்கம் உருத்திரக்குமார், ஜெ. மகேஸ்வரன் , அடேல் பாலசிங்கம் முதலியவர்களும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜி.எல் பீரிஸ் தலமையில் மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா முதலியவர்களும் கலந்து கொண்டார்கள்.

இங்கு கண்ணிவெடிகளை அகற்றுவது பற்றியும் உள்நாட்டு அகதிகளை மீளக் குடியித்துவது பற்றியும் பேசப்பட்டது. பேச்சுவார்த்தையில் நோர்வே நாட்டைச் சேர்ந்த விடார் எல்கீசன், யோன் வெஸ்ட்பேக், எரிக் சொல்யேம் முதலியவர்கள் நடுவு நிலையாளர்களாக பங்கு வகித்தார்கள். அடுத்த கட்டப் பேச்சு வார்த்தைகள் அக்டோபர் 31 முதல் செம்படம்பர் 03 வரை தாய்லாந்தின் நாக்ரோன் பத்தொம் நகரில் நடைபெற்றது. இதில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தளபதி கருணாம்மான் எனப்படும் முரளிதரனும் விடுதலைப்புலிகள் சார்பில் கலந்து கொண்டார்கள். அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயின் ஒஸ்லோ நகரில் 2002 டிசம்பர் 2 முதல் 5 வரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தப் பேசப்பட்டன.

தொடர்ந்து நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்திலும் ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை ஜோமனியிலும் ஆறாம் சுற்றுப் பேச்சு வார்த்தை யப்பானிலும் நடைபெற்றது. பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஈழப் போராட்டத்தை நசுக்கவே சமாதானத்தை பயன்படுத்துகிறது என்று அவர்கள் கருதினார்கள். பேச்சு வார்த்தைக் காலத்தில் தங்கள் ஆயுத ஆட்பலங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டிருந்தார்கள். பேச்சு வார்த்தைகள் ஒவ்வொரு சுற்றுக்களாக நடந்து 2005 அளவில் முறிவுகள் ஏற்படத்தொடங்கின. இரண்டு தரப்புக்களும் நம்பிக்கையை இழந்து யுத்தத்தில் நம்பிக்கையை வைத்தபடி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

நான் எனது படிப்பிற்காக தனியான கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டு தனியே இருந்து படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் அதிகூடிய புள்ளிகள் எனக்கே கிடைத்துக் கொண்டிருந்தன. பாடசாலையில் எனக்கு அனைவரது ஒத்துழைப்பும் கிடைத்தது. எனது வறுமை நிலவரம் தெரிந்ததில் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர் எனது மாணவர்கள் என்று அனைவரும் என்மீது அன்பு செலுத்தி கல்வியில் முன்னேற ஒத்துழைத்தார்கள். காலையில் படித்துவிட்டு ஒவ்வொரு நாளும் பாண்துண்டுகளை சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளிக்கூடம் செல்லுவேன். தாமதமாக வந்தாலும் எனக்காக வகுப்பே காத்துக்கொண்டிருக்கும். கவிதை, கட்டுரை போன்ற பேட்டிகளிலும் பங்கு பற்றி வென்று வருவது பாடசாலையினருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருந்தது.


இந்தக் காலத்தில் எனக்கு என் பாடசாலையில் கல்வி கற்பித்த சசிந்தா இராஜநாயகம் என்ற ஆசிரியர் நம்பிக்கையையும் தந்து சரியான கல்வியை கற்கிற வழிகளையும் காட்டியிருந்தார். உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறபோது நான் சாதாரணதரத்தில் சித்தியெய்த வேண்டியிருந்த கணிதபாடத்திற்காக பரீட்சையை எழுதியருந்தேன். கணிதபாடம் எனக்கு பிடிபடாமல் இருந்தபோது கிளிநொச்சி உருத்திரபுரத்தில் உள்ள கேதீஸ் என்ற ஆசிரியரிடம், கிளிநொச்சியிலிருந்து எட்டுக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று படித்து வந்து கொண்டிருந்தேன். காலையிலும் மாலையிலும் ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையும் அவருடைய வகுப்பிற்கு சைக்கிளில் மிதித்து சென்று வருவேன். கணிதபாடத்தில் மிகுந்த பரீட்சியமும் தெளிவும் ஏற்பட்டது. கணிதபாடத்தின் பெறுபேறு வந்தது. எனக்கு அதிசிறப்புப் பெறபேறான ‘ஏ’ பெறுபேறு கிடைத்திருந்தது.


நான் உயர்தரம் படித்து முடித்து பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தேன். 2004 ஏப்ரல். இந்த நாட்களில்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்குத் தளபதி கருணா அம்மான் பிரிந்து சென்றார். ஈழ மக்கள் நேசித்த தளபதிகளில் கருணாவும் ஒருவர். அவரது பிரிவு நடவடிக்கை ஈழ மக்களை கடுமையாக பாதித்திருந்தது. வன்னியில் நடந்த பல சமர்களின் வெற்றிக்கு தளபதி கருணாவின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அவரது பிரிவால் விடுதலைப்புலிகளின் இராணுவபலத்தில் ஒரு பகுதி இல்லாமலே போயிருந்தது. கருணாவின் பிரிவு தமது பலத்தை பாதிக்கும் என்று அறிந்தபொழுதும் கருணாவுக்கும் தமது இயக்கத்திற்கும் இனி தொடர்புகள் இல்லை என்று விடுதலைப்புலிகள் சொன்னார்கள். கருணாவுடன் பேசி தொடர்ந்து அவரை இயத்தில் வைத்திருக்கலாம் என்றே மக்கள் அப்பொழுது கூறினார்கள். எல்லாம் நடந்தேறியபோதும் கருணா பிரிந்து செல்ல மாட்டார் என்று அநேகமான மக்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் கருணாவிடமிருந்து கிழக்கை மீட்க நடந்த சகோதரர்கள்மீதான யுத்தமே இன்றுவரை கிழக்கு மக்களின் மனங்களில் மாறாத வடுவாக இருக்கிறது. கிழக்கு மக்கள் எதிர்பார்த்திருக்காதபடிதான் கருணாவின் முடிவு அமைந்திருந்தது. அப்பொழுதும் கிழக்கு மக்கள் விடுதலைப்புலிகளுக்கு மிகுந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தார்கள். கிழக்கில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை முதலிய மாவட்டங்களில் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

உயதர்தரப் பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வந்தது. அதிவிசேட பெறுபேறுகளைப் பெற்று நான் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அம்மா மகிழ்ச்சியில் மிகுந்திருந்தார். தான் பட்ட கஷ்டங்கள் அகழப்போகிறது என்று அம்மா நினைத்துக்கொண்டிருந்தாள். பிரார்த்தனைகளைக் கேட்ட தனது கடவுளருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டிருந்தார். அம்மாவை போராளிகளின் குழந்தைகளை பராமரிக்கிற வேலை ஒன்றுக்காக போராளிகள் அழைத்துச் சென்றார்கள். தங்கச்சியை குருகுலம் இல்லத்திலிருந்து அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கூட்டி வந்து விட்டோம். அவள் எங்களைப் பிரிந்து மிகவும் மெலிந்து போயிருந்தாள். அடிக்கடி சந்திப்பதனால் படிப்பு குழம்பிவிடும் என்பதனால் அவளை மாதத்தில் ஒருமுறை பார்;க்கவே அனுமதிப்பார்கள். அம்மா வேலையிலிருந்ததினால் அடிக்கடி நானே சென்று அவளைப் பார்த்துவிட்டு வருவேன். அவளைப் பார்த்துவிட்டு திரும்பும் ஒவ்வொரு முறையை எங்களுடான பிரிவை அவள் எப்படித் தாங்குகிறாள் என்ற துயரத்தால் கண்ணீருடனே திரும்புவேன். நானும் அம்மாவும் தங்கச்சியும் பிரிந்திருந்து இப்பொழுது ஒன்று சேர்ந்து விட்டோம்.

நான் யாழ்ப்பாண பல்கலைக் கழகற்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கடிதம் வந்தது. 2005 பெப்ருவரி 02ஆம் நாள் எனக்கான வகுப்புக்கள் தொடங்கியிருந்தன. நான் முகமாலை வழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். சிறிய வயதில் ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனதிற்கு பிறகு அதாவது நீண்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் சென்றேன். யாழ் நகரத்திற்கு செல்லும் போது எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

 நன்றி: உயிர்மை ஜனவரி 2010

No comments:

Post a Comment